1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புத கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

அத்தாளநல்லூர் பெருமாள் கோயில்
அத்தாளநல்லூர் பெருமாள் கோயில்
Updated on
1 min read

நெல்லை அருகே அத்தாளநல்லூரில் உள்ள கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கள், பாண்டிய மன்னர்கள் கால கல்வெட்டுக்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்த அத்தாளநல்லூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் கல்வெட்டு ஆய்வு நடந்தது. நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குநர் மாரியப்பன் இசக்கி, நிர்வாகிகள் கிருஷ்ணன், மணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இக்கோயிலில் பாண்டியர், சோழர் கால கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. 

கோயிலில் இறைவன் கஜேந்திர வரதராஜ பெருமாள், முதலையிடமிருந்து யானையை காப்பாற்றியதால் கல்வெட்டுகளில் 'ஆனைக்கு அருள் செய்த பிரான்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரின் பெயர் 'முள்ளி நாட்டு பிரமதேயம் அத்தாணி நல்லூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் மத்திய பகுதி பாண்டிய மன்னன் மாறவர்மன் வல்லபனால் கட்டப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள கல்வெட்டு
கோயிலில் உள்ள கல்வெட்டு

இம்மன்னனின் 37-வது ஆட்சியாண்டு கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. கல்வெட்டின் காலம் 15ம் நூற்றாண்டு.  கோயிலின் மத்திய பகுதிக்கு முன்புறம் உள்ள தூண் மண்டப கல்வெட்டில் 1645ம் ஆண்டு அதாவது கொல்லம் ஆண்டு 820 என குறிப்பிடுகிறது. எனவே தென்காசி பாண்டியர் காலத்தில் கோயில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு கல்வெட்டு கொல்லம் ஆண்டு 727 ஆடி மாதம் என குறிப்பிடுகிறது. இதன்படி இதன் காலகட்டம் ஜூலை 1552ம் ஆண்டு ஆகும். 

இந்த இரு கல்வெட்டுகள் மட்டுமே ஆனைக்கு அருளிய பிரான் என்று இறைவனை குறிப்பிடுகின்றன. இதுகுறித்து கள ஆய்வாளர் மாரியப்பன் இசக்கி கூறுகையில், ''கோயிலின் பிரகாரத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் (1070 -1122) சடையவர்மன் வீரபாண்டியன் (1253-83), முதலாம் மாறவர்மன் குலசேகரன் (1268- 1312) ஆகியோர் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

இதைத்தவிர 11ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர் கால கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. முற்கால கல்வெட்டுகள் இறைவனை 'மொய்மாம் பூம்பொழில் ஆள்வார்' என குறிப்பிடுகின்றன. கோயிலின் மத்திய பகுதி, அதன் முன் மண்டபம் 15ம் நூற்றாண்டில் மாறவர்மன் வல்லபன் 37வது ஆட்சி ஆண்டு காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன்படி இக்கோயில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டு, தென்காசி பாண்டியர் காலத்தில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யலாம்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in