ஒலிம்பிக்கிலும் இந்தியாவை சீண்டும் சீனா!

கல்வான் மோதலில் அதிகம் பலியான சீன வீரர்கள்: அம்பலமாக்கிய ஆஸ்திரேலிய ஊடகம்
ஒலிம்பிக்கிலும் இந்தியாவை சீண்டும் சீனா!
கல்வானில் இந்திய - சீன வீரர்கள் (2020)

பெய்ஜிங்கில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை முன்வைத்தும், இந்தியாவை சீண்டும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நாளை(பிப்.4) தொடங்கி நடைபெற இருக்கின்றன. சர்வதேசளவில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, லிதுவேனியா உள்ளிட்ட நாடுகள், இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லை என அறிவித்திருந்தன. ஆனால் சீனாவின் அண்டை தேசமான இந்தியா, சீனாவுடனான எல்லைத் தகராறு உட்பட பல்வேறு முரண்பாடுகள் நடப்பில் இருந்தபோதும், இந்த போட்டியில் பங்கேற்கிறது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முகமது ஆரிஃப் கான் என்ற பனிச்சறுக்கு வீரர் இந்தியாவின் சார்பில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்றுள்ளார்.

இந்நிலையில் ஒலிம்பிக் தீபத்துக்கான தொடர் ஓட்டத்தில், கி ஃபேபவோ என்ற சீன ராணுவத்தின் கமாண்டர் கையில் ஒலிம்பிக் சுடர் பயணித்திருக்கிறது. இவர் இந்தியாவின் லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் மேற்கொண்ட கொலைத்தாக்குதலில் பங்கேற்றவர். இரு நாட்டு வீரர்களும் கைகளால் மோதிக்கொண்ட இந்த தாக்குதலில் இருதரப்பிலும் உயிர்ப்பலி ஏற்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் பதிலடியால், தலையில் காயமடைந்து இன்றளவும் அதன் வடுவை சுமந்திருப்பவர் இந்த கி ஃபேபோ. அவர் கையில் சர்வதேச இணக்கத்துக்குரிய விளையாட்டுப் போட்டிக்கான தீபத்தை ஏந்தக் கொடுத்த சீனாவின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

கி ஃபேபவோ கையில் ஒலிம்பிக் சுடர்
கி ஃபேபவோ கையில் ஒலிம்பிக் சுடர்

இந்திய சீன எல்லையில் கடந்த சில ஆண்டுகளாகவே பதட்டம் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் துருப்புகள், போர்த் தளவாடங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. போருக்கான ஆயத்த நடவடிக்கைகள், சாலைகள், முகாம்கள் ஆகியவற்றையும் இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆனபோதும், விளையாட்டு என்று வந்த பிறகு, இதர துவேஷங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, தனது வீரரை அனுப்பி நேசக்கரம் நீட்டியுள்ளது இந்தியா. ஆனால் சீனாவோ இந்தியாவின் ரணத்தை கிளறும் வகையில் சர்வதேச போட்டிக்கான ஒலிம்பிக் தீபச் சுடரை, இந்தியாவிடம் விழுப்புண் பெற்ற சீன ராணுவ கமாண்டர் கையில் கொடுத்து கவுரவித்திருக்கிறது.

சீனாவின் சிறுமைக்கு எதிராக அமெரிக்க செனட்டர்கள் சார்பில் கண்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த இந்திய சீண்டலின் பின்னணியில் இன்னொரு காரணமும் சேர்ந்திருக்கிறது. கல்வான் தாக்குதலின் போது போருக்கான ஆயுதங்கள் இன்றி இரு நாட்டு வீரர்களும் கோரமாக மோதிக்கொண்டனர். இதில் தங்கள் தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்ததாக இந்தியா அறிவித்தது. சீனாவோ தனது தரப்பின் உயிர்ப்பலி குறித்து வெளிப்படையான தகவலை அறிவிக்கவில்லை. 5 வீரர்கள் பலியானதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், The Klaxon என்ற ஆஸ்திரேலிய நாளிதழ் வெளியிட்டிருக்கும் புலனாய்வு கட்டுரை ஒன்று, சீனாவின் இருட்டு முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. சீனாவின் உள்ளிருந்தே தரவுகளை சேகரித்த இந்த புலனாய்வு கட்டுரை, கல்வானில் இறந்த சீன வீரர்களின் எண்ணிக்கை இந்திய தரப்பின் இழப்பை விட அதிகம் என்கிறது. இந்த கட்டுரை சீனாவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வீரர்களால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை சீன குறைவாக வெளியிட்டதுடன், மேற்படி கல்வான் தாக்குதலுக்காக அங்கே ஊடுருவும் முயற்சியிலும், கணிசமான வீரர்கள் இறந்ததாக ஆஸ்திரேலிய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வேகமாய் சுழித்தோடும் ஆற்றில் சிக்கியதில் 38 சீன வீரர்கள் இறந்ததாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. இவை குறித்து சீனாவின் அரசு ஊடங்கள் வாய் திறக்கவில்லை. கல்வான் மோதலில் தங்கள் தரப்பில் அதிக வீரர்களை பலி கொடுத்தது, அங்கு சந்தித்த தோல்வி ஆகியவற்றின் காரணமாகவே, ஒலிம்பிக் தீப விவகாரத்திலும் தனது சிறுமையை சீனா வெளிப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in