‘டோலோ-650’ திருவிளையாடல்கள்!

‘காய்ச்சல்’ காணும் மருந்து நிறுவனமும் மருத்துவர்களும்
‘டோலோ-650’ திருவிளையாடல்கள்!

கரோனா பெருந்தொற்று பரவலின் மத்தியில் ’டோலோ 650’ காய்ச்சல் மாத்திரைகளை அதிகளவில் விற்றதில், வருமான வரி மோசடியில் ஈடுபட்டதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான ’மைக்ரோ லேப்ஸ்’ சிக்கியுள்ளது.

இந்த மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக பல மருத்துவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் முதல் சுற்றுலா செலவினம் வரை ரூ.1000 கோடிக்கு மேல் மைக்ரோ லேப்ஸ் செலவழித்திருக்கிறது. இதையொட்டி தொடரும் விசாரணைகள் அந்த மருந்து நிறுவனத்தை மட்டுமன்றி முறைகேடாக பலனடைந்த மருத்துவர்களையும் ’காய்ச்சல்’ காண செய்திருக்கிறது.

பாராசிட்டமால் சீக்ரெட்ஸ்

கரோனா பாதிப்பின் பிரதான அறிகுறியாக தீவிர காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது. மேலும், உடல் வலி உள்ளிட்ட கூடுதல் உபாதைகளும் கரோனா கண்டவர்களை படுத்தி எடுத்தன. இவற்றுக்கான ஒரே நிவாரணமாக பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். பாராசிட்டமால் என்ற பொதுப்பெயரிலான மாத்திரைகளை பல்வேறு மருந்து நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் தயாரித்து வெளியிடுகின்றன.

கரோனா அலைகளுக்கு மத்தியில் இந்த பாராசிட்டமால் மாத்திரைகள் விற்பனையில் உச்சம் தொட்டதில், போட்டியாளர்களை முந்தி ’டோலோ-650’ என்ற மாத்திரை முன்னணி வகித்தது. மக்கள் மத்தியில் இந்த மாத்திரை அதிகம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியது. பெருமளவிலான மருத்துவர்கள் டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரை செய்ததும், வரையறுக்கப்பட்ட இருப்புக்கும் மேலாக இந்த மாத்திரை சந்தையில் உலவியதும் இதன் கூடுதல் விற்பனைக்கான காரணம் என பின்னர் தெரிய வந்தது.

டோலோ-650 பிரபல்யத்துக்கு முன்னதாக க்ரோஸின் மற்றும் கால்பால் உள்ளிட்ட மாத்திரைகளே காய்ச்சல் மற்றும் உடல்வலி நிவாரணிக்கான இடத்தை பிடித்திருந்தன. திடீரென இவற்றை டோலோ முந்தியது குறித்து மருந்து விற்பனை உலகில் சந்தேகத்துக்கிடமான தகவல்கள் வெளியாகின. இடைத்தரகர்கள் வலையில் பல மருத்துவர்கள் சிக்கியதை பின்னர் இவை அம்பலமாக்கின.

குறிப்பிட்ட மருந்து அல்லது மாத்திரையைப் பரிந்துரை செய்வது மருத்துவரின் வரம்பிலேயே உள்ளது. நோயாளியின் உடல் பாதிப்பு, இதர தொந்தரவுகள் ஆகியவற்றை கணக்கிடுவதுடன் மாத்திரையின் திறன் மற்றும் பக்கவிளைவுகளையும் பரிசீலித்து உரிய மருந்துகளை அவர் பரிந்துரை செய்வார். பெரும்பாலும் குறிப்பிட்ட மருத்துவரின் ஆளுகைக்கு உட்பட்ட மருந்துக் கடையிலேயே இந்த மாத்திரை மருந்துகள் விற்பனையாகும். இந்த வகையில் தங்கள் நிறுவன மருந்துகளை அதிகளவில் பரிந்துரைக்குமாறு அதன் சார்பிலான விற்பனை பிரதிநிதிகள் மருத்துவர்களை நெருக்குவார்கள்.

மஞ்சள் குளிக்கும் மருத்துவர்கள்

கணிசமான மருத்துவர்கள் மருந்து விற்பனை பிரதிநிதிகள் விரிக்கும் வலையில் சிக்கி குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பதில் தீவிரம் காட்டுவார்கள். இதன் பிரதிபலனாக பரிசுப் பொருட்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலாக்கள் வரை மருந்து நிறுவனங்களின் செலவில் மஞ்சள் குளிக்கும் மருத்துவர்கள் உண்டு. இதற்கான செலவினங்களை மருந்தின் விற்பனை விலையில் உள்ளடக்கி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சமாளித்து விடும். இந்த முறையற்ற போக்கு அதிகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மருந்து நிறுவனங்களின் ஊக்கப் பரிசுகளுக்கு தடை விதிக்கப்பட்டன. ஆனபோதும் நடைமுறையில் இந்த அவலம் தொடரவே செய்கிறது.

மைக்ரோ லேப்ஸ் வலைத்தள முகப்பு
மைக்ரோ லேப்ஸ் வலைத்தள முகப்பு

டோலோ-650 விற்பனை முறைகேடு வாயிலாக இந்த மருத்துவத்துறை சர்ச்சை மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக மைக்ரோ லேப்ஸ் மருந்து நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித்துறை சுழற்றும் சாட்டையில் சாயம் வெளுத்து வருகிறது. பெங்களூருவை தலைமையகமாக கொண்ட இந்த மருந்து நிறுவனத்துக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. மேலும், 50 நாடுகளில் மைக்ரோ லேப்ஸ் கிளைபரப்பி உள்ளது. இந்திய நகர அலுவலகங்களில் முகாமிட்ட வருமான வரித்துறையினர் பல்வேறு நிழல் ஆவணங்களையும், கணக்கில் வராத சொத்துகளையும் கைப்பற்றி வருகின்றனர்.

2020-2021 இரண்டாம் காலாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், டோலோ-650 மாத்திரைகள் தயாரிப்பில் மட்டுமே விற்பனை 138 சதவீதமாவும், வருவாய் 289.6 சதவீதமாகவும் உயர்வு கண்டுள்ளதாக மைக்ரோ லேப்ஸ் தெரிவித்துள்ளது. நிதர்சன தரவுகள் இவற்றைவிட அதிகமாக இருக்கும் என்பதையே தொடரும் வருமான வரித்துறை விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.

கிளம்பும் உப பூதங்கள்

மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் டோலோ-650 மாத்திரைகள் மட்டுமன்றி நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. கரோனா பரவலின் மத்தியில் நீரிழிவு உள்ளிட்ட இணைநோய்களின் அச்சுறுத்தலும் உச்சம் தொட்டிருந்தது. அந்த வகையில் காய்ச்சல் மாத்திரைகள் மட்டுமன்றி நீரிழிவு எதிர்ப்பு மருந்து விற்பனையிலும் மைக்ரோ லேப்ஸ் தனியாக வருவாய் குவித்தது. இப்படி தொடரும் வருமான வரித்துறை விசாரணைகளில் நித்தம் ஒரு பூதம் கிளம்பி வருகிறது.

முதல் சுற்று தகவலில் டோலோ-650 விற்பனையில் மைக்ரோ லேப்ஸ் வரி ஏய்ப்பு செய்தது மட்டுமன்றி, அரசு அனுமதித்ததைவிட அதிக எண்ணிக்கையிலான மாத்திரைகளை தயாரித்து சந்தையில் புழங்கவிட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானது. மருந்து நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் உரிமத்துக்கு ஏற்றவாறு மருந்து மாத்திரைகளை தயாரிக்க அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படும். மருந்து தயாரிப்பின் தர நிர்ணயத்துக்கான இந்த கட்டுப்பாட்டினை மைக்ரோ லேப்ஸ் அப்பட்டமாக மீறியுள்ளது.

தனது வலைப்பின்னலில் உள்ள மருத்துவர்களை நம்பியும் கரோனா நெருக்கடியை சாதகமாக்கியும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவிலான மாத்திரைகளை மைக்ரோ லேப்ஸ் உற்பத்தி செய்தது. அப்படி புழக்கத்தில் விடப்பட்ட மாத்திரைகளின் தரம் குறித்த கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன. அளவு மற்றும் வீரியம் மிகும் காய்ச்சல் மாத்திரைகள் இயல்பாகவே கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை பாதிக்கக் கூடியவை. இரண்டாம் அலையின்போது இந்தியர்கள் விழுங்கிய 350 கோடி டோலோ மாத்திரைகளால் தேசத்தின் ஒட்டுமொத்த கரோனா கவலைகள் புதிய திரிபு பெற்றுள்ளன.

டோலோ மாத்திரைகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் உட்பட தனது சகல தயாரிப்புகளையும் பரிந்துரைக்குமாறு மருத்துவர்களை நிர்பந்திக்கும் நோக்கில் பல்வேறு முறையற்ற செலவினங்களை மைக்ரோ லேப்ஸ் மேற்கொண்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.1000 கோடி வரை இந்த நிறுவனம் செலவிட்டதற்கான ஆவணங்கள் தற்போது சிக்கியுள்ளன. இந்த விசாரணை முழுமூச்சில் தொடர்வதும், இதர விசாரணை அமைப்புகள் களத்தில் இறங்குவதும் மருத்துவத்துறை மோசடிகளின் உப பூதங்களை அம்பலப்படுத்த வாய்ப்பாகும்.

மருத்துவ மோசடிகள் முகமூடி அவிழுமா?

உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை முன்வைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் கொள்ளையில் ஈடுபட்டதாக பெருந்தொற்று பரவலுக்கு நடுவே பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளன. மருந்து மாத்திரை விற்பனையில் செயற்கை தட்டுப்பாடு, பொதுஜனத்தின் உயிராசையில் கொழித்த கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கூட்டுக்கொள்ளை மற்றும் மருத்துவ காப்பீடு பெயரிலான ஏய்ப்புகள் என அப்போதைய மருத்துவ நெருக்கடி சூழலில் முறையாக செவிமெடுக்கப்படாத கூக்குரல்கள் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பாகி உள்ளது.

கரோனா பரவலின் புதிய அலைக்கான சாத்தியக்கூறுகளுக்கு மத்தியில், முந்தைய அலைகளின் மருத்துவ மோசடிகள் அம்பலமாவது முக்கியத்துவம் பெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in