100 வயது கண்ட போர் நினைவுச் சின்னம்! புனரமைத்துக் கொண்டாட மறக்கலாமா?

100 வயது கண்ட போர் நினைவுச் சின்னம்!
புனரமைத்துக் கொண்டாட மறக்கலாமா?

முதல் உலகப்போரில், பிரிட்டிஷ் படையில் பெருமளவிலான இந்தியர்களும் இடம்பெற்று போரிட்டனர். இவர்களால் பிரிட்டிஷ் தலைமையிலான படை வெற்றியும் பெற்றது. இதில் பங்கெடுத்துக் கொண்ட திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த வீரர்களை போற்றும் வகையிலும், முதல் உலகப் போர் வெற்றியின் அடையாளச் சின்னமாகவும் பச்சாம்பேட்டை சாலையில் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

அப்போதைய ஆங்கிலேய அரசின் சார்பில் திவான் பகதூர் ஜி.கிருஷ்ணமாச்சாரியார் திருச்சி - லால்குடி சாலையில் வாளாடி அருகேயுள்ள பச்சாம்பேட்டை சாலையில் போர் நினைவுச் சின்னத்தைக் (பச்சாம்பேட்டை வளைவு) கட்டினார். இதை 10.8.1922-ம் தேதி திவான் பகதூர் டி.தேசிகாச்சாரியார் திறந்து வைத்தார்.

பெரியவர் சீலி, மயிலரங்கம், பச்சாம்பேட்டை, திருமண மேடு உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லக்கூடிய சாலையின் நுழைவுவாயிலாக கம்பீரமாக காட்சியளித்த இந்த நினைவுச் சின்னம், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடையத் தொடங்கியது. நினைவுச் சின்னத்தின் கட்டுமானம் வலுவிழந்ததால், அதிலிருந்த செங்கற்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பெயர்ந்து விழுந்தன. வண்ணப்பூச்சுகள் மறைந்து, கருமை படிந்ததால் பொலிவிழந்தது. இதற்கிடையே நுழைவுவாயிலின் பக்கவாட்டு பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி இந்த நினைவுச் சின்னம் நூற்றாண்டும் கண்டுவிட்டது. ஆனால் அப்பகுதி மக்களோ, மாவட்ட நிர்வாகமோ இதன் அருமை பெருமை குறித்து சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இந்தச் சூழலில்தான், முதல் உலகப்போர் வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நூற்றாண்டு கண்ட இந்த வளைவைச் சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி., திருச்சி சிவா இந்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் பச்சாம்பேட்டைக்குச் சென்று இந்தப் போர் நினைவுச்சின்ன வளைவை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வலுவிழந்து காணப்படும் தூண்களை சீரமைப்பது, வளைவுக்கு வண்ணங்கள் பூசி மீண்டும் பொலிவுறச் செய்வது, வளைவு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைப்பதென திட்டமிடப்பட்டது. ஆனாலும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

திருச்சி சிவா
திருச்சி சிவா

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி சிவா, “முதல் உலகப் போரில் கூட்டுப்படையில் சேர்ந்து லால்குடி பகுதியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். இதன் சிறப்பு தெரியாததால் இந்த நினைவுச் சின்னத்தை யாரும் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதற்கு முன் இருந்த 4 மாவட்ட ஆட்சியர்களிடம் முறையிட்டேன். அதிமுக அரசு என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தனர். வழக்கமாக, ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாப்பதற்கே தொல்லியல் துறை முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்த நினைவுச் சின்னம் இன்னும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படவில்லை. ஆனாலும் வரலாற்று முக்கியத்துவம் கருதி, எனது கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக ரூ.7 லட்சம் செலவில் இதைப் புனரமைக்க இந்திய தொல்லியல் துறை முன் வந்துள்ளது. பழமையின் சிறப்பு கெடாமல் இதைப் பாதுகாக்க வேண்டும். வளரும் தலைமுறைக்கு தியாகத்தை எடுத்துச் சொல்லும் சின்னமாக இது இருக்கும்” என்றார்.

இதே திருச்சியில் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக காந்தி மார்க்கெட் அருகே நினைவுச்சின்னம் இருக்கிறது. அங்கு ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்றதொரு மரியாதை முதல் உலகப் போர் நினைவுச் சின்னத்துக்கும் கிடைக்க வேண்டுமென லால்குடி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். நினைவுச் சின்னத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டாவது அது நிறைவேறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in