தமிழகத்துக்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது

நவம்பர் 23ம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று நவம்பர் 23ம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார். தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது.

காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி ஒழுங்காற்று குழு அண்மையில் கூடி தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1-ந் தேதி முதல் வினாடிக்கு 2,600 கன அடி நீரை நவம்பர் 23-ந் தேதி வரை கர்நாடகா திறந்துவிட பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடி ஆலோசனை நடத்தியது.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டுக்கு நவம்பர் 23-ந் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது காவிரி மேலாண்மை ஆணையம்.

முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன், கர்நாடகாவில் இதுவரை இருந்த எந்த ஒரு அரசும் இப்படி முரண்டுபிடித்தது இல்லை. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டோம் என்று சொல்வது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. எந்த ஒரு பிடியும் கொடுக்காமல் கர்நாடகா பேசுகிறது. நானும் 10 முதல்வர்கள், நீர்வளத்துறை அமைச்சர்களை பார்த்துள்ளேன். ஆனால் சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் நீதி கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை குழுவினர் சற்று மெத்தனமாக இருக்கின்றனர் என விமர்சித்திருந்தார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

மேலும் காவிரியில் தமிழாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என கர்நாடகாவில் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் 60 நாட்களாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து, கர்நாடகா விவசாயிகளின் நலனை பாதுகாப்போம் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் மீண்டும் 2,600 கன அடிநீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in