தடுப்பூசி போடாத ஊழியர்கள் பணிநீக்கம்: கூகுள் எச்சரிக்கை

தடுப்பூசி போடாத ஊழியர்கள் பணிநீக்கம்: கூகுள் எச்சரிக்கை

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தங்கள் ஊழியர்கள், இறுதி நடவடிக்கையாக பணி நீக்கத்துக்கு ஆளாவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெருந்தொற்றுப் பரவல் காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றுதல், ஆன்லைன் கல்வி என உலகம் புதிய நிலைக்கு மாறி இருந்தது. தடுப்பூசிகள் பரவலாக மக்களை சென்றடைந்த பிறகு, அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்த ஏற்பாடு மீண்டும் தள்ளிப்போகிறது. ஒமைக்ரானால் உயிருக்கு ஆபத்தில்லை; கரோனாவின் டெல்டா அளவுக்கு தீவிரமான உடல்நல பாதிப்புகளை அது ஏற்படுத்துவதில்லை என்ற தற்போதைய தகவல்களை அடுத்து, ஓரிரு மாதங்களில் நேரடி செயல்பாடுகளுக்கு திரும்ப அலுவலகங்கள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் சர்வதேச அளவில் பெருநிறுவனமான கூகுள், 2022, ஜனவரி மத்தியில் அலுவலகம் திரும்ப தயாராகும்படி பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளது. அதற்கு முன்னதாக, ஊழியர்கள் தடுப்பூசி பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்து வருகிறது. அதில், பணியாளர்களில் கணிசமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை அல்லது போட விரும்பவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தது. ஊழியர்களை வழிக்கு கொண்டுவர பல்வேறு வழிமுறைகளையும் கூகுள் தொடங்கி உள்ளது.

முதல்கட்டமாக ஊழியர்கள் தங்களது தடுப்பூசி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரிய கூகுள் நிர்வாகம், அவைகளின் மத்தியில் மருத்துவ அல்லது மதக் காரணங்களினால் தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்தது. கூகுள் வெளியிட்டுள்ள புதிய உத்தரவுகளின்படி, எதிர்வரும் ஜன.18 முதல், தடுப்பூசி போடாதவர்களுக்கு முதலில் ஒரு மாத ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுமுறையும், அதன் பின்னர் ஊதியமற்ற 6 மாத தனிப்பட்ட விடுமுறையும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இறுதி நடவடிக்கையாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

கூகுள் போன்ற பெருநிறுவனங்களின் செயல்பாடுகள் இதர நிறுவனங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அந்த வகையில் தடுப்பூசியின் முக்கியத்துவம், அதற்கு செவிமெடுக்காத பணியாளர்களை ஒரு பெரு நிறுவனம் எதிர்கொள்ளும் விதம் என கூகுளின் அணுகுமுறைகள் இதர நிறுவனங்களின் அவதானிப்புகளுக்கு ஆளாகி உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in