மிரட்டும் ’திருட்டு’ வைரஸ்!

கரோனா நான்காவது அலை கவலைகள்!
மிரட்டும் ’திருட்டு’ வைரஸ்!

உக்ரைன் போர் முனையில் களமாடும் வீரர்கள் குண்டு துளைக்காத கவசம் அணிந்திருக்கிறார்களோ இல்லையோ, கரோனாவை தவிர்ப்பதற்கான முகக்கவசத்தை மறக்காது தரித்திருக்கிறார்கள். அந்தளவுக்கு ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மீண்டும் சூறையாடலைத் தொடங்கி இருக்கிறது கரோனாவின் புதிய அலை.

பரவல் தொடங்கிய மூன்றாவது ஆண்டிலும் கரோனா அலைகளின் கொட்டம் அடங்கியபாடில்லை. சீனாவின் முக்கிய நகரங்களை உள்ளடக்கிய மாகாணங்கள் இதுவரை இல்லாதவகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு ஆளாகியுள்ளன. ஹாங்காங், சிங்கப்பூர், தென்கொரியா, பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து என கரோனாவின் புதிய அலைகளுக்கு அலைக்கழிந்து வரும் நாடுகளின் பட்டியல் நீண்டு வருகிறது.

இந்த களேபரங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாய் உலகளவில் அதிக எண்ணிக்கையில் கரோனா பாதித்த இந்தியாவில், இன்னும் 2 மாதங்களில் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கும் என்ற கணிப்புகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் அலைபோல எதிர்வரும் நான்காவது அலையும் நமுத்துப்போகுமா அல்லது இரண்டாம் அலை பாணியில் புதிய விபரீத திரிபுடன் ’வைத்து செய்யுமா’ என்ற கவலையே இந்த விவாதங்களில் அதிகம் பொதிந்திருக்கிறது.

மீண்டும் மிரட்டும் கரோனோ

மார்ச் சமயத்தில், கடந்த 2 வருடங்களைவிட இந்த ஆண்டு குறைந்தளவிலான கரோனா தொற்றுகளின் எண்ணிக்கையே நாள்தோறும் இந்தியாவில் பதிவாகி வருகிறது. முகக்கவசம், தனி நபர் இடைவெளி தவிர்த்த இதர கரோனா கட்டுப்பாடுகளுக்கு பெரும்பாலான மாநிலங்கள் மார்ச்சுடன் விடை தந்திருக்கின்றன. ஆனால், உலகளவிலான கரோனா பாதிப்பு என்பது இதற்கு நேர்மாறாக இருக்கிறது. உதாரணத்துக்கு, மார்ச் இறுதி நிலவரப்படி தென்கொரியாவில் சோதனை செய்யப்படுவோரில் 5 சதவீதம் பேருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. அங்கு 6.5 லட்சம் மக்கள் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த வகையில் ஜெர்மனியில் 15 லட்சம், பிரான்சில் ஐந்தரை லட்சம், இங்கிலாந்தில் 5 லட்சம் என இதர நாடுகளிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாய் அதிகரித்து வருகிறது. இந்நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கவலைக்குரியதாகும்.

முந்தைய கரோனா திரிபுகளைவிட தீயெனப் பரவும் ஒமைக்ரானின் துணைத் திரிபுகளில் ஒன்றான ‘பிஏ.2’ வாயிலாக, ஒமைக்ரான் இரண்டாவது அலையில் உலக நாடுகள் தடுமாறி வருகின்றன. ஒட்டுமொத்தமாய் பெருந்தொற்றின் புதிய எழுச்சி உலகுக்கு சொல்லும் சேதி இதுதான்: கரோனாவுக்கு அழிவில்லை! விரைவில் அடுத்தடுத்த அலைகளையும் எதிர்நோக்கலாம். அவற்றின் பாதிப்புகள் குறையலாமே தவிர்த்து, இப்போதைக்கு அலைகள் ஓயப்போவதில்லை. குறிப்பாக, இந்தியாவில் இனிவரும் தினங்களில் படிப்படியாக மீண்டும் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கி, நான்காவது அலை தீவிரமாக ஆட்கொள்ளும் என்றும் ஆரூடம் கணித்திருக்கிறார்கள்.

கான்பூர் ஐஐடி
கான்பூர் ஐஐடி

கான்பூர் கணிப்புகள் பலிக்குமா?

முந்தைய கரோனா அலையின் பரவலை துல்லியமாக கணித்ததில் புகழடைந்த கான்பூர் ஐஐடியின் புதிய கணிப்பு, ஜுன் 22 அன்று நான்காவது அலை தொடங்கலாம் என்கிறது. சுமார் 4 மாத காலத்துக்கு நீடிக்கும் இந்த புதிய அலை அக்டோபர் 24 வாக்கில் நிறைவடையும் என்றும், இதனிடையிலான ஆகஸ்ட் மத்தியில் கரோனா அலையின் வீச்சு உச்சமடையும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

கான்பூர் ஐஐடியின் கணித மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர்களின் இந்த கணிப்பு மருத்துவ ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டது. முழுக்கவும் முந்தைய தரவுகள் மற்றும் கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவானவை. மூன்றாம் அலைக்கு ஐஐடியின் கணிப்பு வெகுவாய் பொருந்திப்போனதால், நான்காவது அலைக்கான அதன் கணித ஆருடத்தை அதிகமானோர் நம்புகிறார்கள். ஆனால், மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் இப்போதைக்கு இன்னொரு அலைக்கு வாய்ப்பில்லை என்று வாதிடும் மருத்துவர்களே அதிகம்.

இந்தியாவின் தடுப்பூசி இலக்குகளின் சாதனை, முந்தைய கரோனா பாதிப்புகளால் இந்தியர்களின் உடலில் இயல்பாக அதிகரித்திருக்கும் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அதன் விளைவாக சமூகப் பரவல் திடமாகி இருப்பது, நீடிக்கும் கோடையின் பாதுகாப்பு ஆகியவை இந்த மருத்துவர்களின் தரப்புக்கு ஆதரவாக இருக்கின்றன.

’திருட்டு’ வைரஸின் மிரட்டல்கள்

உலக நாடுகளில் தடாலடியாக அதிகரித்திருக்கும் கரோனா பாதிப்புக்கு ஒமைக்ரானின் துணைத் திரிபான ‘பிஏ.2 ’ காரணமாகி இருக்கிறது. ஒமைக்ரான் மீதான அச்சுறுத்தலுக்குக் காரணமாக, அதன் பரவும் வேகம் அமைந்திருந்தது. தற்போதைய ‘பிஏ.2’ முந்தைய ஒமைக்ரான் திரிபுகளைக் காட்டிலும் வேகமாக பரவக் கூடியதாலும், புதிய திரிபுகளின் அச்சுறுத்தல் காரணமாகவும் கரோனா கவலைகளை கூடுதலாக்கி உள்ளன. மேலும், ஒமைக்ரான் உள்ளிட்ட இதர கரோனா வைரஸ் ரகங்களைப் போலன்றி அதிகப்படியான அறிகுறிகள் இல்லாமலும் பரவி வருகிறது. இதன் காரணமாக, ’திருட்டு’ (Stealth) வைரஸ் என்றும் ‘பிஏ.2’-வை குறிப்பிடுகிறார்கள். வழக்கமான ‘ஆர்டி-பிசிஆர்’ பரிசோதனைகளில் இவற்றை உறுதிசெய்ய முடியாது போவதில் இந்த ’திருட்டு’ வைரஸின் மிரட்டல் தொடங்குகிறது.

பொதுவாக டெல்டா ரகத்தைவிட ஒமைக்ரானில் பாதிப்பு குறைவு என்பதை கரோனாவின் மூன்றாம் அலை நமக்கு உணர்த்தியது. இணைநோயர்களில் ஒருசிலர் தவிர்த்து பெரும்பாலானோர் உயிர்பிழைத்ததும், பெருவாரியான மக்கள் மருத்துவமனை வாசமின்றி பாராசிட்டமால் மாத்திரைகள் உதவியுடன் ஒமைக்ரானை கடந்து வந்ததற்கும் சாட்சிகள் அதிகம். இந்த வரிசையில் ‘பிஏ.2’ திரிபின் பாதிப்பும் அமைந்துவிட்டால், நான்காம் அலையில் கரையேறுவது சுலபமாகும். ஆனால், உப திரிபுகளின் அபாயம் மற்றும் இதர வைரஸ்களுடன் இணைந்து வருவது போன்றவை ’பிஏ.2’ வைரஸ் குறித்த கவலையை அதிகமாக்குகின்றன. உதாரணத்துக்கு, இஸ்ரேலில் சாதாரண இன்ஃபுளூயன்சாவுடன் கூட்டு சேர்ந்த ஒமைக்ரான் அதிகமானோரை மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்ததும், ஆப்பிரிக்க நாடுகளில் ஹெச்ஐவி முற்றிய நோயர்களின் உடலில் புதிய வீரிய திரிபுகள் தலைக்காட்டியது தொடர்பான ஆராய்ச்சிகளும் இவற்றில் அடங்கும்.

நாசம் விளைவிக்குமா அல்லது நமுத்துப் போகுமா?

‘பிஏ.2’ தொடர்பான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளும் முந்தைய அலை கரோனா பாதிப்பிலிருந்து முழுதும் விலகியிருப்பதும் இந்த கவலையில் அடங்கும். உலகளவில் பரவிவரும் ‘பிஏ.2 ’ திரிபு, அறிகுறிகள் இல்லாமலே மக்களைப் பாதித்து வருகிறது. சளிக் காய்ச்சல் தவிர்த்து, வாசனை மற்றும் ருசி இழப்பு போன்றவை ‘பிஏ.2 ’ பாதிப்பில் இல்லை. தலைச்சுற்றல், சோர்வு, தொண்டைக் கரகரப்பு போன்ற சாதாரண அறிகுறிகளையே ‘பிஏ.2’ தொற்றும் வெளிப்படுத்தி வருகிறது.

உடல் அவயங்களைப் பாதிப்பதிலும் இந்த ‘பிஏ.2’ திரிபு நுரையீரலில் இருந்து வயிற்றுக்கு முன்னேறி உள்ளது. டெல்டா பரவலின் மத்தியில் நுரையீரல் அதிகம் குறிவைக்கப்பட்டதில், ஆக்ஸிஜனுக்கு வழியின்றி மூச்சுத் திணறியே இறந்தவர்கள் அதிகம். ஆனால், இம்முறை வயிறு மற்றும் அதன் உள்ளுறுப்புகளை ‘பிஏ.2’ குறிவைக்கும் என்கிறார்கள். இதனால் செரிமானக் கோளாறுகளில் தொடங்கி வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு வரையிலான பாதிப்புகள் அதிகமாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ‘பிஏ.1’ ஆக்கிரமித்திருந்த மூன்றாம் அலையின் இறுதியில்கூட இதே பாதிப்புகளுடன் கணிசமானோருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எச்சரிக்கை

இந்தியாவில் கரோனா தடுப்பூசி இயக்கம் பரவலாகச் சென்று சேர்ந்திருப்பினும், கணிசமான எண்ணிக்கையில் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் இருக்கிறார்கள். அதிக விழிப்புணர்வு கொண்ட தமிழத்தில்கூட கரோனா முதல் டோஸ் தடுப்பூசியை சுமார் 50 லட்சம் பேரும், இரண்டாவது டோஸை சுமார் 1 கோடி பேரும் இன்னமும் பெறாது இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இந்த விகிதம் இன்னமும் அதிகம். தடுப்பூசிகள் முழுமையாக சென்று சேர்வதுடன், பூஸ்டர் டோஸ் நடைமுறைகளும் முழுவதுமாக முடிந்திருப்பதும் நான்காவது அலையை எதிர்கொள்ள உதவும்.

கரோனா மட்டுமன்றி இதர வீரிய வைரஸ் பரவல்கள் முதலில் எட்டிப்பார்க்கும் கேரளம், மீண்டும் கரோனா பரவலுக்கு ஆளாகி உள்ளது. இதன் காரணமாக, கேரளத்துடன் ஏராளமான கதவு மற்றும் சாளரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தமிழகத்திலும் கரோனா பரவல் தொடர்பான எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.

வயோதிகர்கள் கவனம்

‘பிஏ.1’ வழியில் ‘பிஏ.2’ திரிபும், மருத்துவமனை அவசியமின்றி நோயாளிகளைத் தீண்டி விலகவே அதிகம் வாய்ப்புள்ளது. ஆனபோதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அவர்களில் இணைநோய் கண்டவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே, வீட்டிலுள்ள சீனியர்களை பூஸ்டர் டோஸ் வரையிலான தடுப்பூசி அரண்களால் பாதுகாப்பது குடும்பத்தினரின் கடமை. குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து வருடத்துக்கு ஒருமுறை போட்டுக்கொள்ளும் சீஸன் காய்ச்சல் தொடர்பான தடுப்பூசிகளையும் இவர்களுக்கு பரிசீலிக்கலாம். கரோனாவின் அடுத்தடுத்த அலைகள் காரணமாக, இந்த வருடாந்திர தடுப்பூசியின் வரிசையில் கரோனா தடுப்பூசி சேரும் காலமும் நெருங்கி வருகிறது.

வயோதிகர்கள் மட்டுமன்றி வயிற்று உபாதையால் நீண்டகாலமாய் அவதிப்படும் இதர வயதினரும் அதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் ஆரோக்கியத்தை உறுதிபடுத்திக்கொள்வதும், அவசியமெனில் மருத்துவப் பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுவதும் நல்லது. தடுப்பூசிக்கு அப்பால் வாய் வழியாக உட்கொள்ளும் புதிய ரக வைரஸ் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் தடுப்பு மருந்துகள் வளர்ந்த நாடுகளில் பிரபலமாகி வருகின்றன. ஆனால், அவை இன்னமும் இந்தியாவை எட்டிப்பார்க்கவில்லை. மேலும், முன்னதாக அளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் வீரியம் அடுத்தடுத்த அலைகளை எதிர்கொள்ளும் வகையில், மக்கள் உடலில் நீடித்திருக்கிறதா என்ற கேள்விகளுக்கும் உரிய ஆய்வு அடிப்படையிலான பதில்கள் இல்லை.

முகக்கவசத்துடன் போர்முனைக்கு விரையும் உக்ரைன் வீரர்கள்
முகக்கவசத்துடன் போர்முனைக்கு விரையும் உக்ரைன் வீரர்கள்

கரோனா போரில் தற்காப்பே வீரம்

உக்ரைன் உட்பட உலகின் பல்வேறு மூலைகளின் போர்முனைகளில் முகக்கவசத்துடன் போரிடும் வீரர்கள் சொல்வதும் இதைத்தான். போர்க்களத்தில் போராடி குண்டு பாய்ந்து இறப்பது வேண்டுமானால் வீரத்தில் சேரும்; அலட்சியம் காரணமாக கரோனாவில் சிக்கி உயிரிழப்பது எந்த வகையிலும் வீரத்தில் சேராது. எனவே, கரோனாவுடன் சாகசங்கள் ஏதும் முயற்சிக்காது, பழகிய கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையே இனி வரும் நாட்களிலும் தொடர்வோம். நான்கோ... நாற்பதோ... கரோனா அலை எதுவாயினும், கரோனா தடுப்பு உபாயங்களை முறையாக பின்பற்றினாலே திடமாக தற்காப்பு பெறலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in