கடலில் கலந்து வீணானது 130 டிஎம்சி நீர்: இன்றும் தொடரும் அவலம்!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர்
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர்

நதி நீர் எனும் இயற்கையின் பெரும் வரத்தைச் சேமித்து வைக்க வழிவகை செய்யாததால், கடந்த 22 நாட்களாக 130 டிஎம்சி அளவிற்கு காவிரி நீர் வீணாகக் கடலில் சென்று கலந்திருக்கிறது.

கர்நாடகத்தில் உருவாகும் காவிரி ஆறு பாய்ந்தோடி வந்து கடலில் கலப்பது தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில்தான். கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவுத் தேவையையும் பூர்த்தி செய்யும் காவிரி ஆறு, இந்த இரண்டு மாநிலங்களைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.

எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தமிழகம் நோக்கி ஓடிவந்துகொண்டிருந்த காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டும் திட்டங்களை மன்னர்கள் காலத்திலேயே தொடங்கிவிட்டார்கள் கர்நாடக மக்கள். படையெடுத்துச் சென்று அணையை உடைத்து காவிரியை மீட்டு வந்த சோழர்களின் வரலாறு தமிழகத்தில் பதிவாகியிருக்கிறது.

மைசூர் சாம்ராஜ்யமாக இருந்த காலத்தில் தொடங்கி கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளைக் கட்டி காவிரியைத் தேக்கி வைக்க ஆரம்பித்தது கர்நாடகம். அதனால் முப்போகம் விளைந்த தமிழகத்தின் காவிரி சமவெளி பகுதி இரண்டு போகம் ஆகி, அதற்குப் பிறகு தற்போது ஒருபோக சாகுபடிக்கு வந்திருக்கிறது. அதற்கும் தடை போடும் விதமாக மேகேதாட்டுவில் மேலும் ஒரு அணையைக் கட்ட திட்டங்களைத் தொடங்கியிருக்கிறது கர்நாடக அரசு.

ஆனால் தமிழகத்தில் மேட்டூரை விட்டால் தண்ணீரைத் தேக்கிவைக்க காவிரியில் அணைகள் இல்லை. அதனால் இயற்கை அன்னை பொங்கி எழுந்து மழையாகப் பொழியும்போதெல்லாம் கர்நாடகத்தின் அணைகள் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறது. அப்படி வரும்போதெல்லாம் அதைச் சேமித்து வைக்க வழி இல்லாமல் போகிறது.

இந்த வருடமும் அந்தக் கதை தொடர்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தால் கடந்த மாதம் 16-ம் தேதியே மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு காவிரியில் வரும் ஒட்டுமொத்த நீரும் அப்படியே மேட்டூரில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படுகிறது. அந்த நீர் முழுவதும் கொள்ளிடம் ஆறு வழியாகக் கடலுக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த 22 நாட்களாக அப்படி அனுப்பப்படும் நீர் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களை மூழ்கடித்தவாறு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் கொள்ளிடம் ஆறு வழியாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 1.50 லட்சம் கன அடி நீர் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இன்று காலை நிலவரப்படி மேட்டூரில் திறக்கப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கன அடியாக இருக்கிறது.

அப்படி இந்த ஆண்டு இதுவரை கடலில் வீணாகக் கலந்துள்ள நீரின் அளவு 130 டிஎம்சி என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதனை அப்படியே சேமித்து வைத்திருந்தால் அடுத்த ஆண்டுக்கான நீர் தேவை என்பது இல்லாமல் போயிருக்கும், கர்நாடகத்திடம் கையேந்த வேண்டிய அவசியமும் இருக்காது என்று வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள் விவசாயிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in