கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் மீது குண்டாஸ் பாய்ந்தது

கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் மீது குண்டாஸ் பாய்ந்தது
ஆசிரியர் மிதுன்

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது, குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை, சின்மயா வித்யாலயா பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவிக்கு, இயற்பியல் பாட ஆசிரியரான மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இது தொடர்பாக பள்ளி முதல்வர் உட்பட பலரிடமும் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டும் பலனில்லை. எனவே அங்கிருந்து விலகி, வீட்டருகே மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

பழைய சம்பவத்தின் மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு, மீண்டும் அதே மிதுன் வலிய தொடர்புகொண்டு தொந்தரவு தந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோவை போலீஸார், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டியது உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் கைது செய்தனர்.

பொதுமக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தொடர்புடைய வேறு பலரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தும் அதை முறையாக விசாரிக்காததோடு, பலவகைகளில் மறைக்கவும் முயற்சி மேற்கொண்டதற்காக, சின்மயா பள்ளியின் அப்போதைய முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்கு பாய்ந்தது. பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவத்தை அடுத்துப் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தும், ஏராளமான பாலியல் புகார்கள் புற்றீசலாய் வெளிவர ஆரம்பித்தன. பாலியல் தொந்தரவுகளால் மனமுடைந்த மாணவிகள் ஒருசிலர் உயிரை மாய்த்துக்கொண்டதும் நடந்தது. இதையடுத்து அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், பள்ளி வளாகத்தில் பாலியல் புகார் விழிப்புணர்வு, ஆசிரியர் சமூகத்துக்கு அறிவுறுத்தல்கள், மாணவப் பருவத்தினருக்கான பல்வேறு உதவிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே மீரா ஜாக்சன் ஜாமீன் பெற்றதைத் தொடர்ந்து ஆசிரியர் மிதுன் தரப்பும் ஜாமீனுக்கு முயற்சிப்பதாய் சொல்லப்பட்டது. ஆங்காங்கே ஆசிரியர்களுக்கு எதிரான பாலியல் புகார்களும் இன்னமும் எழுந்தபடியே உள்ளன. அப்படியானவர்கள் மீது போக்சோ மட்டுமன்றி கூடுதல் சட்ட நடவடிக்கைகளும் பாயத் தயாராக இருப்பதை, தெரிவிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் புகாருக்கு ஆளான ஒரு பள்ளி ஆசிரியர் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் கைதானதுடன், தற்போது குண்டர் தடுப்பு நடவடிக்கைக்கும் ஆளாகி இருப்பது, பள்ளி மாணவியர் பாதுகாப்புக்கான நடவடிக்கையாகவே வெளிப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in