குட்நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் இனி எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்; சூப்பர் அறிவிப்பு!

மருத்துவ காப்பீடு
மருத்துவ காப்பீடு

மருத்துவக் காப்பீடு பயனாளிகள், நாடு முழுவதும் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வகையில் 'எங்கும் பணமில்லா சிகிச்சை பெறும் வசதி'யை பொது காப்பீட்டுக் கவுன்சில் (ஜிஐசி) அறிவித்துள்ளது.

'எங்கும் பணமில்லா சிகிச்சை பெறும் வசதி' என்ற புதிய முயற்சியின் கீழ், மருத்துவக் காப்பீடு வைத்திருப்போர் தங்களது காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இருக்கும் மருத்துவமனை அல்லாத வேறு மருத்துவமனையிலும் பணமில்லாமல் சிகிச்சை பெறும் வசதியை பெறுவார்கள். இதன் மூலம் காப்பீடு எடுப்போர், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்யும் சுதந்திரத்தைப் பெறுகிறார்கள்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்.
மருத்துவ காப்பீட்டு திட்டம்.

குறிப்பிட்ட சிகிச்சையை பெற அல்லது அவசர காலத்தில் அருகில் இருக்கும் மருத்துவமனையை ஒரு காப்பீட்டுதாரர் நாடும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும், காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஏற்படும் சுமையைக் குறைக்கவும் பொது காப்பீட்டு கவுன்சில், அனைத்து பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, 'எங்கும் பணமில்லா சிகிச்சை பெறும் வசதி' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என்று பொது காப்பீட்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது காப்பீட்டு கவுன்சில்.
பொது காப்பீட்டு கவுன்சில்.

பொது காப்பீட்டு கவுன்சிலின் தலைவரான தபன் சிங்கேல் கூறுகையில், "பாலிசிதாரர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தவும், அவர்களுக்கு பயனளிக்கும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவும் பொது காப்பீட்டுக் கவுன்சில் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பயனாளிகள் சிகிச்சை பெறுவதை எளிதாக்கும் வகையில் 'எங்கும் பணமில்லா சிகிச்சை பெறும் வசதி' திட்டத்தை அறிவிக்கிறோம். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்களின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். புதிதாக பலர் காப்பீடு எடுத்துக் கொள்வதையும் ஊக்குவிக்கும்’’ என்றார்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிய அறிவிப்பு.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிய அறிவிப்பு.

மருத்துவக் காப்பீடு எடுக்கும் ஒருவர், அந்த நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது,காப்பீட்டுப் பணத்தைக் கோரி பெறுவது என்பது கடினமான செயல்முறையாக உள்ளது. அதோடு, சிகிச்சைக்காக செலவிட்ட தொகையில் ஒரு சிறு பகுதியே திரும்பப் பெறும் வகையில் காப்பீட்டு நிறுவனத்தின் கொள்கைகள் அமைந்திருக்கும். இந்நிலையில் 'எங்கும் பணமில்லா சிகிச்சை பெறும் வசதி' அறிவிப்பின் மூலம் இந்த சிக்கல் தீர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in