கண்டறியப்பட்ட உறை கிணறு
கண்டறியப்பட்ட உறை கிணறு

கரிகால சோழன் குளித்த இடமா?- தஞ்சாவூரில் 1,400 ஆண்டு பழமை வாய்ந்த 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் அருகே கருந்தட்டாங்குடியில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏழு உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் அருகேயுள்ள கரந்தை எனப்படும் கருந்தட்டாங்குடியில் 1400 ஆண்டுகள் பழமையான கருணா சாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் உள்ளது. சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு நபர்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றியும் பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் முடிவு செய்தனர். கடந்த 2019-ம் ஆண்டு தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியை தொடங்கினர். முதல் கட்டமாக வடவாற்றிலிருந்து குளத்துக்கு தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழிப்பாதையை மீட்டனர்.

அதனால் கடந்த ஆண்டு தடையின்றி குளத்திற்கு தண்ணீர் வந்தது. அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதை கட்டி குளத்தை அழகுப்படுத்தி மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்தனர். அதன்படி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் குளத்தில் தூர்வாரும் பணி கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரும் பணியின்போது குளத்துக்குள் ஆங்காங்கே மூன்று அடி சுற்றளவு கொண்ட சுடுமண்ணால் ஆன உறைகிணறுகள் தென்பட்டுள்ளன. அப்படி இதுவரை ஏழு உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதால் குளமும் அந்த காலத்தைச் சேர்ந்ததாகவே இருக்கக்கூடும். அதனால் குளத்துக்குள் காணப்படும் உறை கிணறுகளும் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவே இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், ``தஞ்சாவூரில் பிரசித்திபெற்ற கருணாசாமி கோயில் குளத்தில் சோழ மன்னன் கரிகால சோழன் தன்னுடைய தோல் நோய் நீங்குவதற்காக குளித்து இறைவனை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. தற்போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஏழு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இதேபோல தெற்கு மற்றும் மேற்கு கரைகளில் தூர் வாரினால் அந்த பகுதியிலும் இது போன்ற உறை கிணறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கும்பகோணம் மகாமக குளம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள தீர்த்த கிணறுகளைப் போல இந்த குளத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக தமிழக தொல்லியல் துறையினர் முழுமையாக கள ஆய்வு செய்து இந்த குளத்தில் உள்ள கிணறுகளை ஆய்வுசெய்து வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in