மழையின் கருணை... மீண்டும் 50 அடியை எட்டியது மேட்டூர் அணை!

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை எட்டியுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. இதனால் தங்கள் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது என்று கூறி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா. கிருஷ்ணராஜ சாகர், கபிணி அணைகளில் நீர் இருப்பு அபரிமிதமாக இருந்தாலும் ஷட்டர்களை நீர் திறக்கமுடியாது என முரண்டு பிடிக்கிறது. தமிழகத்தின் பங்கு தண்ணீரைக்கூட கர்நாடகா தர மறுத்தாலும், வருண பகவான் கருணையினால் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக அரசு கறார் காட்டி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வராததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து அணை வறண்டது. அணையின் நீர்மட்டமும் 30 அடியாக அதளபாதாளத்தை எட்டியது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த 10ம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு அக்டோபர் 31 வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு போட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டது கர்நாடக அரசு. இந்த சூழலில் மழையின் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது மீண்டும் 50 அடியை எட்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 4,334 கன அடி என்று இருந்த தண்ணீர் வரத்து 4,496 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 50.50 அடியை எட்டியுள்ளது. அணையில் 18 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டும் திறக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in