மருத்துவ தொழிலை புனிதமாகவும், சேவையாகவும் கருதும் எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரோ அதனை பணம் பார்க்கும் தொழிலாக மட்டுமே பார்க்கின்றனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் டீ தராததால் ஆத்திரமடைந்து அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திச் சென்ற மருத்துவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர் மாவட்டம், மெளடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மருத்துவமனையில் 8 பெண்களுக்கு செவ்வாய்க்கிழமை கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் பாலவி என்பவர் மேற்கொண்டார். இதில், 4 பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், மருத்துவர் பாலவி மருத்துவமனை ஊழியரிடம் டீ கேட்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் டீ கிடைக்காததால் கோபமடைந்த மருத்துவர், அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்றார்.
மருத்துவர் வெளியேறி செல்லும் போது அடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்த 4 பெண்களுக்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தயாராக இருந்தனர். மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் உயிர் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் மருத்துவர் வெளியேறி சென்றது உறவினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதுதொடர்பாக, உறவினர்கள் மாவட்ட மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் அளித்ததை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் வேறு மருத்துவரை உடனடியாக வரவழைத்து 4 பேருக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு குழுவை நியமித்துள்ளது. அந்த விசாரணை குழு அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.