பழைய பூங்காக்களை பராமரிக்காமல் வைகை ஆற்றங்கரையை அழித்துப் புதிய பூங்காக்களா?

பதறும் இயற்கை ஆர்வலர்கள்
பழைய பூங்காக்களை பராமரிக்காமல் வைகை ஆற்றங்கரையை அழித்துப் புதிய பூங்காக்களா?

பராமரிப்பு இல்லாமல் முட்புதர் மண்டிக் கிடக்கும் 60-க்கும் மேற்பட்ட நகர்ப்புற பூங்காக்களை சீரமைக்காமல், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றங்கரையை அழித்து கரையோரத்தில் 3 இடங்களில் பூங்காக்கள் அமைப்பதற்கு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பொதுவாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கும், ஆற்றங்கரைகளையும், கண்மாய்களையும் அழித்துப் பொழுதுபோக்கு இடங்கள், கட்டிடங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால், மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றங்கரையோர நகர்ப்பகுதியில் 3 கி.மீ தொலைவுக்கு மாநகராட்சியும், 9 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து ரூ.384 கோடியில் 50 அடி அகலத்துக்கு பிரம்மாண்ட நான்குவழிச் சாலை அமைத்துள்ளன.

இந்தச் சாலையால் நகர்ப்பகுதியில் வைகை ஆறு சுருங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால், மாநகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் நகர்ப்பகுதியில் நெரிசலை குறைக்கவே இந்தச் சாலை அமைப்பதாகவும், நகரின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஆற்றங்கரையோரமாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும் என்கின்றனர்.

ஆனால், தற்போது வைகை ஆற்றங்கரையோரம் போடப்பட்ட இந்தச் சாலைகள் பல இடங்களில் தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்தால்தான் சாலையை தொடர்ச்சியாகப் போடமுடியும். ஆனால், தற்போதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாததால், மாநகராட்சியால் தொடர்ச்சியாக சாலைகளைப் போட முடியவில்லை. அதனால், இந்தத் திட்டமே முடங்கிப்போய் நிற்கிறது.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.2 கோடியில் குலமங்கலம் ரோடு ஜங்ஷன் பகுதியில் பாலத்துக்குக்கீழ் எல்ஐசி அருகே ஒரு பூங்காவும், ஒபுளாபடித்துறை அருகே மற்றொரு பூங்காவும் அமைக்கப்படுகின்றன. அதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரிப் பேராசிரியர்கள், பொறியியல் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுபோல், கோச்சடையில் மற்றொரு திட்டத்தில் ஒரு பூங்கா அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

நகர்ப்புறங்களில் உள்ள பாழடைந்த எம்ஜிஆர் பூங்கா, பராமரிப்பு இல்லாத மாநகராட்சி எக்கோ பார்க் உட்பட 60-க்கும் மேற்பட்ட பூங்காக்களை மாநகராட்சி பராமரிக்காமல் உள்ள நிலையில், தற்போது ஆற்று நீர்வழித் தடங்களை அழித்துப் பூங்கா அமைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும், ஏற்கெனவே ஆற்றங்கரையோரத்தில் சாலை அமைத்து, அந்தத் திட்டம் முடங்கிப்போய் உள்ளநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடர்ந்து ஆற்றங்கரையில் கொண்டுபோய் கொட்டுவது ஏன் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நீர்நிலை ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறும்போது, ‘‘ஒரு நதியின் ஓட்டம், வழித்தடம், மரங்கள், செடி கொடிகளோடுதான் இருக்க வேண்டும். உலக நாடுகளில் நதிகளுக்கான தனிச் சட்டமே இருக்கிறது. உச்ச நீதிமன்றமும், பசுமைத் தீர்ப்பாயம் மிகுந்த கறாராக உள்ளன. ஆனால், மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும் அதை கடைபிடிக்காமல் சாலை போடுவதற்கு வைகை ஆற்றங்கரையோரங்களில் நாங்கள் வைத்த மரங்களை அகற்றினர். கேட்டால் உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொன்னதாக கூறினர். மரங்கள் ஆக்கிரமிப்பு என்று மதுரை பொதுப்பணித் துறைதான் புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு நதிக்கு கரை இருக்க வேண்டும். ஆனால், மதுரை நதிக்கு அது இல்லை. மதுரை வைகை ஆற்றில் முன்பு நீரோட்டம் இருந்தால் நிலத்தடி நீர் உயரும். தற்போது ஆற்றின் இரு கரைகளிலும் நீச்சல் தொட்டி போல் 15 அடி ஆழத்துக்கு குழிதோண்டி கான்கிரீட் காம்பவுண்ட் எழுப்பியுள்ளனர். இதனால் மதுரையின் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ரோடு போடுவதாகக் கூறி தார்க்கழிவுகளை ஆற்றங்கரையில் கொட்டியுள்ளனர். அதுவும் ஆற்றின் நீரோட்டத்தை பாதிக்கும். தற்போது இருக்கிற பூங்காக்களை பராமரிக்காமல், ஸ்மார்ட் சிட்டி பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் பூங்காக்கள் அமைக்கின்றனர். இந்த பூங்காக்களையும் கட்டிய பிறகு பராமரிக்க மாட்டார்கள்’’ என்றார்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘ஆற்றங்கரை சாலைகளை முடிக்கப் போகிறோம். பூங்காக்களால் ஆற்றங்கரைகள் பாதிக்கப்படாது’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in