`2021 இழப்பீட்டையே இன்னும் வழங்கவில்லை; தற்போது 10 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு'

உயர்மட்டக்குழு ஆய்வு நடத்த பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
`2021 இழப்பீட்டையே இன்னும் வழங்கவில்லை; தற்போது 10 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு'
பாதிப்பை பார்வையிடும் பி.ஆர்.பாண்டியன்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ஏக்கர் உளுந்து, பயிறு, பருத்தி, எள், நிலக்கடலை பயிர்கள் பாதிப்பு குறித்து உயர்மட்ட குழு ஆய்வு நடத்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு பி.ஆர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி ஒன்றியம் வைத்தீஸ்வரன் கோயில், மருவத்தூர், பட்டவர்த்தி உள்ளிட்ட கிராமங்களில் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து பயிறு வகைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு முதல் பருவம் மாறி பெய்துவரும் மழையால் தொடர்ந்து விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பயிறு, பருத்தி, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர் வகைகள் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் ஆய்வுக் குழுவை அனுப்பி ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குவதற்கு முன்வரவேண்டும்.

விவசாயிகள் மத்தியில் பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகள் மத்தியில் பி.ஆர்.பாண்டியன்

காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க மழை பெய்வதற்கு முன்னதாகவே காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் வகைகளை ஆய்வு செய்து உள்ளனர். ஆய்வுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற பெரும் மழை பாதிப்பு குறித்து மறுஆய்வு செய்தால்தான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்ற ஆண்டு 2021-ல் பயிர், உளுந்துக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அதேபோல் 2021-22-ல் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பேரழிவைச் சந்தித்தும் இதுவரையும் இழப்பீடு குறித்த அறிவிப்புகள் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே தமிழக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.