ஆம், காந்தி ஓர் அதிசயம்தான்..!

ஆம், காந்தி ஓர் அதிசயம்தான்..!

இன்று எதுவும் எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன். ஆனால், ஒரு முக்கியமான கோணம் தோன்றியதால் எழுதுகிறேன். அரதப் பழசாகிப் போன ஐன்ஸ்டீனின் மேற்கோள், பாரதியின் பாடல் எதையும் சுட்டப் போவதில்லை.

இன்று பிராமணர்கள், தலித்துகள், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெண்கள் என பாகுபாடில்லாமல் எல்லா தரப்பும் ஏதோ குற்றச்சாட்டுகளை, நியாயமாகவும் அநியாயமாகவும், காந்தியின் மீது வைக்கிறார்கள். காந்தி என்பவரை மொத்த வாழ்வின் ஊடாக பார்த்து அதன் பேரில் ஒரு பார்வையைக் கட்டமைத்துக் கொள்கிறவர்கள் இன்று வெகு சொற்பம்.

1919-ல் ஏப்ரல் 6 அன்று சென்னையில் ரவுலட் சட்டத்தை எதிர்த்து ஒரு சத்தியாகிரகப் போராட்டம் நடக்கிறது. ஒரு எதேச்சாதிகார சட்டத்தை எப்படி எதிர்ப்பது, எதிர்த்தால் அடக்குமுறை வருமே என்ற அச்சம் மக்களிடையே பரவுகிறது. அப்போது இந்தியர்கள் ஒன்றும் செய்யாமல் வீடடங்க இருந்து ஜெபத்தில் ஆழ்ந்தால்போதும் என்றொரு நூதன ஆனால் இந்தியாவை ஸ்தம்பிக்கச் செய்யும் உத்தியை காந்தி முன்மொழிந்தார்.
’தி இந்து’ கோப்புப் படம்

சமீபத்தில் வெளியான பெர்னர்ட் பேட்டின் (Bernard Bate) ’Protestant Textuality and the Tamil Modern: Political Oratory and the Social Imaginary in South Asia’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயமே காந்தியில் ஆரம்பிக்கிறது. 1919-ல் ஏப்ரல் 6 அன்று சென்னையில் ரவுலட் சட்டத்தை எதிர்த்து ஒரு சத்தியாகிரகப் போராட்டம் நடக்கிறது. ஒரு எதேச்சாதிகார சட்டத்தை எப்படி எதிர்ப்பது, எதிர்த்தால் அடக்குமுறை வருமே என்ற அச்சம் மக்களிடையே பரவுகிறது. அப்போது இந்தியர்கள் ஒன்றும் செய்யாமல் வீடடங்க இருந்து ஜெபத்தில் ஆழ்ந்தால் போதும் என்றொரு நூதன ஆனால் இந்தியாவை ஸ்தம்பிக்கச் செய்யும் உத்தியை காந்தி முன்மொழிந்தார். அது தொடர்பான கூட்டம்தான் அது. சென்னை மாகாணம் அதுவரை கண்டிராத கூட்டம். திரு.வி.க, “கடல் அலையெனத் திரண்ட கூட்டம்” என்றார். ஏழை, பணக்காரன், இந்து, முஸ்லிம், ஆண்கள், பெண்கள் என அனைவரும் திரண்டனர் என்கிறார் பேட். அது தான் காந்தியின் மகத்தான சாதனை.

காந்தி பெரும் புரட்சியாளர் அல்ல என்று பொதுவாகச் சொல்வது வழக்கம். அதாவது அவர் ஒரு iconoclast இல்லை. சாதியை ஒழிக்கப் போராடவில்லை, கர்ப்ப சுதந்திரம் பேசவில்லை, முதலாளிகளுடன் நட்பாக இருந்தார் இப்படிப் பல. ஆமாம் அதெல்லாம் உண்மை.

ஆனால், அதையெல்லாம் பேசியவர்களை விட அவர் தலைமையினால் உந்தப்பட்டு நிகழ்ந்த மாற்றங்களை அதிகம். காந்தியின் தொண்டரான சுஷீலா நய்யார்தான் இந்தியாவில் கர்ப்பத் தடையைப் பிரபலமாக்கினார் என்கிறது அமெரிக்க ’டைம்’ பத்திரிக்கை. காந்தியினால் உந்தப்பட்ட அநேகர் சாதிக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஹரிஜன சேவா சங்கம் மீது உயர் சாதி மேட்டிமை வாதம் என்ற குற்றச்சாட்டைச் சொல்லலாம். ஆனால், அவர்கள் செய்த பணியைக் குற்றம் சுமத்துபவர்கள் யாரும் செய்யவில்லையே. எத்தனை பள்ளிகள். அதனால் பயன் பெற்றோர் எத்தனை ஆயிரம். தலைமுறைகள் தாண்டியும் அது நிமிர்ந்து நிற்கிறதே!

பிரிவினைக்குப் பின் கொல்கத்தாவில் பெரும் மதக் கலவரம் வெடிக்குமோ என பயந்து மௌண்ட்பேட்டனும் நேருவும் காந்தியை அனுப்பினார்கள். காந்தியால் கலவரம் அடங்கியது. பல்லாயிரக் கணக்கான இஸ்லாமியர்களின் உயிரும் உடைமையும் பாதுகாக்கப்பட்டது. அது பற்றி ’The Morning News’ என்ற முஸ்லிம் பத்திரிக்கை எழுதியது, “Calcutta will never forget the superhuman effort Gandhiji made to make sanity return to the city”.

எல்லா சமூகத்தினருக்கும் காந்தியின் மீது வருத்தங்கள், விமர்சனங்கள் இருக்கலாம். இருக்க வேண்டும். ஆனால், உங்கள் ஒவ்வொருவருக்காகவும் அவர் ஏதேனும் ஒரு தருணத்தில் உடன் இருந்திருப்பார். காந்தியை எதிர்த்த, காந்தியைக் குறை சொன்ன எந்த தலைவரும் அவர் அளவுக்கு எல்லா தரப்பினரோடும், தன்னை எதிர்த்தவர்களோடும், பணி செய்ததில்லை. காந்தி அளவுக்கு இரண்டாம் கட்ட தலைமைகளை உருவாக்கியவர் யாருமில்லை. காந்தி அளவுக்குத் தன்னை மறுத்தவர்களையும் தொண்டர்களாகக் கொண்டவர்களில்லை.

உண்மையில் உலக வரலாற்றில் காந்திக்கு முன்னும் பின்னும் சமூகத்தின் அனைத்து அங்கத்தினரையும் ஒருங்கிணைத்து, அனைவருக்கும் பாதுகாப்பான விடுதலை இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. விடுதலை இயக்கத்தின் ஊடாக பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கான முன்னெடுப்புகளையும் செய்தது காந்திய இயக்கம் ஒன்றே.

கடைசியாக, வரலாற்றில் தன் சமூகம் அல்லாதவர்களான சிறுபான்மையினரைப் பாதுகாக்க தன் உயிரைக் கொடுத்த தலைவன் காந்தியாக மட்டும்தான் இருக்கும்.

ஆம், காந்தி ஓர் அதிசயம் தான்..!

கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர், சமூக ஆர்வலர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in