மக்கள் நினைத்தால் உடனடி மாற்றம் நிகழும்!

மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிவைத்து முதல்வர் உரை
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுற்றுச்சூழல் மாசடையாமல் காக்க பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை மீண்டும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கரோனா பரவல் காரணமாக தேக்கம் ஏற்பட்ட தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த, அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக, மாற்றுப் பொருட்களின் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், தயாநிதிமாறன் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மஞ்சள் பையை வைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் கிண்டலுக்கு உள்ளாகும் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மஞ்சள் பைதான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. சுற்றுச்சூழல் பிரச்சினைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சினை. பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மீண்டும் துணி வகைகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம்.

சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் முற்றிலும் குறைத்தாக வேண்டும். 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித்து, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தாலோ பயன்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் மக்குவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும். இதனால் மண் வளம் மட்டுமல்ல, நீர் வளமும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசடைகிறது. அரசாங்கம் நினைத்தால் மட்டும் இந்த நிலையை மாற்ற முடியாது. மக்களும் நினைத்தால்தான் இதை முழுமையாகத் தடைசெய்ய முடியும். மக்கள் நினைத்தால் உடனடியாக மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மஞ்சப்பை அவமானமல்ல.. சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in