சமீர் மற்றும் நித்தி: சர்ச்சை ஆளுமைகளின் தமிழக வருகை சொல்வதென்ன?

சமீர் மற்றும் நித்தி: சர்ச்சை ஆளுமைகளின் தமிழக வருகை சொல்வதென்ன?

அண்மைக் காலமாக தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம்பெறும் பிரபலங்கள் இருவர், தமிழகத்துக்குத் தங்கள் முகாமை மாற்றுவது பொதுவெளியில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. ஒருவருக்கொருவர் சற்றும் தொடர்பில்லாதபோதும், இவர்களின் தமிழக பிரவேசம் அதிர்வலைகளை ஏற்படுத்துவது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. ஒருவர் தமிழகத்தில் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சமீர் வான்கடே என்ற அதிகாரி; மற்றொருவர் நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஆன்மிகவாதி நித்தியானந்தா.

அதிகாரியிடமிருந்தே ஆரம்பிப்போம்...

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை போதைத் தடுப்பு வழக்கின் கீழ் கைது செய்ததில் பிரபலமானவர் சமீர் வான்கடே. மத்திய போதை தடுப்புப் பிரிவான என்சிபியின் மும்பை மண்டல இயக்குநராக இருந்த சமீர் வான்கடே, ஷாருக் மகனைக் கைது செய்ததற்காக அரசியல் சர்ச்சைகளுக்கும், தனிநபர் தாக்குதல்களுக்கும் ஆளானவர். பின்னர் ஆர்யன் கான் வழக்கை அலட்சியமாகக் கையாண்டதாக அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அதிரடியாக வருவாய்ப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

என்சிபியின் புதிய புலனாய்வுக் குழு தொடர்ந்து ஆர்யன் கான் கைது வழக்கை விசாரித்து வந்தது. சில தினங்களுக்கு முன்னர் மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன் கான் உள்ளிட்ட ஆறு பேர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கு உட்பட இதர சில குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் துறை ரீதியிலான விசாரணைகளுக்கும் சமீர் வான்கடே ஆளாகியிருக்கிறார். ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் உறுதிசெய்த சூட்டில், சமீர் வான்கடேவை தமிழ்நாட்டுக்கு மாற்றல் செய்து உத்தரவு வெளியானது.

பணியிட மாற்றலின் பின்னணி

இந்த மாற்றல் உத்தரவின் பின்னணி குறித்து பலவாறான தகவல்கள் மும்பையில் உலா வருகின்றன. சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில், தண்டனை நடவடிக்கையாகவே அவர் தமிழகத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார் என்று ஒரு தரப்பில் காரணம் கற்பிக்கிறார்கள். அப்படியெனில் தமிழகம் என்பது மத்திய அரசு அதிகாரிகளின் தண்டனைக்கான பிராந்தியமா என்ற கேள்வியும், எப்போதிருந்து மற்றும் ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்ற உப கேள்விகளும் இவற்றையொட்டி எழுகின்றன.

சமீரின் தமிழக மாற்றலுக்கு இன்னொரு தரப்பினர் முன்வைக்கும் காரணம் சற்று சுவாரசியமானது. கறார் அதிகாரியான சமீர் வான்கடேவை தமிழகத்துக்கு அனுப்புவதன் மூலம் இங்கே சில அசைன்மென்ட்களை அரங்கேற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், அதன்படியான நோக்கங்களுடன் அவரது தமிழக பிரவேசமும், செயல்பாடுகளும் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் எவரானாலும், அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்றாலும் அஞ்சாது செயல்படுவதில் சமீர் சூரர். ஆர்யன் கான் வழக்குக்கு முன்பாகவே பாலிவுட் பிரபலங்கள் முதல் மாநில முக்கியஸ்தர்கள் வரை மகாராஷ்டிரத்தில் தெறிக்க விட்டிருக்கிறார். மாநில அமைச்சர் நவாப் மாலிக் உடனான சமீர் வான்கடேவின் மோதல் இதற்கு முக்கியக் உதாரணம்.

ஆனால் போலிச் சாதி சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்ததாக நவாப் மாலிக் எழுப்பிய புகாரின் அடிப்படையில் உரிய முகாந்திரங்கள் இருப்பதால் துறை விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார் சமீர். இந்த விசாரணை சுமுகமாக முடிய, மேலிடத்தில் வழங்கப்படும் தமிழக அசைன்மென்ட்களை சிரமமேற்க சமீர் சித்தமாக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலிடத்து அழுத்தங்களுக்கு இசைந்தே, 3 வாரங்களுக்கும் மேலாக ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் சமீர் வான்கடே இழுந்தடித்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதே போன்று தமிழகத்திலும் முக்கிய அதிகார மையங்களுக்கு எதிராகக் குடைச்சல்கள், வழக்கு விசாரணைகளைத் தொடரவும் சமீர் முற்படுவார் என்றெல்லாம் மும்பை வட்டாரங்கள் படபடக்கின்றன. சமீரின் தமிழக மாறுதலில் தண்டனை அவருக்கா அல்லது குறிப்பிட்ட சிலருக்கா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும்.

நிம்மதி தொலைத்த நித்தி

தனது தமிழக வருகையை முன்வைத்து எதிர்பார்ப்பைத் தந்திருக்கும் இன்னொருவர் சுவாமி நித்தியானந்தா. பல்வேறு மாநில மாநிலங்களில் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளின் கைது அபாயத்திலிருந்து தப்பிக்கவே தலைமறைவானவர் நித்தியானந்தா. தனது சிஷ்ய கோடிகள் சிலருடன் கடல் கடந்து பறந்தவர், தீவு ஒன்றில் கைலாசா என்ற தேசத்தை நிர்மாணித்திருப்பதாக அறிவித்தார். அங்கிருந்தபடியே ஆன்லைனில் சத்சங்க கூட்டங்களை நடத்தி வழக்கமான வசூல்களைக் குவித்து வந்தவருக்கு, கரோனா காலம் எதிரானது. துரோகிகள் மற்றும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமானதில், புதிய வருவாய் தடைபட்டதுடன் கைலாசாவின் கஜானாவும் விரைந்து கரைந்தது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

எதிர்பாரா விதமாய் தீவிரமான உடல் பாதிப்புகளுக்கு ஆளான நித்தியானந்தா, சமாதி நிலைக்கான ஆத்ம பரிசோதனைகளுக்கு உடலை ஒப்பக்கொடுத்திருப்பதாகவும், விரைவில் நிரந்தமாக சமாதியை எட்டப்போவதாகவும் பரபரப்பு கிளம்பியது. முறையற்ற ’வீரிய’ மருந்துகளை அதிகம் உட்கொண்டதில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் தீவிர பாதிப்புகளுக்கு ஆளானதாகவும், தொடர்ந்து கோமாவில் விழுந்து மீண்டது வரை நேரிட்ட மோசமான அனுபவங்களும் நித்தியானந்தாவை பயமுறுத்தியிருக்கின்றன. உரிய சிகிச்சைக்கான வாய்ப்பும் கிடைக்காததால், மீண்டும் கடல்கடந்து தமிழகம் திரும்பும் முடிவுக்கு நித்தியானந்தா தள்ளப்பட்டிருக்கிறார்.

இதன் பொருட்டு நித்தி மீதான வழக்குகளின் எதிர்காலம், அதிகார மேலிடங்களின் ஆசிர்வாதம் ஆகியவை தொடர்பாக செல்வாக்கான சிஷ்யர்கள் உரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதி உபகாரமாக சில நிபந்தனைகளுக்குச் சம்மதித்ததன் பேரில் இந்தியா திரும்ப சித்தமாகியிருக்கிறார் நித்தி.

ஆன்மிக அரசியல்

பிடதி முதல் மதுரை வரை நித்தியின் சொத்துக்களைச் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்பட்டதாம். தமிழகம் திரும்பியதும் முதலில் உடல்நலனை மீட்கும் சிகிச்சைக்கே நித்தி முன்னுரிமை தருவார். அதன் பிறகு, ஆன்மிக அரசியலில் குதிக்கவும் நித்தியானந்தா ஒத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் அவரளவுக்கு இறங்கி அடிப்பதற்கு ஆன்மிக குருக்களில் ஆளில்லை. தமிழகத்தின் திராவிட மாடலை உடைக்க, நித்தியின் அதிரடி ஆன்மிக உத்திகள் உதவும் என்பது நித்திக்குக் கைமாறு செய்பவர்களின் விருப்பமாம்.

நித்தியின் தற்போதைய உடல்நிலையுடன் ஒப்பிடுகையில் அவருக்கு ஆன்மிக அரசியல் எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் கேள்விக்குறியே! மேலும் நித்தியைப் பொறுத்தவரை அவர் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர். கைலாசா முயற்சியில் நித்தியானந்தாவுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களும், உடல்நிலை மோசமானதன் பாடங்களும், வயது முதிர்வதன் அடையாளமுமாக அவர் முற்றிலும் மாறிப்போயிருக்கிறார் என்றும் சீடர்கள் கருதுகிறார்கள்.

திருவண்ணாமலையில் புதிய ஆசிரமம் நிர்மாணிப்பது, சர்வதேச அளவிலான வலைப்பின்னல் வருமானத்தை உறுதிசெய்வது, புதிய சர்ச்சைகளில் சிக்காதிருப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நித்திக்கு அணுக்கமானவர்கள் ஆழ்ந்திருக்கிறார்களாம். நித்தியுடன் ஒப்பந்தமிட்டவர்களின் உத்தரவுப்படி ஆன்மிக அரசியலில் குதிப்பாரா அல்லது தொலைநோக்கில் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவாரா அல்லது இரண்டையும் பேலன்ஸ் செய்து மையமாகப் பயணிப்பாரா என்பதும் இனிமேல்தான் தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in