முன்பு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்... இன்று வோட்கா: போர்க்காலத்தில் சில புறக்கணிப்புகள்!

முன்பு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்... இன்று வோட்கா: போர்க்காலத்தில் சில புறக்கணிப்புகள்!

எந்த ஒரு பிரச்சினையிலும் தங்கள் எதிர்ப்பை அடையாள நிமித்தமாகப் பதிவுசெய்ய பலரும் கடைப்பிடிக்கும் உத்தி, சம்பந்தப்பட்ட தரப்பின் அடையாளமாக இருக்கும் பொருளை ‘பகிஷ்கரிப்பது’ - அதாவது புறக்கணிப்பது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அந்நியப் பொருட்களைப் பகிஷ்கரிப்பதில் நம் விடுதலை வீரர்கள் ஈடுபட்டிருந்ததை நாம் அறிவோம். பொருட்கள் மட்டுமல்லாமல் சேவைகள், தொழில்கள் எனப் பலவற்றையும் பகிஷ்கரிப்பது உண்டு.

அப்படித்தான், உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவைக் கண்டிக்க, அந்நாட்டின் புகழ்பெற்ற மதுபானமான வோட்காவைப் பகிஷ்கரித்துவருகின்றனர் அமெரிக்கர்கள். ரஷ்யத் தயாரிப்பு வோட்காவை விலை கொடுத்து வாங்கி, அந்தத் தொகையை உக்ரைன் நிவாரண நிதிக்கு அனுப்புவது, வாங்கிய வோட்காவைச் சாக்கடையில் கொட்டுவது எனத் தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவுசெய்துவருகின்றனர். ரஷ்யத் தயாரிப்பு வோட்காவைப் புறக்கணித்துவிட்டு, உக்ரைன் தயாரிப்பு வோட்காவைத் தேடித் தேடி வாங்கிப் பருகுவது என்பன உள்ளிட்ட எதிர்ப்பு முறைகளையும் கையாள்கின்றனர்.

அதுமட்டுமல்ல, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி டெக்சாஸ், பென்சில்வேனியா, ஒஹையோ, அலபாமா உட்பட 10 மாநிலங்கள் வோட்காவுக்குத் தடை விதித்திருக்கின்றன.

அமெரிக்காவில் வோட்கா மதுபானம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2021-ம் ஆண்டு நிலவரப்படி, 9 லிட்டர் கேஸ் அளவிலான மதுபானமாக 78.1 மில்லியன் கேஸ் வோட்காவை வாங்கிப் பருகியவர்கள் அமெரிக்கர்கள். 2011-ல் 62.7 மில்லியனாக இருந்த அளவு இது. அதேவேளையில், ரஷ்யாவிலிருந்து வோட்கா இறக்குமதி செய்வதைவிட பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், லாட்வியா போன்ற நாடுகளிலிருந்துதான் அதிக அளவு வோட்காவை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தச் சூழலில், ரஷ்ய வோட்காவை இனி சுவைப்பதில்லை என்று அமெரிக்கர்கள் பலர் கூறிவருகிறார்கள். எனினும், அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இந்தச் சூழலில், சமீப காலங்களில் அமெரிக்கா மேற்கொண்ட இன்னொரு பகிஷ்கரிப்பு பற்றியும் தெரிந்துகொள்வோம். 2003-ல் இராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, அதை பிரான்ஸ் கடுமையாக எதிர்த்தது. இதனால் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராபர்ட் வில்லியம் நே உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பிரான்ஸ் மீதான கோபத்தைப் பதிவுசெய்ய அமெரிக்க நாடாளுமன்ற உணவகங்களில் பரிமாறப்பட்ட ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ (எண்ணெயில் பொறித்த உருளைக்கிழங்கு) உணவின் பெயரை ‘ஃப்ரீடம் ஃப்ரைஸ்’ என்று மாற்றிவிட்டனர்.

உணவுப் பட்டியலில் ஃப்ரீடம் ஃப்ரைஸ் என்றே சில காலம் அந்த உணவுப் பண்டம் அழைக்கப்பட்டுவந்தது. அமெரிக்காவுக்குள்ளேயே இராக் போர் தொடர்பாக விமர்சனம் இருந்ததால், உருளைக்கிழங்கு பொறியலின் புதிய நாமகரணம் நிலைக்கவில்லை. குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற விவகாரத் துறைத் தலைவராக இருந்த ராபர்ட் வில்லியம் நே பதவி விலகிய பின்னர் பழைய நாமகரணத்துடன் நறுமணம் வீசத் தொடங்கியது ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்!

Related Stories

No stories found.