வயலில் கண்டெடுக்கப்பட்ட கி.பி 1665-ம் ஆண்டு நாயக்கர் கால கல்வெட்டு!- ஆச்சரிய தகவல்

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் முழுமையான தோற்றம்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் முழுமையான தோற்றம்

பெருமாள்பட்டியில் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட கி.பி.1665-ம் ஆண்டு கால பெரிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், எஸ். பெருமாள்பட்டி என்ற ஊரில் உள்ள வயலில் சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட பெரிய கல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து நேரில் சென்ற வரலாற்று ஆர்வலர் ச. அருண்சந்திரன் அதில், எழுத்து பொறிப்பு இருப்பதை கள ஆய்வில் கண்டறிந்தார். மேலும், இக்கல்லில் உள்ள கல்வெட்டு செய்தியை படிக்க, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ரா.உதயகுமார் மற்றும் தி.முத்துப்பாண்டி ஆகியோர் இம்மையத்தின் செயலாளரும், மூத்த கல்வெட்டு வல்லுநருமான சொ.சாந்தலிங்கத்தின் உதவியுடன் கல்வெட்டை படி எடுத்தனர்.

அதன்படி இக்கல்வெட்டானது, சாலிவாகன சகாப்த ஆண்டு 1587-ல் பொறிக்கப்பட்டது. இதற்கு இணையான ஆண்டு 1665 ஆகும் என்று தெரியவந்துள்ளது. மன்னர் திருமலைநாயக்கருக்கு பின், மதுரையை ஆட்சி செய்த சொக்கநாதநாயக்கரின் தாயாருக்கு புண்ணியமாகவும் மற்றும் திருமலைநாயக்கர், முத்துவீரப்பநாயக்கருக்கு புண்ணியமாகவும் மதுரை அவுசேகபண்டாரத்தின் பக்கமாக (பாரிசமாக) அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

நாயக்கர் கால கல்வெட்டு
நாயக்கர் கால கல்வெட்டு

சொரிக்கான்பட்டி என்ற ஊரின் பெயர் கல்வெட்டில் சொறிகாமன்பட்டி என்றே உள்ளது. மக்களின் பேச்சு வழக்கில் சொறிகாமன் பட்டி என்ற பெயர் மருவி இன்று சொரிகான்பட்டி என்று பேச்சு வழக்கில் உள்ளது. மேலும், இவ்வூரின் எல்லையாக இவ்வூரை சுற்றியுள்ள கருமாத்தூர், கரடிகல்லு, பொன்னமங்கலம், கிண்ணிமங்கலம் என நான்கு ஊர்களின் பெயர்கள் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.

இங்கு இருந்த அறக்கட்டளைக்கு சில வரி விலக்கும் அளிக்கபட்டிருந்தது. மேலும், இந்த தன்மத்துக்கு (தர்மம்) யாரேனும் கேடு விளைவித்தால் அவர்கள் கங்கை கரையில் காராம்பசுவையும், தங்கள் தாயாரை கொன்ற பாவத்தில் போவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in