குமரியில் புவிசார் குறியீடு பெற்ற கிராம்பு

பதப்படுத்தும் நுட்பத்தைக் கற்றுக்கொண்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
குமரியில் புவிசார் குறியீடு பெற்ற கிராம்பு
உலரவைக்கப்பட்டிருக்கும் கிராம்பு மொட்டுகள்...

புவிசார் குறியீடு பெற்ற கன்னியாகுமரி கிராம்பு மிகவும் புகழ்பெற்றது. குமரிமாவட்டத்தில் உற்பத்தியாகும் கிராம்பிற்கு உலக அளவில் பெரும் சந்தை வாய்ப்பு இருக்கிறது. இந்த கிராம்பு சாகுபடியில் பதப்படுத்தும் நுட்பங்களை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்குதல் நிகழ்வுக்காக தோவாளை வட்டாரத்தில் இரண்டு மாதங்களாக முகாமிட்டிருக்கிறார்கள். இந்த காலக் கட்டத்தில் தினந்தோறும் விவசாயிகளை சந்தித்து அவர்கள் பின்பற்றும் வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய நெல்ரகங்கள் ஆகியவற்றை அவர்களுடன் தங்கி இருந்து பயின்று வருகின்றனர். மேலும் வேளாண்மைத் துறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய யுக்திகள் மற்றும் ரகங்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்து கூறிவருகின்றனர்.

கிராம்பு நம் அன்றாட வாழ்வியலில் மிக அவசியமானவை. இதில் மருத்துவ குணங்கள் அதிகளவில் இருக்கிறது. கிராம்பின் இலை, காம்பு மற்றும் மொட்டிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி செய்ய இம்மூன்று பொருட்களையும் நன்கு உலரவைத்து பின்பு அதனை பதப்படுத்தி எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் யூஜெனோல் என்னும் மூலப்பொருள் இருக்கிறது. மருத்துவத்தில் பல் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் சமையலுக்காக இதனை சேர்த்துக்கொள்வர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கிராம்பு பற்றி அருமநல்லூரில் உள்ள ஊரக்கோணத்தில் கிராம்பு வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் மலை நடவு சங்கத்தின் பொருளாளர் அருள்தாஸ், அவ்வளாகத்தின் பொறுப்பாளர் சுபாஷ் ஆகியோர் கிராம்பினைப் பதப்படுத்துவதின் முக்கியத்துவத்தினை பற்றி விளக்கினர்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியின் தோட்டக்கலைத்துறைப் பேராசிரியர் முனைவர் ரிச்சர்டு கென்னடி முன்னிலையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகளான ஜெயஸ்ரீ, நிறைமதி, நிவேதிதா, நிவேதா, ப்ரிநிலா, ரோஷினி, யுவரஞ்சனி ஆகியோர் செய்முறை விளக்கம் அளித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.

Related Stories

No stories found.