அடுத்த உளவு செயற்கைக்கோளை ஏவிய அமெரிக்கா!

விண்ணிலிருந்து உலக நாடுகளை வேவுபார்க்கும் எந்திர ஒற்றர்கள்
அடுத்த உளவு செயற்கைக்கோளை ஏவிய அமெரிக்கா!
அமெரிக்காவின் புதிய உளவு செயற்கைக்கோளுடன் சீறிக் கிளம்பும் ஃபால்கன் 9 ராக்கெட்

விண்வெளியிலிருந்து உலக நாடுகளை உளவு பார்ப்பதன் நோக்கில், அமெரிக்கா மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, மற்றுமொரு உளவு செயற்கைக்கோளை இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணி அளவில் ஏவியது.

மூன்றாம் உலகப்போர் மூளவிருப்பதான பதட்டச் சூழலில் உலக நாடுகள் தவித்து வருகையில், வல்லரசு தேசமான அமெரிக்க தனது அடுத்த உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியுள்ளது. எதிரி நாடுகளை உளவு பார்ப்பது, மோதலில் இறங்கும் நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்வது, ஆதரவு நாட்டுக்காக போரில் இறங்குவது உள்ளிட்ட மேட்டிமை நடவடிக்கைகளின் வாயிலாக, அமெரிக்கா தனது வல்லரசு கொடியை பறக்கவிட்டு வருகிறது. சீனாவின் பொருளாதார மற்றும் ஆயுத பலத்தின் எழுச்சியால் அமெரிக்காவின் பிம்பம் சற்றே அடிவாங்கியபோதும், தனது பெரியண்ணன் இடத்தை இன்னமும் விட்டுக்கொடுக்காது சாதித்து வருகிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்த அதிகார பலத்துக்கு அனுகூலம் செய்வதற்காக, அந்நாடு தொடர்ந்து தனது உலகளாவிய உளவு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. மரபான உளவு ஊடுருவல்களும், மேற்பார்வைகளும் இக்காலத்தில் எடுபடுவதில்லை என்பதால், அனைத்து வளர்ந்த நாடுகளுமே நவீன உளவுநுட்பங்களையே சார்ந்திருக்கின்றன.

அந்த வகையில் அமெரிக்கா உளவு செயற்கைக்கோள்களை அதிகம் நம்பியிருக்கிறது. தற்போது வெடிக்கக் காத்திருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்திலும், ரஷ்யாவின் போர்த்தளவாடங்கள் உக்ரைன் எல்லைக்கு நகர்ந்து செல்வதை , ஓராண்டுக்கு முன்னரே அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்கள் கண்டறிந்து உலகுக்கு சொல்லின.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் அதன் விமானப்படை போலவே, விண்வெளிக்கு என்றும் தனிப்படையை உருவாக்கி வருகிறது. இவற்றில் கணிசமான உளவு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்றிரவு NROL-87 என்ற உளவு செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்திலிருந்து ஏவப்பட்டது.

இதுவரை இந்த NR வரிசையில் 16 உளவு செயற்கைக்கோள்களை அமெரிக்கா ஏவியுள்ளது. இவையனைத்தும் விண்ணிலிருந்தபடி, அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நாடுகளை உளவு பார்த்து, அதன் தரவுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வருகின்றன.

எலான் மஸ்கின் ’ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஃபால்கன் 9’ என்ற நவீன ராக்கெட் மூலம், புதிய உளவு செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது. மீண்டும் பயன்படுத்தத்தக்க ராக்கெட் வகையான ஃபால்கன் 9, உளவு செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் சேர்த்துவிட்டு மீண்டும் பூமிக்கே திரும்பி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in