3 டோஸ் தடுப்பையும் தகர்க்கும் ஒமைக்ரான்

3 டோஸ் தடுப்பையும் தகர்க்கும் ஒமைக்ரான்

கரோனா தடுப்புக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸை முழுமையாகப் போட்டுக்கொண்டோருக்கும், ஒமைக்ரான் பரவுவது தெரிய வருகிறது.

கரோனாவின் ஒமைக்ரான் உருமாறிய தொற்று உலக அளவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவின் 11 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் 19 மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவல் குறித்து மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்திய அளவில் ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 111-ஐ கடந்துள்ளது. கரோனா அலைகளின் பரவல் போன்றே, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சர்வதேச விமான நிலையில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது மட்டுமன்றி, முன்னதாக வீடு சென்றவர்களை தேடிப்பிடித்தும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவிலிருந்து மும்பை வந்திருந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்றும், தொடர்ந்து ஒமைக்ரானும் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததோடு, உடன் வசிப்பவர்களுக்கும் தொற்று பரவாதிருந்தது. மேலும் அமெரிக்காவில் கரோனா தடுப்புக்கான பைஸர் தடுப்பூசியின் 2 டோஸ்களுடன், கூடுதலாக பூஸ்டர் டோஸையும் அவர் போட்டுள்ளார். அவற்றையும் மீறி ஒமைக்ரான் அவரை பாதித்துள்ளது.

இதன் மூலம் ஒமைக்ரானுடனான தடுப்பூசிகளின் எதிர்வினை கேள்விக்குள்ளாவது தெரியவருகிறது. இந்தியாவில் முழுமையான கரோனா பாதுகாப்பு பெற, பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து வலியுறுத்தப்பட்டு வருகையில் இதுபோன்ற நடைமுறை தரவுகளும் குறுக்கிடுகின்றன. மும்பையின் அமெரிக்க ரிடர்ன் நபரை மருத்துவமனையில் அனுமதித்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தடுப்பூசி மட்டுமன்றி, பூஸ்டர் டோஸுக்கும் அவரது உடல் வினையாற்றுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழகத்திலும், முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நைஜீரியாவிலிருந்து திரும்பிய குடும்பத்தாரும், கரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கரோனா மற்றும் அதன் உருமாறல்களில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு திருப்தியடையாது, இதர கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் முழுமையாக ஈடுபடுவது அவசியமாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in