பேரு வைப்பதில் காட்டும் கரிசனம் சோறு வைப்பதிலும் இருக்கணும்!

பேரு வைப்பதில் காட்டும் கரிசனம் சோறு வைப்பதிலும் இருக்கணும்!

அம்மாவின் அடுப்பங்கரை நம் எல்லோருக்கும் மிகப்பிடித்தமானதுதான். அம்மாவின் வசிப்பிடமாகவே மாறியிருக்கும் அந்த இடத்திலிருந்து புகைசூழ்ந்த விறகடுப்பில் அவள் ஆக்கிப்போட்ட அந்த அமுதுதான் தொண்டைக்குழியில் உயிர் ஊசலாடும் கடைசி காலம் வரையிலும் நமக்கு ஊட்டம் தருவதாக இருக்கிறது. அம்மாவின் கைப்பக்குவம் அவள் பெற்ற மகள்களிடமும் கைவரப்பெறாமல், கட்டிவந்த மனைவியிடமும் கிடைக்கப்பெறாமல் காலம் முழுவதும் நல்லசோற்றுக்காக ஏங்கி வாழ்பவர்கள் நம்மில் அதிகம்!

வீட்டுப் பக்குவத்தின் சாயல் எங்காவது கிடைத்துவிட்டால், அதற்காக மைல் கணக்கில் வண்டிகட்டிச் சென்றாவது சாப்பிட்டுவந்தவர்கள் நம் முன்னோர்கள். மயிலாடுதுறை காளியாகுடி ஹோட்டல் காபிக்காக தவம் கிடந்தவர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். தஞ்சாவூர் ‘காமாட்சி மெஸ்’ விரால் மீனுக்காக வரிசைகட்டி நின்ற மிராசுதார்களையும் பார்த்திருக்கிறேன். திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நாமெல்லாம் அறிந்ததுதான். அதன் சுவைக்கு இருக்கும் மவுசின் காரணமாக ஊருக்கு ஊர், சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் ‘தலப்பாக்கட்டி’களைத் திறக்கிறார்கள். ஆம்பூர் பிரியாணிக்கும் ஒரு தனி இடம் உண்டு.

அரிசிக்குச் சம அளவில் ஆட்டுக்கறியைப் போட்டு பிரத்தியேகமாகச் செய்யப்படும் பிரியாணி அது. அதன் அருமை அறிந்தவர்களை வளைக்க தற்போது குக்கிராமங்களிலும்கூட ‘ஆம்பூர் பிரியாணி’ பெயர் பலகைகள் தொங்குகின்றன. உண்மையைச் சொல்லப் போனால், ஒரிஜினலுக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்தக் கடைகளில், ஆட்டுக்கறி கலந்த புளிச்சோற்றைத்தான் பிரியாணி என்று அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்குப் பலரும் இப்படித்தான் பிரபலமான ஹோட்டல்களின் பெயரை தங்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சென்னையில் பிரபலமான பொன்னுசாமி ஹோட்டல் பெயரைத் தமிழகத்தில் பல முக்கிய நகரங்களிலும் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் பொன்னுசாமி என்ற பெயருக்கு முன்னால் ‘ நியூ’ என்றோ அல்லது அந்த ஊரின் பெயரையோ சேர்த்து வைத்திருக்கிறார்கள். இதேபோலத்தான் சரவணபவனும். ஒவ்வொரு ஊரிலும் காணப்படும் அதன் பெயர்ப்பலகை அதுவும் ஒரு உயர்தர ஹோட்டல் என்ற தோற்றத்தை நம்மையறியாமலேயே நமக்குள் உருவாக்கிவிடுகிறது. இதைப் பார்த்ததுமே, வயிற்றின் பசியறிந்த கால்கள் தானாக உள்ளே நுழைந்து விடுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in