புதின் எனும் புதிர்!

ரஷ்யாவின் நவீன ஜார் மன்னர் புதினின் மகோன்னதங்கள்
புதின் எனும் புதிர்!
விளாடிமிர் புதின்

நாளது தேதியில் உலகம் அதிகம் உச்சரிக்கும் பெயராகி இருக்கிறது விளாடிமிர் புதின். உக்ரைன் விவகாரம் மட்டுமல்ல, உலகோடு உறவாடும் ரஷ்யாவின் அனைத்து அடிகளிலும் உள்ளடி இருக்கும். அவற்றில், முன்னாள் உளவாளி, ஜூடோ வீரர், சாகசப் பிரியர், ரஷ்யர்களின் புதிய ஜார் மன்னர், இளைஞர்களின் ஆதர்சம், தனது வாழ்நாள் முழுக்க ரஷ்யாவை ஆளப்போகிறவர், பிற தேசங்களின் தேர்தல்களை ஆட்டுவிப்பவர், மீண்டும் அகன்ற ரஷ்யாவை உருவாக்கத் துடிப்பவர் என்றெல்லாம் பல்வேறு அடையாளங்களால் விதந்தோதப்படுபவராக புதின் இருக்கிறார்.

இவற்றின் மறுபக்கத்தில், தேர்தல் குளறுபடிகளால் கடந்த 22 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வருபவர். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக உலகமெங்கும் சொத்துகளை குவித்து வருபவர். ஊழலுக்கு எதிரான குரல்களை அடக்குவதற்காக, உக்ரைன் போன்ற பிரச்சினைகளை உருவாக்கி நாட்டு மக்களை திசை திருப்புபவர் என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் இவர் ஆளாகி இருக்கிறார். இப்படி புதினும் அவர் குறித்த புதிர்களுமே அண்மைக்காலமாக அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவை துரத்தும் சோவியத் ஆவி

அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையிலான பனிப்போரின் உச்சத்தில் எப்போது வேண்டுமானாலும் அணு யுத்தம் வெடிக்கலாம் என்ற சூழல் நீடித்தபோது, சோவியத் கூட்டமைப்பு குலைய ஆரம்பித்தது. இனிமேல் ரஷ்யா அவ்வளவுதான் என்றபோது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் துயரத்தில் ஆழ்ந்த இளைஞர்களில் புதினும் ஒருவர். கேஜிபி உளவு நிறுவனத்தின் பயிற்சிகள், சட்டப் படிப்புகள், அரசியல் நண்பர்கள் புதினின் வளர்ச்சியில் பின்னாளில் பலரும் பங்கெடுத்தாலும், ஒன்றியம் சிதறியதே விதையாக அவருக்குள் பதிந்துபோனது. அரசியலில் கால்வைத்த மிகச்சில ஆண்டுகளில் நாட்டின் துணைப் பிரதமர்களில் ஒருவராகப் பதவியேற்றார் புதின். அதைவிட குறுகிய தருணத்தில் நாட்டின் அதிபராகவும் மாறி இருந்தார். இறுதியில் அரசியலமைப்பு சாசன திருத்தம் வரை சென்று, தன்னை வாழ்நாள் அதிபராகவும் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்.

சோவியத் காலத்து பனிப்போர் சூழல் இன்று மாறியிருக்கிறது. அமெரிக்காவுக்கு நேரெதிர் நிலையிலிருந்து ரஷ்யா அகற்றப்பட்டு அங்கே சீனா வீற்றிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களில்கூட வில்லன் கதாபாத்திரங்களில் ரஷ்யர்கள் விடைபெற்று, சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆனபோதும் ரஷ்யா தனது வல்லரசு வில்லத்தனங்களை விட்டபாடில்லை. தன்னை பொருட்படுத்தாத அமெரிக்காவை, மாய நடவடிக்கைகளால் ரஷ்யா துரத்த ஆரம்பித்தது. அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆகியவற்றை ஊடுருவியதுடன், தேர்தலின் முடிவை திசை திருப்புவதுவரை சித்து விளையாட்டு காட்டியது.

அமெரிக்காவின் அதிபரை ரஷ்யா முடிவு செய்வதாக வெளியான தகவல்களை, அமெரிக்கர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அமெரிக்காவின் மோசமான அதிபர்களில் முக்கியமானவரான ட்ரம்ப், ரஷ்யாவின் கொடை என்ற ஊடகங்களின் புலனாய்வு கட்டுரைகள் இன்னமும் அமெரிக்காவில் சுற்றி வருகின்றன. அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யாவின் இந்தத் திருவிளையாடலை, சோவியத் ரஷ்யாவின் ஆவி துரத்துவதாக ஊடகங்கள் சுவாரசியமாக வர்ணிக்கின்றன.

முதல் அடியும், முதல் படியும்

புராண காலத்து அவதாரப் புருஷர்களைப் போன்று, ரஷ்ய அதிபர் புதினைச் சுற்றும் சாகசப் புனைவுகள் ஏராளம். ரஷ்யர்கள் உறுதியாக நம்பும் அவற்றில் பல உண்மையானதும்கூட. பெர்லின் சுவர் விழுந்தபோது, கிழக்கு ஜெர்மனியில் ரஷ்யாவின் உளவு நிறுவனமான கேஜிபியின் அதிகாரியாக இருந்தார் புதின். கலவரக்காரர்கள் அவரது அலுவலகத்தையும் முற்றுகையிட்டார்கள். அவசர உதவிகோரலுக்கு மாஸ்கோவிடமிருந்து மவுனமே பதிலாக வந்தது. ‘சண்டை என்று முடிவாகிவிட்டால் முதலடி நமதாக இருக்க வேண்டும்’ என்பது, புதினுக்குப் பிடித்த வாசகங்களில் ஒன்று. லெனின்கிரேட் நகர வீதிகளில் மோதிக்கொள்வோர் மத்தியில், பால்யத்தில் புதின் கேட்டு வளர்ந்த வாசகம் இது. கைவச வீரர்கள் மற்றும் ஆயுதங்களுடன் கலவரக்காரர்களுடன் முன்னின்று மோதிய புதினின் சாகசம், ரஷ்யர்களின் நம்பிக்கைக்கு உரியது.

புதின் பள்ளியில் படித்த பாடங்களில், ஜூடோவையும் மல்யுத்தத்தையும் கலந்து செய்த ’சம்போ’ என்ற ரஷ்ய செம்படையின் தனித்துவ தற்காப்புக் கலையும் பிரதான பாடமாக இருந்தது. அதன் பிறகே ஆர்வமாக ஜூடோவும் கற்றுக்கொண்டார். இன்றைக்கும் ஜூடோ மேடைகளில் எதிராளியை துவம்சம் செய்யும் புதினின் புகைப்படங்களை பார்க்கலாம்.

உளவாளியின் உலகம் என்பது அலாதியானது. அப்போதைய கேஜிபி முகாம்களில் அமெரிக்க எதிர்ப்புக்கு அப்பால் ஊழலின் கரமே ஓங்கி இருந்தது. உளவும் களவும் கலந்த கலை புதினுக்கு விநோதமான அனுபவங்களை கற்றுத்தந்தது. துடிப்பான புதினை அவரது மேலதிகாரிகளுக்கும் பிடித்துப்போனது. சட்டக் கல்லூரியில் புதினின் பேராசிரியராக இருந்த சோப்சக் என்பவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயர் தேர்தலில் நின்றபோது, புதின் அவருக்கான பிரச்சார அணியில் முன்னின்றார். புதினுக்கான அரசியல் பாடம் அங்கே ஆரம்பித்தது. தேர்தலில் வெற்றி சாத்தியமாக மேயரை முன்னிறுத்தி, அரசியல் முக்கியஸ்தர்களிடம் அனுபவம் சேகரிக்க ஆரம்பித்தார் புதின்.

அடுத்த முறை தேர்தல் வந்தபோது, தனது முன்னாள் பேராசிரியரை துறந்து தலைநகர் கிரெம்ளினுக்கு படையெடுத்தார் புதின். முன்னதாக, அச்சாரமிட்டிருந்த தொடர்புகளின் வழியாக அதிபர் யெல்த்சினின் அணுக்க முகாமில் ஐக்கியமானர். ஒன்றரை ஆண்டுகளில், நாட்டின் துணை பிரதமர்களில் ஒருவராகவும் யெல்த்சினால் நியமிக்கப்படும் அளவுக்கு அவரை புதின் நெருங்கியிருந்தார். வெகுசீக்கிரமே அதிபராகவும் அமர்ந்திருந்தார். ஒருசில ஆண்டுகளில் புதின் அடுத்தடுத்த அதிகாரங்களுக்கு நகர்ந்ததில், அவரது முன்னாள் கேஜிபி உயரதிகாரிகளுக்கு பங்கிருப்பதாக சொல்லப்படுவதோடு, புதின் அதிபரானதும், அவர்கள் அனைவருக்கும் செய்நன்றி முறைவாசல் செய்யப்பட்டது என்பதும் ரஷ்ய ரகசியங்களில் ஒன்று.

ரஷ்யாவின் மீட்பர்

2000 - 2008 இடையே நாட்டின் அதிபராக 2 முறை தேர்வானார் புதின். தொடர்ச்சியாக இருமுறைக்கு மேல் ஒருவர் அதிபராக நீடிக்க முடியாது என்பதால், இடையிலோர் ஆட்சிக் காலத்துக்கு சகா மெட்வதேவ் என்பவரை அதிபர் அரியணையில் அமர வைத்தார் புதின். அடுத்த சுற்று வரும்வரை பிரதமர் நாற்காலியில் காத்திருந்தார். அடுத்த சுற்றில் மீண்டும் அதிபரான பிறகு அரசியல் சாசனத்தில் கண்வைத்தார். நடப்பு அதிபராக 2024 வரை அவரது ஆட்சிக்காலம் தொடரும் என்றபோதும், புதிய திருத்தங்களால் 2036 வரை புதின் ரஷ்ய அதிபராக நீடிக்க இருக்கிறார். அதாவது வாழ்நாள் அதிபராக புதின் தொடர்வார்.

தேர்தலில் திட்டமிட்டு தில்லுமுல்லு செய்கிறார் என்ற புதினின் அரசியல் எதிரிகளின் புகாரும் புறக்கணிக்கத்தக்கதல்ல. ’ரஷ்யாவின் பாணியை இறக்குமதி செய்து உலகின் பல தேசங்களின் தேர்தல்களில் நவீன முறைகேடு நிகழ்த்தப்படுகிறது’ என்ற குற்றச்சாட்டும் தொடரத்தான் செய்கிறது. அவற்றையும் மீறி ரஷ்யர்களின் அன்புக்கு பாத்திரமாகி இருக்கிறார் புதின்.

புதினின் தாத்தா, தந்தை ஆகியோர் தீவிரமான பொதுவுடமை பற்றாளர்கள். ஆனால், புதினின் கொள்கைகள் அவரைப்போலவே மர்மமாக இருக்கின்றன. தாராளமயத்தை கணக்காக திறந்துவிட்டவர், கடவுள் மறுப்பு முதல் தன்பாலீர்ப்பு போன்ற மேற்குலகின் பிடிமானங்களில் தள்ளியே இருந்தார். மதநம்பிக்கை கொண்டவர்கள் புதினை தங்களின் மீட்பராகவே பாவிக்கின்றனர். இது தவிர்த்து வெகுஜன அபிமானங்களும் புதினுக்கு அதிகம்.

அக்கால மகாராஜாக்கள் போல, திடீரென ரஷ்யாவின் தொலைதூர பிராந்தியங்களுக்கு பயணம் செய்வார். மக்களோடு உரையாடி குறைகள் கேட்பார். திறந்த மார்புடன் நீண்டதூரம் குதிரையில் பயணிப்பார். நகரின் புறச்சாலைகளில் ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஹெல்மெட் இன்றி மயிர்க்கூச்செரிய விரைவு காட்டுவார். சுறாக்கள் மத்தியில் மீன் பிடிப்பார். சைபீரிய புலியை வேட்டையாட கிளம்புவார். 70 வயதிலும் இவற்றை தொடரும் புதினை, ரஷ்ய இளைஞர்கள் மற்றும் படைவீரர்கள் தங்களது சாகச ஹீரோவாக தொழுகிறார்கள். தேசப்பற்றை முன்வைத்து புதின் ஆற்றிய உரைகள் அவர் மீதான மதிப்பை உயர்த்தும் நோக்கிலானவை. தற்போதைய உக்ரைன் முற்றுகை வரை அந்த தேசப்பற்றே அவர்களை செலுத்தி வருகின்றன.

மீளுமா சோவியத் ஒன்றியம்?

தேசப்பற்றின் தூண்டுதலாய், ’ரஷ்யாவின் மீட்டுருவாக்கம்’ குறித்த கருத்துகளும் கற்பிதங்களும் அதிபர் புதின் காலத்தில் அதிகம் பரப்பப்படுகின்றன. உக்ரைன் மீதான புதினின் பாய்ச்சலுக்கும் ரஷ்யாவில் ஆதரவு அதிகரித்திருக்கிறது. போர் தொடங்கும்வரை அதுகுறித்த ஊகங்கள் ஜவ்வாக இழுத்தாலும், மூன்றே அடிகளில் உக்ரைன் மீதான புதினின் நோக்கம் ஈடேற உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கணிக்கின்றன. உக்ரைன் ராணுவத்தை வீழ்த்துவது, தலையாட்டும் பொம்மை அரசை அங்கே நிறுவுவது, ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்புவோரை முடக்குவது. இவற்றை முடிப்பது ரஷ்யாவுக்கு எளிது. கிரீமியா வரிசையில் ஒட்டுமொத்த உக்ரைனும் ரஷ்யாவின் அரவணைப்பின்கீழ் வந்துவிடும். புதினின் இந்த நடவடிக்கையால், உள்நாட்டில் அவருக்கான செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். அலெக்ஸே நவால்னி போன்றோரின் ஊழல் குற்றச்சாட்டுகள் வலுவிழந்து போகும்.

நட்பு தேசமான சீனாவும் ரஷ்யாவின் பின்னிருப்பதன் நோக்கங்களில், ஐரோப்பிய ஆதிக்கத்தை இந்த 2 தேசங்களும் வெறுப்பதும் முக்கிய காரணம். ஐரோப்பா என்பதற்கு மாற்றாக யூரேசியா என்பதன்கீழான புதிய கூடுகையை, இரு நாடுகளும் விரும்புகின்றன. ஆச்சரியமாய் பிலிப்பைன்ஸில் தொடங்கி பாகிஸ்தான், இந்தியா வரை இதற்கு ஆதரவளிக்கும் ஆசிய நாடுகள் அதிகம். ஐரோப்பிய மோகத்தில் வழிக்குவராத முன்னாள் சோவியத் நாடுகள் மீதான ரஷ்யாவின் பாய்ச்சலுக்கு சீனாவும் ஆதரவளிக்கிறது. ஸ்டாலின் காலத்து சோவியத் என்பது ரஷ்யர்களின் கனவுகளில் ஒன்று. நடப்பின் முரண்களுக்கு அப்பால், அகன்ற பாரதம் என்பது இந்தியாவில் ஒரு சாரருக்கு எத்தனை உவப்பானதாக இருக்கிறதோ, அதைவிட ரஷ்ய மீட்டுருவாக்கத்தை விரும்புவோர் அங்கே அதிகம்.

அடுத்தபடியாக, கூட்டமைப்பிலிருந்து பிரிந்த தேசங்களை, மீண்டும் ஒன்றிணைப்பது சாத்தியமோ இல்லையோ, அவற்றை மேற்குலகின் கைப்பாவையாக புதின் அனுமதிக்க மாட்டார் என்றும் ரஷ்யர்கள் நம்புகின்றனர். இதானாலே, புதினின் ஆட்சிக்கால அவலங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் மங்கி வருகின்றன. புதின் என்னும் புதிரான மாயாவியின் கணக்கும் இதையே எதிர்பார்த்திருக்கலாம்.

Related Stories

No stories found.