பேசும் படம் - 11: புரட்சி இரட்டையரின் இன்னொரு பக்கம்

பேசும் படம் - 11: புரட்சி இரட்டையரின் இன்னொரு பக்கம்

புரட்சியாளர்கள் என்றதும்இன்றைய இளம் தலைமுறையினருக்கு முதலில் நினைவுக்கு வருபவர்கள் பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும்தான். கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புரட்சியாளர்களாக இவர்கள் கருதப்படுகிறார்கள். என்னதான் புரட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் மென்மையான மனம் உண்டு; பொழுதுபோக்குகளில் ஆர்வம் உண்டு என்பதை விளக்கும் படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். சே குவேராவும் - பிடல் காஸ்ட்ரோவும் தங்கள் போராட்ட வாழ்க்கைக்கு நடுவில், சில மணி நேரங்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கியூபா புரட்சியில் முக்கிய அங்கம் வகித்தவரான சே குவேரா 1928-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ எனும் ஊரில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. சே குவேராவின் தந்தை சோஷலிச ஆதரவாளராக இருந்ததால் சிறுவயதில் இருந்தே இடதுசாரி சிந்தனைகள் மீது சே குவேராவுக்கு அதிகமான ஈர்ப்பு இருந்தது. தன் இளவயதில் இரு சக்கர வாகனத்தில் பல நாடுகளில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டார் சே குவேரா. அந்தப் பயணத்தின்போதுதான் பல நாடுகளில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டார்.

இதே காலகட்டத்தில், ‘ஜூலை 26’ என்ற இயக்கத்தின் மூலம் கியூபாவின் சர்வாதி காரியான புல் ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ. சாண்டியாகோ நகரில் அரசு ராணுவத்தின் மீது பிடல் காஸ்ட்ரோவின் படை முதல் முதலாக தாக்குதல் நடத்திய நாள் 1953-ம் ஆண்டு ஜூலை 26. இதனால் பிற்காலத்தில் காஸ்ட்ரோ நடத்திய இயக்கத்தின் பெயராகவே ‘ஜூலை 26’ மாறிவிட்டது.

தனது மெக்ஸிகோ பயணத்தின்போது 1955-ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்த சே குவேரா, அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருடன் சேர்ந்து கியூபா அரசுக்கு எதிரான புரட்சிப் போரில் குதித்தார். ஏற்கெனவே பிடல்காஸ்ட்ரோவிடம் திணறிக்கொண்டிருந்த கியூபா அரசு, அவருடன்சே குவேராவும் இணந்த பிறகு மேலும் திணறியது. பல்வேறுஅடக்குமுறைகளைக் கையாண்டபோதிலும் அதையெல்லாம்சே குவேரா - பிடல் காஸ்ட்ரோ கூட்டணி முறியடித்தது. இறுதியில், 1959-ம் ஆண்டில் இருவரும்  நினைத்தபடி சோஷலிச கியூபாவை நிறுவினர்.

இந்தப் போராட்டம் வெற்றியடைந்த பிறகு, இருவரும் கியூபாவின் கடற்பகுதியில் ஒருநாள் பொழுதுபோக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்ததைத்தான் இங்கே படமாக்கியுள்ளார் ஆல்பர்டோ கோர்டா (Alberto Korda). இவர் பிடல் காஸ்ட்ரோவின் பிரத்யேக புகைப்படக்காரர். இந்தப் படம் மட்டுமின்றி சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் மென்மையான மறுபக்கத்தைக் காட்டும் வகையில் சே குவேரா கோல்ஃப் ஆடுவது உள்ளிட்ட பல்வேறு படங்களையும் இவர் எடுத்துள்ளார்.

இன்று சில இளைஞர்களின் டி ஷர்டுகளில் புரட்சியின் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ள சே குவேராவின் படத்தை எடுத்தவரும் ஆல்பர்டோ குவேராதான்! சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படங்களின் நெகட்டிவ்களை 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஆல்பர்டோ கோர்டாவின் மகள் நோர்கா விற்பனை செய்துள்ளார்.

ஆல்பர்டோ கோர்டா

ஆல்பர்டோ கோர்டாவின் (Alberto Korda) முழுப் பெயர் ஆல்பர்டோ டயஸ் குடிரெஸ்.

1928-ம் ஆண்டு ஹவானாவில் பிறந்த இவர், சிறு வயதில் தனது அப்பா பரிசளித்த 35 எம்எம் கோடாக் கேமரா மூலம் படம் எடுக்கக் கற்றுக்கொண்டர். படிப்பைவிட புகைப்படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பின்னாளில் நண்பர் ஒருவருடன் இணைந்து ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்கினார்.

1959-ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டபோது, பத்திரிகைகளின் சார்பில் அதைப் படமெடுக்க அனுப்பப்பட்ட புகைப்படக்காரர்களில் ஆல்பர்டோ கோர்டாவும் ஒருவர். அப்போது கோர்டா எடுத்த படங்கள் பிடல் காஸ்ட்ரோவைக்  கவர, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது .

பின்னாளில் பிடல் காஸ்ட்ரோஎங்கு சென்றாலும் அவரைப் படமெடுக்க ஆல்பர்டோ கோர்டா சென்றார். பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் பல அரிய புகைப்படங்களை எடுத்த கோர்டா 2001-ம் ஆண்டு பாரிஸ் நகரில் காலமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in