சியாமா சாஸ்திரியின் 260-வது அவதார தினம்

சியாமா சாஸ்திரியின் 260-வது அவதார தினம்

கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரி, தெய்வப் புலமை மிக்க வாக்கேயக்காரராக போற்றப்படுகிறார். சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட சாஹித்தியங்களை இயற்றியுள்ளார். காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, சரணாகதி தத்துவத்தை உணர்த்தியவர்.

தஞ்சை மாவட்டம், திருவாருரில் வசிக்கும் தமிழ் அந்தணர் குலத்தைச் சேர்ந்த வேதாகம ஜோதிட நிபுணர் விஸ்வநாத ஐயர் – வெங்கலட்சுமி தம்பதிக்கு 1762-ல், சித்திரை மாதம், கார்த்திகை நட்சத்திர தினத்தில் (26-04-1762) ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வெங்கட சுப்பிரமணிய சர்மா என்று பெயர் சூட்டப்பட்டாலும், சியாம கிருஷ்ணன் என்று செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.

சிறுவயதிலேயே சியாம கிருஷ்ணன், சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் புலமை பெற்றார். அவ்வப்போது இம்மொழிகளில் சாஹித்யங்கள் இயற்றி வந்தார். விஸ்வநாத ஐயரின் உறவினரிடம், ஸரளி வரிசை முதல் ஸ்வர ஞானம் வரை கற்றுக்கொண்டார். தகுதிவாய்ந்த குருநாதரிடம் இருந்து ஸ்ரீவித்யா உபதேசத்தையும் பெற்றார்.

தன்னை இசையில் மேலும் முன்னேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன், தனது 18-வது வயதில் பெற்றோருடன், தஞ்சாவூருக்குச் சென்றார் சியாம கிருஷ்ணன். அப்போது வட தேசத்தில் இருந்து வந்த சங்கீத சுவாமி என்ற கர்னாடக சங்கீத விற்பன்னரிடம் நான்கு மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவரது ஆலோசனையின் பேரில் அரச சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த, பச்சிமீரியம் ஆதியப்பரிடம் சென்று இசை பயின்றார் சியாம கிருஷ்ணன். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்டு மகிழ்ந்த ஆதியப்பர், ‘விரிபோணி’ எனத் தொடங்கும் தனது பைரவி ராக தான வர்ணத்தை, வீணையில் வாசித்துக் காட்டி, சங்கீத நுட்பங்களையும் ராகங்களின் சிறப்புகளையும் கமகங்களின் நுண்மைகளையும் விளக்கினார்.

சில காலம் கழித்து, பங்காரு காமாட்சியின் அருளால், ஸாஹித்ய நுட்பங்கள், இசைக் கற்பனைகள், தாள மடக்குகளை ஒன்றிணைத்து, ‘சியாமக் கிருஷ்ண’ என்ற நாம முத்திரையுடன் சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் க்ருதிகள், ஸ்வரஜதிகள், தான வர்ணங்கள் முதலியவற்றை இயற்றினார். 300-க்கும் அதிகமான ஸாஹித்யங்களை இயற்றினார்.

இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி மீதே அமைந்திருக்கின்றன. அனைத்து பாடல்களிலும் சரணாகதி தத்துவம் விளக்கப்பட்டிருக்கும். தேவியே துணை என்று சரண் புகுந்தால், அனைத்து துன்பங்களையும் களைந்து, அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துவார் பங்காரு காமாட்சி என்பதில் உறுதியாக இருந்தார் சியாம கிருஷ்ணன்.

பங்காரு காமாட்சி அம்மன் மீது மட்டுமல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் மீதும் ஸாஹித்யங்கள் இயற்றியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் மீது ஒன்பது க்ருதிகளால் ஆன ‘நவரத்ன மாலிகை’ என்ற தொகுப்பை இயற்றியுள்ளார்.

புதுக்கோட்டை பிரஹன்நாயகி, திருவாடி தர்மசம்வர்த்தனி, நாகை நீலாயதாட்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியையும் போற்றிப் பாடியுள்ளார் சியாம கிருஷ்ணன். நவரத்ன மாலிகையைப் பாடிய சியாம கிருஷ்ணனைப் பாராட்டி, ரசிகர் ஒருவர் யாளிமுக தம்புராவைப் பரிசளித்தார்.

சியாம கிருஷ்ணன், காதில் கடுக்கன் அணிந்து, ஜரிகை பஞ்சகச்சம், அங்க வஸ்திரத்துடன் வீபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து கொண்டு வீதிகளில் நடந்தால், அனைவரும் அவரது தோற்றத்தைப் பார்த்து காமாட்சி தாசர் சியாமா சாஸ்திரி செல்கிறார் என்று மிகுந்த மரியாதையோடு கூறுவார்கள். அதில் இருந்து சியாமா சாஸ்திரி என்றே அழைக்கப்பட்டார்.

தக்க வயதில் சியாமா சாஸ்திரிக்கு திருமணம் நடைபெற்றது. பஞ்சு சாஸ்திரி, சுப்பராய சாஸ்திரி ஆகிய இரு மகன்களில் பஞ்சு சாஸ்திரி, கோயில் கைங்கர்யங்களை மேற்கொண்டார்.

தியாகராஜர் – சியாமா சாஸ்திரி சந்திப்பு

சியாமா சாஸ்திரியைப் பற்றி கேள்வியுற்ற தியாகராஜரும், தியாகராஜரைப் பற்றி கேள்வியுற்ற சியாம சாஸ்திரியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள விழைந்தனர். அதன்படி சியாமா சாஸ்திரி அடிக்கடி திருவையாறு சென்று தியாகராஜரை சந்தித்து இசை நுணுக்கங்களை விவாதித்தும், ஒருவரது பாடல்களை மற்றவர் போற்றியும் வந்தனர். முத்துஸ்வாமி தீட்சிதரிடம், சுப்பராய சாஸ்திரி வயலின் கற்றுக் கொண்டார்.

சங்கீதப் போட்டி

சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் பொப்பிலியைச் சேர்ந்த கேசவய்யா என்ற சங்கீத வித்வான் தஞ்சை வந்திருந்தார். மற்ற வித்வான்களை போட்டிக்கு அழைத்து அவர்களை தோல்வியடையச் செய்வதில் வல்லவராக இருந்தார். அவரது அகங்காரத்தை அழிக்க எண்ணிய சியாமா சாஸ்திரி, போட்டிக்கு ஒப்புக் கொண்டார். காமாட்சி அம்மனின் அருளால் சியாமா சாஸ்திரி சிந்தாமணி ராகத்தில் அமைந்த ‘தேவி ப்ரோவ சமயமிதே’ ஸாஹித்யத்தைப் பாடிவிட்டு போட்டியில் கலந்து கொண்டு வென்றார்.

மற்றொரு வித்வானான நாகப்பட்டினம் அப்புக்குட்டி பாகவதரும், சியாமா சாஸ்திரியை போட்டிக்கு அழைத்து, அவரிடம் தோற்றார். இருப்பினும் மைசூர் மன்னரிடம் சென்று, சியாமா சாஸ்திரியின் சங்கீத ஞானத்தைப் பற்றி கூறினார் அப்புக்குட்டி பாகவதர். சியாமா சாஸ்திரியை மைசூருக்கு வருமாறு அழைத்தார் மைசூர் மகாராஜா. தனக்கு அரச கனகாபிஷேகம் செய்விக்கப்படுவதை மறுத்த சியாமா சாஸ்திரி, கனக காமாட்சிக்கு சங்கீத அபிஷேகம் செய்யவே விரும்புவதாகக் கூறினார்.

காமாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டு சியாமா சாஸ்திரியின் மனைவி, ஒருநாள், இவ்வுலக வாழ்வை நீத்தார். அப்போது துக்கம் விசாரிக்க வந்த ஒருவரிடம், சியாமா சாஸ்திரி, “சாக அஞ்சு நாள்.. செத்து ஆறு நாள்” என்று குறிப்பால் உணர்த்தினார். அதன்படி மனைவி இறைவனடி சேர்ந்த ஆறாவது நாள், (1827-ல் தை மாதம் சுக்ல பட்சம் தசமி தினம் – 06-02-1827), ‘சிவேபாஹி காமாட்சி பரதேவதே’ என்று கூறியவாறு பங்காரு காமாட்சியின் திருவடிகளை அடைந்தார்.

சியாமா சாஸ்திரியின் நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசின் அஞ்சல் துறை, ஒரு ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலையை (21-12-1985) வெளியிட்டுள்ளது.

வரும் மே மாதம் 2-ம் தேதி சியாமா சாஸ்திரியின் 260-வது பிறந்த தினம் (சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம்) கொண்டாடப்படுகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிலும், காஞ்சி சங்கர மடத்திலும் கடந்த ஏப்.25-ம் தேதி முதல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகள் மே. 2-ம் தேதி வரை நடைபெறும். திருவாரூரில் உள்ள சியாமா சாஸ்திரிகள் இல்லத்தில் மே. 2-ம் தேதி காலை 6 மணி முதல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in