பிஞ்சுகளைத் தற்கொலையில் தள்ளும் சமூகம்: மாறுவது, மாற்றுவது எப்படி?

பிஞ்சுகளைத் தற்கொலையில் தள்ளும் சமூகம்: மாறுவது, மாற்றுவது எப்படி?

அண்மையில் பள்ளிச் சிறுமி ஒருவரின் தற்கொலையில் அரசியல் புகுந்து விளையாடியது. இந்தக் களேபரத்தில், வேறுசில குழந்தைகளின் தற்கொலைகள் சமூகத்தின் கவனம் பெறாமல் போயின. குன்றத்தூரில் 6-வது படிக்கும் சிறுமி, பக்கத்து வீட்டு அக்கா ஏதோ சொன்னார் என்று தூக்கிட்டு மாய்ந்திருக்கிறார். அடுத்த நாள், திருச்சியைச் சேர்ந்த வங்கி அதிகாரியின் 8-ம் வகுப்பு படிக்கும் மகள், உடல் பருமன் தொடர்பாக யூடியூப் வீடியோக்களை அதிகம் பார்த்துவந்தவர் தூக்கிட்டு இறந்திருக்கிறார். தொடர்ந்து, பெரம்பலூர் அருகே ஆன்லைன் வகுப்பின் பாதியில், பத்தாம் வகுப்பு சிறுமி ஒருவர் கிணற்றில் குதித்து உயிரைப் போக்கியிருக்கிறார்.

இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்டோர் பலரும், தற்கொலை செய்கிற வயசா இது என்று ஆதங்கமும் வருத்தமுமாகக் கேட்கிறார்கள். தற்கொலை செய்வதற்கு என்று தனியாக வயது எதுவும் இருக்கிறதா? எந்த வயதானாலும் தற்கொலை எண்ணம் என்பது தீங்கானதே! ஆனால் பக்குவமும், அனுபவமும் வாய்த்த பெரியவர்களைவிட, அவை எதுவுமே அறியப்பெறாத குழந்தைகள் தற்கொலைகளில் இறங்குவது, அவர்கள் சார்ந்த சமூகத்தை வெகுவாய் குற்ற உணர்வுக்கு ஆளாக்கக்கூடியது. தற்கொலை எண்ணம் பிஞ்சுகளைப் பாதிக்கத் தொடங்கியிருப்பதும், ஆற்றுப்படுத்த ஆளின்றி விபரீதங்கள் அரங்கேறுவதும் மோசமான போக்கின் தொடக்கத்தை எச்சரிக்கின்றன. இதைச் சரி செய்யாவிட்டால், மீளமுடியாத சமூகக்கேடுக்கு வழி செய்தவர்களாகி விடுவோம்.

நெருக்கடி மிக்க பெருந்தொற்றுக் காலம்

பெருந்தொற்றுக் காலத்தில் கடந்த 2 வருடங்களாகவே, உலகம் முழுக்கவே மனிதர்கள் கடும் நெருக்கடியில் உழன்று வருகிறார்கள். பொருளாதாரப் பிரச்சினைகள், உயிரச்சம் ஆகியவை பெரியவர்களை அலைக்கழித்தன என்றால், நேரடி கல்வி கிடைக்காத ஆன்லைன் அழுத்தங்கள், வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டது ஆகியவை குழந்தைகளைப் பாதித்தன. முன்புபோல நெருங்கி உறவாட முடியாத சமூக விலக்கமும், இயல்பான உறவாடலையும் பாதித்திருக்கிறது. இந்த நெருக்கடி பலரையும் துரத்த, ஏற்கெனவே ஊறிப்போன பிரச்சினைகள் பூதாகரமாய் எழுந்து அவர்களை விரக்தியில் தள்ளுகின்றன. நாட்டில் ஆண்டுதோறும் நடக்கும் சாலை விபத்துகளைவிட தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தற்போது அந்தத் தற்கொலைகளின் எண்ணிக்கை கூடியிருப்பதும், அதில் முதிரா பிஞ்சுகள் இடம்பெறுவதும் புதிய துயரமாகி இருக்கிறது.

படிப்பு எனும் ஒற்றை அழுத்தம்

படிக்கும் வயதிலுள்ள குழந்தைகளின் தற்கொலை முடிவுகளில், படிப்பு சார்ந்த நெருக்கடியே முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் மனதை விசாலமாக்கி அவர்களின் அறிவை விருத்தி செய்து பக்குவப்படுத்த வேண்டிய கல்வியே, அவர்களை நெருக்கடிக்கு ஆளாக்கி முதலுக்கு மோசம் செய்கிறது. படிப்பு, வேலைவாய்ப்பு, சம்பாத்தியம் என சந்தை நெருக்கடியில் பந்தயக் குதிரைகளாக உந்தப்படும் குழந்தைகள் பெரும் அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள்.

பள்ளித் தேர்வுகளுக்கு அப்பால் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், அதில் அழிச்சாட்டியம் செய்யும் அரசியல் என பலதுமாக, அவற்றில் எதையும் உள்வாங்க இயலாத குழந்தைகளைச் சாய்க்கின்றன. உற்ற துணையாக குடும்பத்தினர் இருப்பது மட்டுமே, இந்த அழுத்தங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்ற உதவும். தங்கள் குரலைக் கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள், சாய்வதற்குத் தோள் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும்வரை, எவரும் விரக்தியின் உச்சிக்குச் செல்ல மட்டார்கள். தற்கொலை எண்ணத்துக்கும் தள்ளப்பட மாட்டார்கள்.

மனநல மருத்துவரான எஸ்.கோபி, “இளம் வயதினர் மத்தியில் தற்கொலை எண்ணம் தலைதூக்குவதற்கு, நுகர்வுக் கலாச்சாரம், உணர்வுரீதியாகப் பிரச்சினைகளை அணுகத் தெரியாதது, வழிகாட்டுதலில் உள்ள குறைபாடு, சமூக உறவாடலில் ஏற்படும் துண்டிப்பு என்று பல காரணிகள் இருக்கின்றன” என்கிறார். அவை தொடர்பான விளக்கமான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்குகிறார்.

இணையமும், பிரச்சினைகளை அணுகலும்

“இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான அதிவேக இணையம், அனைத்தையும் உடனடியாகத் துய்க்கும் மனப்பான்மையை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினரிடம் இந்தப்போக்கு விஷம்போல ஏறிவருகிறது. எந்த விஷயமும் நினைத்ததும் கைக்கு எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொள்கிறார்கள். உடனடி தீர்வு நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை உணர்ந்துகொள்ளும் பக்குவமோ, வயதோ அவர்களுக்கு இல்லாததால், அதே வேகத்தில் விரக்திக்கும் ஆளாகிறார்கள்.

மேம்போக்கான உணர்வுக் கொந்தளிப்புகளுக்கு அப்பால் அறிவுபூர்வமாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் சிந்தித்தால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். ஆனால் அதற்கான முதிர்ச்சி குழந்தைகளுக்குக் கிடையாது என்பதால், எங்கிருந்தோ தற்கொலை எண்ணம் மனதில் விழுந்ததுமே அதைச் செயல்படுத்த முயல்கிறார்கள்.

மனநல மருத்துவர் எஸ்.கோபி
மனநல மருத்துவர் எஸ்.கோபி

வழிகாட்டுதலும், சமூக உறவாடலும்

இதே இணைய பயன்பாட்டால் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும் சிறார்கள், அதன் நீட்சியாகத் தங்கள் பெற்றோர்கள், பெரியவர்கள் ஆகியோரைப் பழமையில் ஊறியவர்களாகக் கருதத் தொடங்குகிறார்கள். தங்களின் கட்டற்ற சுதந்திரத்துக்கு இவர்கள் தடையாகும்போது, உடனடியாக விரக்தியடைந்து விபரீத முடிவுகளை நோக்கி நகர்கிறார்கள்.

சமூக உறவும், மனநலனும் ஒன்றோடொன்று நெருங்கி நிற்பவை. இளம்வயதினருக்கு வெளியே செல்வது, விளையாடுவது, புதிய நபர்களைச் சந்திப்பது ஆகியவை அவசியமானவை. நிஜமான சமூகம், அதனுடனான உறவாடல், அதன் கண்ணிகளில் ஒன்றாகப் பங்கேற்பது போன்றவை நிதர்சன வாழ்க்கைக்கு அவசியமானவை. இவற்றிலிருந்து துண்டித்துக்கொண்டு சதா இணையத்தில் மேய்பவர்கள், நடைமுறையில் சிறிய பிரச்சினை முளைத்தாலும், அதை எதிர்கொள்ள திராணியின்றி தடுமாறிப் போகிறார்கள்.

வெளியே மட்டுமன்றி வீட்டுக்கு உள்ளேயும் இந்த இணையம் சமூக உறவைக் கூறுபோடுகிறது. ஒரே கூரையின்கீழ் வசிப்பவர்கள் ஆளுக்கொரு செல்போனுடன் தனித்தீவாக விலகிக் கிடப்பது, பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும். தனது பிரச்சினைக்குத் தன்னிடமும் வழியில்லாது, பிறரிடம் கேட்பதற்கும் வாய்ப்பில்லாது அவர்கள் தவித்துப்போவார்கள்.

என்ன செய்யலாம்?

குழந்தைகளின் அன்றாட உபயோகத்தில் தவிர்க்கவியலாத ஒன்றாக மாறிப்போன செல்போனை, அத்தியாவசியத் தேவைக்கு அப்பால் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பெரியவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். செல்போனுக்கு பதில் புத்தக வாசிப்புகளில் குழந்தைகளின் ஆர்வத்தை மடைமாற்றலாம். அவர்களின் விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

ஒரு பிரச்சினையை உணர்வுபூர்வமாக அணுகாது, அறிவுபூர்வமாக அணுகுவது எப்படி என்பதை முன்னின்று அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கலாம். நம்மை அலைக்கழிக்கும் விஷயங்களில் பிரச்சினைகளை அடையாளம் காண்பது எப்படி, நமக்கான உதவிக்கு உரியவர்களிடம் கேட்பது எப்படி என்பதையும் பெரியவர்கள் பழக்கலாம்.

சகலத்திலும் வெற்றி பெறுவது என்பதும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதது என்பதையும் உணர்த்த வேண்டும். வெற்றிக்கு இணையாகத் தோல்விகளிலும் அதன் அனுபவங்களில் அவர்களைப் பழக்க வேண்டும். வாழ்க்கையின் அர்த்தம் வெற்றிகளில் இல்லை; வாழ்வதில் இருக்கிறது. பிடிகொடுக்காத பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடுவதும், வாழ்க்கையில் அவசியமற்றது. எனவே, அவற்றைக் கடந்துபோகவும் கற்றுத்தர வேண்டும்.

செய்தியைக் கண்டுகொள்வோம்

தற்கொலையில் ஈடுபடுவோர் பலரும் சமூகத்துக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்வார்கள். இந்த இறுதி செய்தியைப் போலவே, தற்கொலை எண்ணம் பீடித்தது முதலே அவர்களிடமிருந்து சதா சமிக்ஞைகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். சுற்றியிருப்பவர்கள் அதைச் சரியாக அடையாளம் கண்டு உதவிக்கரம் நீட்டிவிட்டால், அந்த நபரைத் தற்கொலை அபாயத்திலிருந்து மீட்டுவிடலாம்.

தற்கொலை எண்ணத்தில் ஒருவர் பீடிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், உடனடி உபதேசங்களாக அறிந்த, வாசித்த அனைத்தையும் சொற்பொழிவாற்றி, அவரை வெறுப்பேற்றக் கூடாது. பாதிக்கப்பட்ட நபரை மனம்திறந்து பேச வாய்ப்பளித்தால் போதும். அவரது மனக்கிலேசம் இறங்கினாலே, அப்போதைக்கு ஆறுதல் அடைவார்; தானாகத் தவறான முடிவிலிருந்து விடுபட முயற்சிப்பார். அதன்பின்னரே அவரது பிரச்சினை எது என்பதை அடையாளம் காணவும், அவற்றை தீர்க்கவும் அவருக்கு உதவ முயலலாம். அவரது மன அழுத்தம் நாள்பட்டதாகத் தெரிந்தால், உளவியல் நிபுணரின் உதவியையும் நாடலாம்” என்கிறார் மனநல மருத்துவர் கோபி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in