பேசும் படம் - 9: சோகத்தில் முடிந்த முதல் பயணம்

பேசும் படம் - 9: சோகத்தில் முடிந்த முதல் பயணம்

கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்து, பின்னர் மிகப்பெரிய சோகமாக மாறிய விஷயம் டைட்டானிக் கப்பல். வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உருவாகி, 1912-ல் முதல் பயணத்துக்காக கடலில் விடப்பட்ட நேரத்தில், உலகின் மிகப் பெரிய நீராவிக் கப்பலாக இது விளங்கியது. கடலில் நகரும் மிகப்பெரிய நகரமாக அழைக்கப்பட்ட இந்தக் கப்பல், 882 அடி நீளமும், 175 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டதாக பார்ப்பவர்களை எல்லாம் பிரமிக்க வைத்தது. இந்திரலோகம்போல் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட இக்கப்பலில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்பதே பலரது லட்சியமாக அந்தக் காலகட்டத்தில் இருந்தது.

இத்தகைய சிறப்புவாய்ந்த டைட்டானிக் கப்பல், 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் இருந்து நியூயார்க் நகரை நோக்கி முதல் பயணத்தைத் தொடங்கியது. இக்கப்பலின் முதல் பயணத்தில் தாங்களும் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஏராளமானோர் போட்டியிட்டாலும் இறுதியில் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்பட்ட 2,240 பயணிகளுக்கே இதில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படிப் பயணித்தவர்களில் ஒருவரான அயர்லாந்தைச் சேர்ந்த இளம் பாதிரியார் ஃபிரான்சிஸ் பிரவுன் (Francis Browne), இந்தக் கப்பலின் முதல் கட்டப் பயணத்தில் அவர் அதன் ஒரு அங்கமாக இருந்தார்.

 சவுத்தாம்ப்டன் நகரில் பயணத்தைத் தொடங்கி குவீன்ஸ்டவுனை அடையும் வரை அந்தக் கப்பலில் பிரவுன் பயணித்தார். இந்தப் பயணத்தில் பங்கேற்பதற்கான டிக்கெட்டை அவரது மாமா வாங்கிக் கொடுத்திருந்தார். புகைப்படம் எடுப்பதில் கை தேர்ந்தவரான பிரவுன், கப்பலில் தான் கண்ட காட்சிகளையும், அதன் பிரம்மாண்டங்களையும் பிரமிப்புடன் ஒன்றுவிடாமல் தன் கேமராவில் படமாக்கிக் கொண்டிருந்தார். இந்தக் கப்பலில் நியூயார்க் வரை செல்ல விரும்பிய அவர், அதே கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த பணக்கார குடும்பத்தின் உறுப்பினர்களிடம் பேசி அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார்.

ஆனால், குவீன்ஸ்டவுனில் இக்கப்பல் கரை சேர்ந்ததும், பிரவுனின் மேலதிகாரியிடம் இருந்து அவருக்குக் கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘கப்பல் பயணத்தை உடனே முடித்துக்கொண்டு, தன்னை வந்து சந்திக்க வேண்டும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலதிகாரியின் கட்டளையை மீற முடியாததால் குயீன்ஸ்டவுனில் தரையிறங்கினார் பிரவுன். கப்பலில் தொடர்ந்து பயணம் செய்ய முடியாத சோகத்தில், அதை லாங் ஷாட்டில் படம்பிடித்து வைத்துக்கொண்டார். அதுதான் டைட்டானிக்கின் கடைசி புகைப்படமாக இருக்கும் என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை.

இந்தப் படத்தை அவர் எடுத்த ஓரிரு நாட்களில் ஏப்ரல் 15-ம் தேதி இரவில் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்பகுதியில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறையின் மீது மோதி, டைட்டானிக் கப்பல் உடைந்தது. உலகின் மிகப்பெரிய கோர விபத்துகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க, அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த கப்பல்கள் விரைந்தன. ஆனால் அந்தக் கப்பல்கள் டைட்டானிக்கை நெருங்குவதற்குள் அது கடலில் மூழ்கியது. லைஃப் போட்டுகள் மூலம் சிலர் மட்டும் தப்பிய நிலையில் 1,514 பேர் பலியானார்கள். ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்ற முத்திரையுடன் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்கள், சபிக்கப்பட்டவர்களாக மாறி கடலில் உயிரிழந்த மிகப்பெரும் சோகத்தின் சாட்சியாக இந்தப் படம் விளங்குகிறது. டைட்டானிக்கில் பிரவுன் எடுத்த படங்களே இன்றளவும் அதன் புகழை உலக அளவில் சொல்லிவருகிறது.

ஃபிரான்சிஸ் பிரவுன்

அயர்லாந்தில் உள்ள பக்ஸ்டன் ஹவுஸ் என்ற இடத்தில் 1880-ம் ஆண்டு பிறந்தவர் ஃபிரான்சிஸ் பிரவுன். தனது பெற்றோருக்கு 8-வது குழந்தையாகப் பிறந்த இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு மாமாவிடம் வளர்ந்தார். சிறு வயதில் இருந்தே புகைப்படங்களை எடுப்பதில் பெரும் விருப்பம் கொண்டிருந்த இவர், 1897-ம் ஆண்டு, தனது முதல் கேமராவை வாங்கினார். அந்தப் புது கேமராவில் பல இடங்களையும் படம்பிடிப்பதற்காகவே ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்தப் பயணத்துக்குப் பிறகு திருச்சபையில் சேர்ந்தபோதிலும் புகைப்படங்களை எடுக்கும் ஆர்வம் இவரைவிட்டுப் போகவில்லை. இந்த ஆர்வத்தால்தான் டைட்டானிக் கப்பலின் முதல் பயணத்தில் பங்கேற்று பல படங்களை அவர் எடுத்தார். முதலாவது உலகப் போரிலும் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in