இந்தியாவில் கரோனா அடுத்த அலை: கான்பூர் ஐஐடி கணிப்பு!

இந்தியாவில் கரோனா அடுத்த அலை: கான்பூர் ஐஐடி கணிப்பு!

கரோனா அலைகளின் வரிசையில் நான்காது அலை ஜூன் மாதம் 22 அன்று தொடங்க வாய்ப்பிருப்பதாக கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் கணித்துள்ளனர்.

கரோனா 2வது அலையுடன் ஒப்பிடுகையில் 3வது அலையில் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி, அதிலிருந்து விடுபட்டு வருகிறோம். மூன்றாவது அலை முடிந்தாலும் கரோனா முடிவதாக இல்லை. ஐரோப்பிய நாடுகளில் 4, 5 என்று அலைகள் அடுத்தடுத்து அலைபாய்ந்துள்ளன. உக்ரைனை தாக்கிவரும் ரஷ்யாவை, உள்நாட்டில் கரோனா இரக்கமின்றி தாக்கி வருகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் 781 ரஷ்யர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கரோனா அடுத்த அலை குறித்த கணிப்புகள் வெளியாகி வருகின்றன. கரோனாவின் அடுத்தடுத்த அலைகளை முன்கூட்டியே கணித்து வரும் கான்பூர் கணிதத் துறை பேராசிரியர்கள், 4வது அலை குறித்த தங்களது கணிப்பினை வெளியிட்டுள்ளனர். மூன்றாவது அலை குறித்த இவர்களின் கணிப்பு அப்படியே ஈடேறியதால், இம்முறை இவர்களின் கணிப்பு கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.

கான்பூர் கணித பேராசிரியர்களின் கணிப்பின்படி ஜூன் 22 வாக்கில் கரோனா 4வது அலை தலைகாட்டும். அடுத்த 2 மாதங்களில் இந்த அலை உச்சம் பெறும். அதாவது ஆகஸ்ட்15 -30 இடையே இந்த அலையின் வீச்சு அதிகமாக இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்து அக்டோபர் இறுதியில் 4வது அலை முடிவுக்கு வரும். இந்த வகையில் சுமார் 4 மாத காலங்களுக்கு 4வது அலையின் வீச்சு இந்தியாவில் இருக்கும்.

இந்த கணிப்பு முழுமைக்கும், கணிதவியல் கோட்பாடுகள் மற்றும் புள்ளிவிவர தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. மேலும், கரோனா புதிய திரிபுகளின் தோற்றம் மற்றும் வீரியம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளின் செயல்பாடு போன்றவற்றை பொறுத்தே 4வது அலையின் நடைமுறை பாதிப்பை உணர முடியும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.