கரோனா அலைகள் 10 வருடமேனும் தொடரும்: அதார் பூனாவாலா

அதார் பூனாவாலா
அதார் பூனாவாலா

ஒமைக்ரான் பரவல் உறுதியானதுமே பாதி உலகத்தின் பார்வை அதார் பூனாவாலா பக்கம் திரும்பியது. தனது சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் மூலம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கோடிக் கணக்கில் தயாரித்து இந்தியா மட்டுமன்றி, ஏராளமான நாடுகளின் மக்கள் உயிர் பிழைக்க உதவினார் அதார்.

ஒமைக்ரான் பரவல் அச்சம் சூழ்ந்திருக்கும் நிலையில், தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அதார் பூனாவாலா அளித்த பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. கரோனா தடுப்பூசியின் திறன், ஒமைக்ரானுக்கு தடுப்பூசி, பூஸ்டர் டோஸ், குழந்தைகளுக்கான தடுப்பூசி என பல அம்சங்கள் குறித்து அவர் விளக்கமளித்து உள்ளார். அவற்றில் முக்கியமானவை இங்கே:

கரோனா தடுப்பூசி:

லான்செட் மருத்துவ ஆய்வின்படி, கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள், கரோனா பாதிப்பு நேர்ந்தாலும் மருத்துவமனைக்குச் செல்ல அவசியமின்றி உயிருக்கு ஆபத்து ஏதுமின்றி பாதுகாப்பு பெறுகிறார்கள்.

தற்போதைக்கு அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள். அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகே, பூஸ்டர் டோஸ் குறித்து அரசால் முடிவெடுக்க முடியும்.

கோவிஷீல்டு
கோவிஷீல்டு

ஒமைக்ரான் தடுப்பூசி:

ஒமைக்ரான் குறித்த முழுமையான மருத்துவ ஆய்வுகள் வெளிவருவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம். ஆக்ஸ்போர்ட் அறிவியலாளர்கள் ஒமைக்ரான் தடுப்பூசி குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். அதன் முடிவுகள் கைக்கு வந்ததும் புதிய தடுப்பூசிக்கான பணிகளை தொடங்கி விடுவோம். அதிலிருந்து 6 மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும். இந்த ஒமைக்ரான் தடுப்பூசி ஒரு பூஸ்டர் டோஸாகவும் அமையும்.

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி:

குழந்தைகளுக்கான பிரத்யேக தடுப்பூசி கோவோவேக்ஸ்(Covovax) என்ற பெயரில் தயாராக உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவைக்கு ஏற்ப இருப்பில் உள்ளன. இந்தத் தடுப்பூசிக்கான உரிமம் பெறும் பணிகள் நிறைவடைந்ததும், அவை பயன்பாட்டுக்கு கிடைக்கும்.

தடுப்பூசி தயாரிப்பு:

மாதத்துக்கு 25 கோடி தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறனை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இனி தட்டுப்பாடின்றி அவற்றைப் பெறவும் முடியும். தடுப்பூசி தயாரிப்பதற்கான மருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் தேவையும் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.

கரோனா விடாது:

குறைந்தது இன்னும் 10 வருடங்களுக்கேனும் கோவிட் பரவல், அதன் பல்வேறு உருமாற்றங்கள் மூலம் தலைகாட்டியபடியே இருக்கும். 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வதன் மூலம் பாதுகாப்பு பெற வேண்டியிருக்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in