கரோனா திருவிளையாடல்: 4 டோஸ் தடுப்பூசி பெற்றவருக்கும் பாஸிட்டிவ்!

கரோனா திருவிளையாடல்: 4 டோஸ் தடுப்பூசி பெற்றவருக்கும் பாஸிட்டிவ்!

இந்தியாவில் மீண்டும் வீச்சு கண்டிருக்கும் கரோனா பரவல், பலவகையிலான அனுபவப் பாடங்களைக் கற்பித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் 4 தடுப்பூசிகள் செலுத்திய பெண்ணுக்கு கரோனா தொற்றியுள்ளது.

மத்திய பிரதேசம் இந்தூர் பகுதிக்கு, 2 வாரங்களுக்கு முன்னர் துபாயிலிருந்து 30 வயது பெண் வந்திருந்தார். உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்றவர், இதரப் பணிகளை முடித்துவிட்டு நேற்று(டிச.29) துபாய் திரும்புவதற்காக இந்தூர் விமான நிலையம் வந்தார்.

அங்கே விமானப் பயணிகளுக்கான ஆர்டி பிசிஆர் சோதனைகள் நடைபெற்றன. அதில் அப்பெண்ணுக்கு கோவிட் பாஸிடிவ் என உறுதியானது. தகவலறிந்து அந்தப் பெண் மிகவும் ஆச்சரியமடைந்தார். அவர் கூறிய தகவல்களைக் கேட்டு, விமான நிலையத்தின் மருத்துவப் பணியாளர்களும் ஆச்சரியமடைந்தனர்.

இந்த ஆண்டின் ஜனவரி -ஆகஸ்ட் மாதங்களின் இடையே அப்பெண் கரோனா தடுப்பூசிகளை 4 முறை பெற்றிருகிறார். அதாவது இருவேறு நாடுகளில் இருக்கவேண்டிய சூழலில், அவர்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், சினோபாம், ஃபைஸர் என இருவேறு தடுப்பூசி ரகங்களை தலா 2 டோஸ்கள் போட்டுக்கொண்டிருகிறார். முறையான மருத்துவ பரிந்துரையின் அடிப்படையிலேயே இவற்றை மேற்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமன்றி காலக்கிரமத்தில் முறையான கரோனா பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் இந்தூர் விமானப் பயணத்துக்கு முந்தைய தினம், கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்திருக்கிறது. அதை நம்பி விமானம் ஏற வந்திருக்கிறார். ஆனால், 24 மணி நேர இடைவெளியில் அவரை கோவிட் தொற்றியுள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம், ஒமைக்ரான் உறுதிப்படுத்தலுக்கான மாதிரிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ஒமைக்ரான் பரவலின் மத்தியில், கூடுதல் டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த விவாவதங்கள் இந்தியாவில் அதிகரித்திருக்கின்றன. ஆனால், எத்தனை டோஸ் தடுப்பூசி போட்டாலும், கவனமாக இராது போனால், கரோனா நிச்சயம் தாக்கும் என்பதற்கு இந்த இந்தூர் சம்பவமே சாட்சி.

Related Stories

No stories found.