மண்ணின் மைந்தருக்கு தனியாரில் 75% இட ஒதுக்கீடு: ஹரியானா சட்டத்துக்கு நீதிமன்றம் தடை!

மண்ணின் மைந்தருக்கு தனியாரில் 75% இட ஒதுக்கீடு: ஹரியானா சட்டத்துக்கு நீதிமன்றம் தடை!

தனியார் துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் ஹரியானா மாநில அரசின் புதிய சட்டத்துக்கு, உயர் நீதிமன்றம் இன்று(பி.3) தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், தனியார் துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அல்லது இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஓரிரு மாநிலங்களில் முறைப்படி சட்டமாக இயற்றப்பட்டும் வருகின்றன. அப்படி ஹரியானா மாநிலத்தில் இயற்றப்பட்டு அமலுக்கு வந்த, பெரும் எதிர்பார்ப்புக்குரிய சட்டம், ஹரியானா-பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக அடிப்படையிலான கல்வி மற்றும் அரசுப் பணி இட ஒதுக்கீடு போலவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது, பல ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் இந்த வாக்குறுதி கவர்ச்சிகரமாக இடம்பெறும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களால் தங்களது வாழ்வுரிமை மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் நசுக்கப்படுவதாக, மண்ணின் மைந்தர்களான அம்மாநிலத்தில் வசிப்போர் புலம்பி வருவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

ஹரியானாவில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்ட, ’உள்ளூர் வேலைநாடுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா’ கடந்த 2020 நவம்பரில் சட்ட மசோதாவாக இயற்றப்பட்டு, சில மாதங்களில் கவர்னர் ஒப்புதலையும் பெற்றது. இந்த சட்டத்தின்படி, ஹரியானாவில் வசிப்போர் தனியார் நிறுவனங்களில், 75 சதவீத இட ஒதுக்கீட்டில் பணிவாய்ப்பினை பெற முடியும்.

தனியார் நிறுவனங்கள் என்பதில் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவான அனைத்து நிறுவனங்களும் உட்படுகின்றன. இந்த தனியார் நிறுவனங்களையும், ஹரியானா வேலைநாடுநர்களையும் இணைப்பதற்காக பிரத்யேக வலைதளத்தை உருவாக்குவது என்றும், அரசின் கண்காணிப்பிலான இந்த வலைதளம் வாயிலாக காலிப்பணியிடங்கள் குறித்து அறிந்துகொள்வதோடு, அவற்றுக்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தனியார் நிறுவனங்கள் காலக்கிரமத்தில் தங்களுடைய பணியாளர்கள் விபரத்தையும், காலிப்பணியிடங்களையும் அரசுக்கு தெரிவித்தாக வேண்டும். அப்படி செய்யாத நிறுவனங்கள் மீது அபராதத்தில் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வழி உண்டு. 75% இட ஒதுக்கீடு என்றபோதும், தனியார் துறையின் அனைத்து பணியிடங்களும் இந்த ஒதுக்கீட்டில் இடம்பெற முடியாது. ரூ50 ஆயிரம் மாத ஊதியத்துக்கு உட்பட்ட பணியிடங்கள் மட்டுமே இதற்கு உட்படும். இந்த நிபந்தனை ரூ.30 ஆயிரமாக பின்னர் குறைக்கப்பட்டது.

ஹரியானா உயர் நீதிமன்றத்தால் தடை விதிப்புக்கு ஆளாகியுள்ள இதே போன்ற சட்டம் முன்னதாக, 2019ல் ஆந்திராவில் கொண்டுவரப்பட்டது. அதுவும் ஹரியானா போலவே ஆந்திர உயர்நீதிமன்றத்தால் தடைக்கு ஆளானது. ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு விவரங்கள் இன்னமும் வெளியாகவிலை. அவை அநேகமாக ஆந்திர தீர்ப்பினை ஒட்டியே அமைந்திருக்க வாய்ப்புண்டு. ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ’குறிப்பிட்ட மாநிலத்தினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம், தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது’ என்ற தனியார் நிறுவனங்கள் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொண்டது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் பல்வேறு அரசுப் பணியிடங்களிலும், வெளிமாநிலத்தவர் நியமிக்கப்படுவதற்கு எதிராக ஆட்சேபம் முதல் போராட்டங்கள் வரை எழுந்து வருகின்றன. அதேபோல தனியார் பணியிடங்களில் சொந்த மாநிலத்தவரான மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மாநில அரசுகளின் சட்ட முன்னெடுப்புகள் தடைக்கு ஆளாவது, இதர மாநிலங்களின் முயற்சிகளையும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in