வீட்டின் அருகே குழிதோண்டியபோது கிடைத்த முதுமக்கள் தாழி - அதிகாரிகள் ஆய்வு!

சூலூர் அருகே மண்ணில் கிடைத்த முதுமக்கள் தாழி
சூலூர் அருகே மண்ணில் கிடைத்த முதுமக்கள் தாழி

கோவை அருகே வீட்டில் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துகவுண்டன்புதூரில் பொன்னுச்சாமி என்பவர் தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் கழிவறைக்கு செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டிய போது பழங்கால முதுமக்கள் தாழி போன்ற மண் பானை தெரிந்துள்ளது. அதன் மீது சில பலகைகள் வைத்து மூடப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்த பொழுது அதில் சில எலும்புகள் கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக இது பற்றி வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சூலூர் அருகே மண்ணில் கிடைத்த முதுமக்கள் தாழி
சூலூர் அருகே மண்ணில் கிடைத்த முதுமக்கள் தாழி

செப்டிக் டேங்க் பயன்பாட்டுக்கு குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்ட தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து முதுமக்கள் தாழியை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் முதுமக்கள் தாழியை மீட்டு விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து ஆய்வுக்காக முதுமக்கள் தாழியை கோவையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும் போது, ஆய்வுக்குப் பிறகே இந்த முதுமக்கள் தாழி எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவரும் எனவும், அருகாமையில் வேறு ஏதேனும் பழங்கால பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in