பரவும் கரோனாவால் குறையும் செவிலியர்: திணறும் அமெரிக்கா!

பரவும் கரோனாவால் குறையும் செவிலியர்: திணறும் அமெரிக்கா!

அதிகரிக்கும் கரோனா பரவலின் மத்தியில் செவிலியர் பற்றாக்குறையால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் திணறி வருகின்றன.

அடுத்தடுத்த கரோனா அலைகளால் அமெரிக்கா கடும் அவதிக்கு ஆளாகி வருகிறது. முழுமையான கரோனா தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் ஆகியவை வழங்கப்பட்டும், புதிய திரிபுகளுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அங்கே அதிகரித்து வருகிறது. உயிர்ப்பலிகளின் எணிக்கையிலும் உலகளவில் முதன்மை வகிக்கிறது.

உயிரச்சத்தால் மருத்துவமனையில் அனுமதியாகும் கரோனா நோயாளிகளை பராமரிப்பதற்கு, போதிய எண்ணிக்கையிலான செவிலியர்கள் இன்றி அமெரிக்கா திணறி வருகிறது. செவிலியர் பற்றாக்குறைக்கு பல்வேறு காரணங்கள் அங்கே சொல்லப்படுகின்றன. மருத்துவ படிப்பு அளவுக்கு செவிலியர் படிப்பில் விரும்பி சேருவோர் அமெரிக்காவில் குறைவு. காரணம், தெற்காசிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் குவியும் செவிலியர்கள் குறைந்த ஊதியத்தில் போட்டியிட்டதால், அதிக ஊதியம் எதிர்பார்க்கும் அமெரிக்கர்கள் மத்தியில் செவிலியர் படிப்புகளில் ஆர்வம் குறைந்தது. இதனால் ஆண்டுதோறும் செவிலியர் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் தகுதிபடைத்த செவிலியர் எண்ணிக்கை அங்கே குறைந்து வருகிறது.

முந்தைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறான அணுகுமுறைகள் மற்றும் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான கெடுபிடிகள் ஆகியவற்றாலும் அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டு செவிலியர்களின் எண்ணிக்கை குறைந்தது. பின்னர் பொறுப்பேற்ற ஜோ பைடன் நிர்வாகம் பல சலுகைகளை அறிவித்து வந்த போதும், அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா பரவல் காரணமாக அங்கு செல்ல செவிலியர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அடுத்தடுத்த அலைகளில் வேகம் காட்டும் கரோனா மற்றும் அதன் காரணமாக பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக உள்நாட்டு செவிலியர்களும் தங்கள் பணிகளை துறந்து வருகின்றனர். இந்தநிலை நீடித்தால் நாட்டின் மருத்துவக்கட்டமைப்பே ஸ்தம்பிக்கும் என்றும் மருத்துவ துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்போதைக்கு வெளிநாட்டு நர்சுகளுக்காக கவர்ச்சிகரமான ஊதிய விகிதங்களுடன், அமெரிக்கா கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறது. இந்த கரோனா காலம் என்றில்லை, அதன் பிறகும் அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கும், அமெரிக்காவில் இருபால் செவிலியர் பணிகளுக்கான தேவைகள் அதிகரித்தே காணப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.