பேசும் படம் - 5: இந்தியாவின் முதல் கோப்பை!

பேசும் படம் - 5: இந்தியாவின் முதல் கோப்பை!

1983-ம் ஆண்டுவரை இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இப்போது இருப்பது போல் வெறித்தனமான ரசிகர்கள் அதிகம் இல்லை. உலக அரங்கிலும் இந்திய கிரிக்கெட் அணி அவ்வளவாய் பேசப்படவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கஜானாவும் சுபிக்‌ஷமாக இல்லை. வெளிநாட்டு பயணங்களின்போதுகூட  ரசிகர்களின் வீடுகளில் வீரர்களைத் தங்கவைக்கும் நிலை இருந்தது. இந்தத் தடைகளையெல்லாம் உடைத்து இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் இன்று முதல் இடத்தில் இருப்பதற்குக் காரணம் 1983-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்தான்.

இங்கிலாந்தில் நடந்த இந்த உலகக் கோப்பை போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் ‘கபில்’ஸ் டெவில்ஸ்’ என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்திய அணி சென்றது. இத்தொடரின் முதல் லீக் போட்டியிலேயே, முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்த உலகமே அதைப்பற்றி பரபரப்பாக பேசியது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்த இந்திய அணி தடதடவென முன்னேறி இறுதி ஆட்டம் வரை வந்தது.

1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை மீண்டும் சந்தித்தது இந்தியா. திறமைவாய்ந்த வீரர்களைக் கொண்ட அணிக்கும் - லாரி டிரைவர்களைக் கொண்ட அமெச்சூர் அணிக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டியாக இங்கிலாந்து பத்திரிகைகள் இதை எழுதின. அதற்கு ஏற்றார்போல முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியும் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மேற்கிந்திய தீவுக்குதான் உலகக் கோப்பை என்று பலரும் அடித்துச் சொன்னார்கள். இந்திய வீரர்களும் துவண்டு போனார்கள்.

ஆனால் அணியின் கேப்டனான கபில்தேவ் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. “நாம் இத்தனை தூரம் வருவோம் என்று யாரும் நினைக்கவில்லை. வந்துவிட்டோம். ஏற்கெனவே இத்தொடரில் ஒருமுறை மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றிருக்கிறோம். மீண்டும் வெல்ல முடியும் என்று நம்புவோம். கடுமையாக போராடுவோம். பீல்டிங்கில் பந்து நம்மைத் தேடி வருவதற்குள் நாம் பந்தைத் தேடிச் செல்வோம்” என்ற கபிலின் வார்த்தைகள் ஒவ்வொரு வீரருக்கும் உத்வேகத்தைக் கொடுத்தன. அந்த உத்வேகம்தான் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியாவுக்குக் கோப்பையைப் பெற்றுத்தந்தது.

அந்த உலகக் கோப்பையுடன் கபில்தேவும், ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மொகிந்தர் அமர்நாத்தும் வெற்றிக் களிப்புடன் நிற்க இந்தப் படத்தை எடுத்தார் பிரபல புகைப்படக்காரரான பாட்ரிக் ஈகர் (Patrick Eagar). இந்திய கிரிக்கெட் அணி, இன்று பல சாதனைகளைப் படைக்கலாம். ஆனால் அந்த சாதனைகளுக்கான விதை ஊன்றப்பட்ட நாள் 1983, ஜூன் 25.

பாட்ரிக் ஈகர்

1944-ல் இங்கிலாந்தில் பிறந்த பாட்ரிக் ஈகர், கிரிக்கெட் உலகுக்கு மிக நெருக்கமானவர். இங்கிலாந்தின் ஹாம்ஷயர் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான டெஸ்மண்ட் ஈகரின் மகனான இவர், தனது பாட்டியால் பரிசாக அளிக்கப்பட்ட கேமராவை வைத்து 8 வயதிலேயே படங்களை எடுக்கத் தொடங்கினார். 1965 முதல் 2011 வரை புகைப்படக்காரராக பணியாற்றிய ஈகர், மொத்தம் 325 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை (இதில் 98 ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டிகளும் அடங்கும்) படம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்காக இவரை போட்டோகிராபர்களின் பிராட்மேன் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கிறார்கள். கிரிக்கெட் ஸ்டார்கள் பலருக்கும் நெருக்கமான இவர், 2011-ல், பணி ஓய்வுபெற்றார். இவருக்கு இங்கிலாந்தின் விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ‘டக் கார்டனர்’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் தொடர்பான பல்வேறு புத்தகங்களையும் பாட்ரிக் ஈகர் எழுதியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in