சிறுமியரை வன்மமாய் சித்தரித்த கானா பாடகர்: ‘வலை’வீசிப் பிடித்த எஸ்பி

‘சரவெடி’ சரண்
‘சரவெடி’ சரண்

கானா பாடல் என்ற பெயரில் சிறுமியர் குறித்து வன்மமாகவும், ஆபாசமாகவும் பாடிய இளைஞரை, வலைதளங்களில் வலைவீசி பிடித்திருக்கிறார், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இணையத்தில் பரவிய ஒரு பாடலை முன்வைத்து, மார்கழியில் மக்களிசை குறித்து சிலர் அவதூறு கிளப்பினார்கள். விசாரணையில் அந்த பாடலுக்கும், மக்களிசை குழுவுக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்தது.

ஆனால், அவதூறுக்கு ஆளான பாடல் குறித்து, தனிப்பட்ட கண்டனங்கள் இணையவெளியில் அதிகரித்தன. பள்ளி மாணவியரைப் பாதித்த பாலியல் தொந்தரவுகள், தற்கொலைகள் என்ற பதற்றச் சூழலின் மத்தியில், இந்த கானா பாடலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்தனர். கானாவின் பெயரால் சிறுமியர் மீது வன்மமும், ஆபாசமும் பரப்பும் அந்த நபர் மீது போக்சோவின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தார்கள்.

சமூக ஊடகம் வாயிலாக பொதுமக்களிடம் தொடர்பிலிருக்கும் திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் கவனத்துக்கு, இந்த விவகாரம் சென்றது. மேற்படி நபர் குறித்து கூடுதல் தகவல் அறிந்தோர் அவற்றைப் பகிருமாறு அவர் கேட்டுக்கொண்டார். உடனடியாக ஆளாளுக்கு அறிந்த தகவலை பகிர ஆரம்பித்தனர். அப்படி கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், சரவணன் என்கிற ‘சரவெடி’ சரணின் யூட்யூப் சானல் மற்றும் அலைபேசி எண்ணை வைத்து அவரை மடக்கினார்கள்.

எஸ்பி வருண்குமார்
எஸ்பி வருண்குமார்

இதுதொடர்பாக நேற்று(டிச.23) இரவு திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் வெளியிட்ட செய்தியில், ‘இந்ச்த சம்பவம் போல குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் விதமாக வீடியோ அல்லது குறுஞ்செய்திப் பதிவுகள் வெளியானாலோ, அவை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டாலோ, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 63799 04848 என்ற பிரத்யேக எண்ணில் அழைப்பு அல்லது வாட்ஸ்அப் மூலமாக தகவல் தரலாம். புகார் தெரிவிப்போர் ரகசியம் காக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தில் தனது கவனத்துக்கு வந்த சமூகச் சீர்கேட்டுக்கு தானாக முன்வந்து விசாரணையும், காவல் துறை நடவடிக்கையும் எடுத்ததுடன், அதன் மூலம் பொதுவெளியில் நம்பிக்கையையும், காவல் துறை மீதான நல்லெண்ணத்தையும் பறைசாற்றியிருக்கும் எஸ்பி வருண்குமாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in