கரோனா திரிபுகள் திரும்பவும் தொற்றுமா?; புதிய அலைக்கு சாத்தியமா?

ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?
கரோனா திரிபுகள் திரும்பவும் தொற்றுமா?; புதிய அலைக்கு சாத்தியமா?

பெருந்தொற்றின் பிடியிலிருந்து இந்தியா வேகமாக மீண்டு வருகிறது. இதன் மத்தியில், கரோனாவின் திரிபுகள் மீண்டும் தாக்குமா என்றும் மற்றுமொரு அலை எழ வாய்ப்புண்டா என்றும் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஏற்கனவே தொற்றுக்கு ஆளானவர் மீண்டும் பாதிப்புக்கு ஆளானதை, ஒமைக்ரான் பரவலின் மத்தியில் உலகம் அதிகம் கண்ணுற்றது. ஒரு சிலர் மூன்றாவது முறையாக தொற்று பாதிப்புக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்கள். அடுத்தடுத்த அலைகளில் தடுப்பூசி போட்டவர்களும் தொற்றினால் பாதிக்கப்பட்டார்கள். இந்தப் போக்கு இனியும் நீடிக்குமா, இனியொரு திரிபு எழுந்தால் மீண்டும் தொற்றுக்கு ஆளாவோர் நிலை என்னாகும் என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டென்மார்க்கை சேர்ந்த சீரம் ஆய்வு நிறுவனம் ஒன்று இது தொடர்பான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒரு முறைக்கு மேல் தொற்றுக்கு ஆளோனோர் தொடர்பான தரவுகள் இந்த ஆய்வுகளில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மற்றுமொரு கரோனா திரிபு பரவினாலும் அதன் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் என்றே தெரிய வந்துள்ளது. மேலும் தடுப்பூசி பெறாத, வயதில் இளையவர்களுக்கே இந்த பாதிப்பும் இருக்கும் என்றும், அடுத்து வரும் சில மாதங்களுக்கு மற்றுமொரு திரிபு பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிய வந்துள்ளது.

கரோனா வைரஸ் நித்தம் திரிபுகளுக்கு ஆளாகக் கூடியது. ஆனால் அவற்றில் ஒருசில மட்டுமே பொருட்படுத்தக் கூடியவையாக உள்ளன. அந்த வகையில் ஒமைக்ரானின் பிஏ.1 பாதித்து குணமடைந்தவர்களை பிஏ.2 மீண்டும் பாதிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் போக்கு உலகின் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருக்கின்றன. உதாரணமாக இங்கிலாந்தை அலைக்கழித்த ஒமைக்ரான், இந்தியாவில் மென்மையான போக்கிலே பரவியது.

இதுபோன்ற வேறுபாடுகள் அதிகரிப்பது, பெருந்தொற்றுப் பரவலின் இறங்குமுகத்தை குறிக்கும் என்கிறார்கள். மேலும் தொற்று பரவும் பகுதியில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தும் பாதிப்பின் வீரியம் வெளிக்காட்டும். இந்த வகையில், உலகளாவிய பெருந்தொற்று இனி நாடுகள், பிராந்தியங்களுக்கு ஏற்றவாறு வேறுபட்டு சுருங்கும் நிலையை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டே சில நாடுகள் சாதாரண சளித் தொற்றின் வகையில் கரோனாவை வகைப்படுத்த முடிவு செய்திருக்கின்றன.

தடுப்பூசி போட்டுக்கொள்வதும், மேலும் சில மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதும், கரோனாவுக்கு எதிரான போரில் முழுமையாக வெல்லவும் உதவும்.

Related Stories

No stories found.