தினசரி பாதிப்பு லட்சத்தைக் கடந்தது; இங்கிலாந்தை அலைக்கழிக்கும் கரோனா!

தினசரி பாதிப்பு லட்சத்தைக் கடந்தது; இங்கிலாந்தை அலைக்கழிக்கும் கரோனா!

இங்கிலாந்தில் கரோனா பரவல் மோசமாகி வருகிறது. தினசரி பாதிப்பு நேற்று(டிச.22) லட்சத்தைத் தாண்டிய நிலையில், பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பொதுமுடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இங்கிலாந்து இறங்க உள்ளது.

கரோனாவின் டெல்டா பரவலில் மிகவும் தீவிரமான பாதிப்புக்கு ஆளான தேசம் இங்கிலாந்து. சற்று இடைவெளிவிட்டு, ஒமைக்ரான் பரவலின் மத்தியில், கரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு இங்கிலாந்து ஆளாகி வருகிறது. அதிகரித்து வரும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கையில் புதன் கிழமை, ஒருநாளில் மட்டும் 1,06,122 பேருக்கு கரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இங்கிலாந்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவில் பெருந்தொற்றுக்கு அதிகம் ஆளான தேசமாகி இருக்கிறது இங்கிலாந்து.

பரவல் தொடங்கிய இந்த 2 ஆண்டுகளில் இங்கிலாந்தின் அதிகாரபூர்வ கரோனா உயிரிழப்புகள் ஒன்றரை லட்சத்தை தொட இருக்கின்றன. சுமார் 1.1 கோடி மக்கள் அங்கு தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால், விழாக்காலத்தின் தொற்றுப் பரவலை தணிக்க நாட்டுமக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு மன்றாடி வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடியும் கையோடு, நாட்டில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசித்து வருகிறார்.

கரோனா பரவலின் மத்தியில் அதன் இன்னொரு உருமாற்றமான ஒமைக்ரானும் அதிகம் பரவி வருகிறது. அந்தவகையில் உலகின் முதல் ஒமைக்ரான் பலிக்கும் இங்கிலாந்து ஆளானது. பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளையும் ஒமைக்ரான் அதிகம் பாதித்து வருவதால், அவர்களுக்கான தடுப்பூசி பணிகளிலும் இங்கிலாந்து இறங்கியுள்ளது. 5-11 வயதுக்கிடையிலான குழந்தைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசி செலுத்த நேற்று அரசு அனுமதி வழங்கியது. பெரியவர்களுக்கு 2 தடுப்பூசிகள் முடித்து பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், 3-வது டோஸ் தடுப்பூசியையும் இங்கிலாந்து தொடங்குகிறது.

இங்கிலாந்து படும்பாட்டை இதர உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இவற்றை உலக மக்களும் உள்வாங்கிக்கொள்வது முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வில் சேரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in