100க்கும் மேற்பட்ட நாய் குட்டிகளை கொன்றதாக 2 குரங்குகள் சிறைபிடிப்பு!

பழிக்குப்பழி காரணமா?
100க்கும் மேற்பட்ட நாய் குட்டிகளை கொன்றதாக 2 குரங்குகள் சிறைபிடிப்பு!
பிடிபட்ட குரங்குகள்

மாகாராஷ்டிரம் மாநிலத்தில், பழிக்குப்பழி நடவடிக்கையாக நாய்க்குட்டிகளை குறிவைத்து கொன்றதாக, 2 குரங்குகளை வனத்துறையினர் சிறைபிடித்துள்ளனர்.

இப்படியும் நடக்குமா என்று வியப்பூட்டும் செய்திகள் அவ்வப்போது நம்மை கடந்து செல்வதுண்டு. அப்படியொரு சம்பவம் மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூர் அருகே நடந்துள்ளது.

இப்பகுதியின் பீட் மாவட்டத்தில் அமைந்துள்ளது லாவூல் கிராமம். 2 மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள நாய்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு குரங்குக் குட்டியை விரட்டி கொன்றதாம். இதனையடுத்து, தொடர்ச்சியாக லாவூல் மற்றும் அருகமை கிராமங்களில் நாய் குட்டிகள் இறப்பு அதிகரித்து வந்துள்ளது.

சந்தேகமடைந்த அப்பகுதி இளைஞர்கள் தங்களுக்குள் பேசி வைத்து கிராமத்தை கண்காணித்துள்ளனர். அப்போது அவர்கள் கண்டுணர்ந்த காட்சியில் அரண்டு போனார்கள். 2 வளர்ந்த குரங்குகள், நாய் குட்டிகளை குறிவைத்து கவர்ந்து செல்வதும், உயரமான மரங்கள் மற்றும் கட்டிடங்களிலிருந்து அவற்றை கீழே வீசிக் கொல்வதையும் கண்டுள்ளனர். இவற்றை அடுத்தடுத்த சம்பவங்களிலும் கிராமத்தார் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த 2 குரங்குகளையும் பிடிக்கவும், விரட்டியடிக்கவும் இளைஞர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அந்த குரங்குகள் பதிலடி நடவடிக்கையாக, பள்ளி செல்லும் குழந்தைகளை மறித்து பயமுறுத்தவே இளைஞர்கள் பின்வாங்கி உள்ளார்கள். அதன் பின்னர் விபரமறிந்த சிலர் தெரிவித்த உருக்கமான ஒரு தகவலை அடுத்து குரங்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கிராமத்தினர் நிறுத்தினார்கள்.

அதாவது, அந்த 2 குரங்குகளும் அப்பகுதி நாய்களால் விரட்டிக் கொல்லப்பட்ட குரங்கு குட்டியின் தாய் தந்தையாம். தங்கள் பிள்ளையை கொன்ற நாயினத்தின் குட்டிகளை குறிவைத்து பெற்றோர் குரங்குகள் பழிக்குபழி நடவடிக்கையில் இறங்கி உள்ளனவாம். இந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் அடுத்தடுத்த நாய் குட்டிகளின் கொலைகள் கிராமத்தில் தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் இறந்த நாய் குட்டிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் செல்லவே, கிராமத்தினர் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களும் கிராமத்தில் காத்திருந்து குரங்குகளின் கோர நடவடிகைகளை உறுதி செய்துள்ளனர். இதன் பிறகு உயரதிகாரிகளிடம் ஆலோசித்து, அந்த 2 பெரிய குரங்குகளையும் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

அவை தேடப்படும் கொலைகார குரங்குகள்தானா என்று உறுதிபடுத்திக் கொள்வதற்காக, இரண்டையும் சில தினங்களுக்கு கூண்டிலே வைத்திருக்க முடிவு செய்துள்ளனர். கிராமத்தில் நாய்குட்டிகள் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்ததும், கூண்டிலிருப்பவைதான் பழி வாங்கும் குரங்குகள் என்று முடிவு செய்து அவற்றை நாக்பூர் வனப்பகுதியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.