'சிற்பத்தின் அழகு எதில் இருக்கிறது?': விடை சொன்ன வைரமுத்து!

'சிற்பத்தின் அழகு எதில் இருக்கிறது?': விடை சொன்ன  வைரமுத்து!
விழாவில் விருது பெற்றவர்கள்

மல்லை தமிழ்ச்சங்கம் சார்பாக பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன், பெருந்தமிழன் ராசராசன் விருதுகள் வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் கலைமாமணி வி.ஜி சந்தோஷ் ஆகியோருக்கு பெருந்தமிழன் விருதும், டாக்டர். டேவிட் கே.பிள்ளை(பிலிப்பைன்ஸ்) மற்றும் டாக்டர் மை.விசாகன் (இந்தோனேஷியா) ஆகியோருக்கு பெருந்தமிழன் இராசராசன் விருதும் வழங்கப்பட்டன.

மாமல்லபுரம் கட்டடக்கலைக் கல்லூரி முதல்வர் முனைவர். செ.ராஜேந்திரன் மற்றும் முனைவர் கி. இராஜேந்திரன் ஆகியோருக்கு பெருந்தச்சன் விருதும், உலக ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற ம.அரசு, ஷிஃபூ. தி. அசோக்குமார் ஆகியோருக்கு மாமல்லன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

சாரட் வண்டியில் அழைத்து வரப்படும் வைரமுத்து
சாரட் வண்டியில் அழைத்து வரப்படும் வைரமுத்து

விருதுகள் வழங்கப்படுவதன் காரணம் குறித்து வரவேற்புரையாற்றிய மல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ‘மல்லை’ சத்யா எடுத்துரைத்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, “காஞ்சிபுரம்தான் பல்லவர்களின் தலைநகரம். ஆனால் காஞ்சிபுரம் தலைநகரம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டது. கலை நகரம் என்று பல்லவர்களின் பேர் சொல்கிறது. இங்கே கல் வரலாறு சொல்கிறது. சிற்பம் வரலாறு சொல்கிறது.

இந்த கடற்கரை ஓரத்தில், பாறைகளில் கல் குவியல் குவியலாகக் கிடந்தது. எந்தனையோ அரசர்கள் வந்து போய் இருப்பார்கள். ஆனால்,1300 ஆண்டுகளுக்கு முன் இருந்த பல்லவர்களுக்குத்தான் கல்லுக்குள்ளே சிற்பம் இருந்தது தெரிந்திருக்கிறது. பல்லவர்களுக்கெல்லாம் கல்லுக்குள் கல் இருந்தது தெரிந்தது. மாமல்லருக்குத்தான் கல்லுக்குள் சிற்பம் இருந்தது தெரிந்திருக்கிறது.

ஈராயிரம் ஆண்டு கொண்ட இந்த தமிழகத்தில் இன்னும் சிற்பம் தொடர்கிறது என்பதுதான் இந்த பெருமக்களை நான் வணங்குவதற்குக் காரணம். இந்த மண் இன்னும் சிற்பத் திருமண்ணாக இருக்கிறது.

சிற்பி ஒரு சிலையை வடித்தான். வடித்துவிட்டு சபையில் நாட்டினான். நன்றாக இருக்கிறதா இந்த சிலை என்று சபையைப் பார்த்துக் கேட்டான். நன்றாகத்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். ‘இந்த சிற்பத்தின் அழகு எதில் இருக்கிறது?’ என்று கேட்டான். நடு வகிடு எடுத்தலில் இருக்கிறது, விரல்களில் நகச் செதுக்கலில் இருக்கிறது, இடையில் உள்ள செதுக்கலில் இருக்கிறது, அணியலங்காரங்களில் இருக்கிறது. இப்படியெல்லாம் அவையிலிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் சிற்பிக்கு அதில் உடன்பாடு இல்லை. நீயே சொல் எனச் சிற்பியிடம் அவையிலிருந்தவர்கள் சொன்னார்கள். சிற்பத்தின் அழகு அது நஷ்டப்பட்ட கல்லில் இருக்கிறது என்றான். அவை அதிசயித்தது.

விழாவில் உரையாற்றும் வைரமுத்து
விழாவில் உரையாற்றும் வைரமுத்து

இந்த பூமி பிறந்து நாலாயிரத்து ஐந்நூறு கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. சூரியன் வயதும் இந்த பூமியின் வயதும் ஒன்றுதான். இந்த பூமியின் கண்ட திட்டுகள் மோதி பூமி புடைப்பதுதான் பாறை. எரிமலைகள் துப்பிய குழம்புகள் இறுகிப் போவதுதான் இந்த பாறை. எனக்குத் தெரிந்து வங்காள விரிகுடாவில் எரிமலைகள் இல்லை. தமிழ்நாட்டில் எரிமலைகள் இல்லை. பூமியின் கண்ட திட்டுகள் மோதி இங்கே பாறைகள் புடைத்து எழுந்திருக்கக் கூடும். அந்த கல்லுக்குள் சிற்பம் புதைந்திருக்கிறது என்பதைச் சிற்பிகளை வைத்து பல்லவ மன்னன் விளக்கினான்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்," கள்ளுக்குள்ளிருந்து ஒரு இதிகாசம் பிரசன்னமானது. ஒரு காலக்கலை பிரசன்னமானது. கல்லில் முட்டி, காற்றில் உலவி, வானம் தொட்டு, பூமிக்கு வந்து தமிழன் காதில் விழுகிறதே இதுதான் தமிழின் பெருமை என நினைக்கிறேன்.” எனக் கல்லுக்குள் ஒளிந்திருந்த கலையைப் பேசினார்.

பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் மாமல்லபுரம் பாறைகள் தமிழர்களின் பெருமையை போற்றியபடி நிற்கிறது.

Related Stories

No stories found.