வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம்

வன்னியர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 10.50 சதவீத உள் இடஒதுக்கீட்டினை ரத்து செய்து அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு, இடைக்காலத் தடை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இச்சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று(டிச.16), 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வந்தது. வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து காரணமாக மாணவர் சேர்க்கை முதல் பணி நியமனம் வரையிலான பணிகள் தடைபட்டிருபதை சுட்டிக்காட்டி ‘உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை’ வழங்குமாறு தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்புக்கு இடைக்கால தீர்ப்பு வழங்க மறுத்தனர். அதே வேளை, ’10.50 சதவீத இட ஒதுக்கீட்டில் வழங்கபட்ட மாணவர் சேர்க்கை முதல் பணி நியமனம் வரை எதிலும் மாற்றம் செய்யத் தேவையில்லை’ என்றும், இந்த ’வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இந்த உள் இடஒதுக்கீட்டின் கீழ் புதிதாக மாணவர் சேர்க்கை, பணி நியமனம் மேற்கொள்ள தடைவிதித்தும்’ உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்.15-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.