நெட்டிசன்களுக்கு ஷாக் தந்த மின்வாரியத் தலைவர்!

நெட்டிசன்களுக்கு ஷாக் தந்த மின்வாரியத் தலைவர்!
ராஜேஷ் லக்கானி

மின்வாரியம் எனப்படும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றுபவர் ராஜேஷ் லக்கானி. இவர் நேற்று(டிச.22) இரவு ட்விட்டரில் பதிந்த வீடியோவைப் பார்த்து மக்கள் அரண்டு போனார்கள்.

4 லட்சம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்தத் தடத்தில், மின்சாரத்தைத் துண்டிக்காது மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றும் வீடியோ ஒன்றை பெருமிதமாகப் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் ஷாக் அடித்தார்போன்று அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

நமது வீட்டு உபயோகத்துக்கான மின்சாரம் 240 வோல்ட் கொண்டிருக்கும். இதில் ஷாக் அடித்தாலே உயிரிழப்புக்கு உத்திரவாதமுண்டு. அப்படி இருக்கையில் 4 லட்சம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்தத் தடத்தில் மின்சாரத்தை துண்டிக்காது, விபரீத சாகசம் காட்டும் மின் ஊழியர்கள் உயிரோடு விளையாடலாமா, அதை வீடியோவாக பகிரலாமா என்றெல்லாம் உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சற்று சஸ்பென்ஸ் விடுத்த ராஜேஷ் லகானி, எப்பேர்பட்ட மின்சாரம் மற்றும் தீயின் மத்தியிலும் பாதுகாப்பளிக்கக் கூடிய நவீன கவச ஆடைகளை அவர்கள் அணிந்து கொண்டு பணியாற்றுவது குறித்து பின்னர் விளக்கமளித்தார். அதன் பிறகே மின்வாரியத்தின் நவீன ஏற்பாடு மற்றும் ஊழியர்களின் துணிச்சல் ஆகியவற்றுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மின் தடங்களில் இவ்வாறு ஏறி, பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்கள், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் மனித அலட்சியங்களால் உயிரை பறிகொடுத்திருக்கின்றனர். இதன் காரணமாகவே இதர அரசுத் துறைகளைவிட மின் வாரியத்தில் வாரிசு பணிகளுக்கு முக்கியத்தும் வழங்கப்படுகிறது. ராஜேஷ் லகானி குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு கவசங்கள், கடைநிலை மின் ஊழியர் வரை பயன்பாட்டுக்கு வந்தால், மின் வாரியத்தின் உயிர்ப்பலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பாகும். மேலும், பராமரிப்பு காரணங்களுக்காக மின்தடை செய்யப்படுவதும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.