மூக்குத்தி பெண்களே ஜாக்கிரதை... நுரையீரலில் சிக்கிய திருகாணி; மருத்துவர்களை அதிர வைத்த ஆபரேஷன்

ஸ்ரீதேவி; அழகுக்காக அணியப்படும் மூக்குத்தி
ஸ்ரீதேவி; அழகுக்காக அணியப்படும் மூக்குத்தி

கொல்கத்தாவில் 35 வயதுப் பெண் ஒருவரின் மூக்குத்தி திருகாணி, மூச்சை வலிய இழுக்கையில் மூச்சுக்குழல் வழியே நுரையீரலில் சென்று சிக்கியது. பின்னர் அதனை மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர்.

இப்படியும் கூட நடக்குமா என்று அதிசயிக்கச் செய்யும் வகையிலான ஆபத்துகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்படியொரு அரிதான சம்பவத்தில் சிக்கி அறுவை சிகிச்சை மூலம் மீண்டிருக்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த வர்ஷா சாஹு.

இவர் அணிந்திருந்த தங்க மூக்குத்தியின் திருகாணி அண்மையில் கழன்று மூக்கினுள் உருண்டோடியது. சுவாரசியமான அரட்டையில் ஈடுபட்டிருந்த வர்ஷா அதன் அங்கமாக, வேகமாக மூச்சை இழுத்திருக்கிறார். அவரது மூக்கை அலங்கரித்திருந்த மூக்குத்தியின் திருகாணி சற்று லூஸாக இருந்திருக்கும்போல... சட்டென கழன்று மூக்கினுள் மறைந்தோடியது.

நுரையீரலில் சிக்கிய திருகாணியைக் காட்டும் எக்ஸ்ரே படம்
நுரையீரலில் சிக்கிய திருகாணியைக் காட்டும் எக்ஸ்ரே படம்

இரண்டொரு நிமிடம் வர்ஷா பயந்துபோனார். பின்னர் திருகாணி வயிற்றை அடைந்திருக்கும் என்றும், வயிற்றுனுள் சென்ற செரிக்காத பொருட்களின் வரிசையில் திருகாணியும் உடல் கழிவுடன் வெளியேறி விடும் என்று மனதை தேற்றிக்கொண்டார். ஆனால் விபரீதம் வேறுவகையில் உருக்கொண்டிருந்தது. சுமார் ஒரு மாதம் கழித்து தீவிர சுவாசப் பிரச்சினைக்கு வர்ஷா ஆளானார்.

இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைக்காக மருத்துவரை நாடிய வர்ஷாவுக்கு, இருமலில் தொடங்கி நிமோனியா வரை மருத்துவர்கள் பரிந்துரை செய்து சோர்ந்து போனார்கள். நாளாக மூச்சு விடுவதில் வர்ஷாவுக்கு திணறல் அதிகரிக்கவே, அவர் நுரையீரல் சிறப்பு மருத்துவருக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அந்த மருத்துவர் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே மூலம் நுரையீரலில், உடலுக்குத் தொடர்பில்லாத அந்நியப் பொருள் சிக்கியிருப்பதை உறுதி செய்தார். அப்போதுதான் வர்ஷாவுக்கு தனது தங்க மூக்குத்தியின் திருகாணி உடலுக்குள் கழன்றோடியது நினைவுக்கு வந்தது. அது உணவுக்குழல் வழியே செரிமான மணடலத்தை அடைந்திருக்கும் என வர்ஷா அலட்சியத்துடன் விட்டிருந்தார். ஆனால் அதுவோ மூச்சுக்குழல் வழியே நுரையீரலை அடைந்திருந்தது.

வர்ஷா சாஹூ
வர்ஷா சாஹூ

வழக்கமான ஃபைப்ரோப்டிக் ப்ரோன்கோஸ்கோப் முறை மூலம் நுரையீரலில் சிக்கிய திருகாணியை எடுக்க நுரையீரல் மருத்துவர் முயற்சித்தார். ஆனால் அந்த முயற்ச்சி தோல்வியடைந்தது. திருகாணி விழுந்து நாட்கள் ஆகியிருந்ததால், அதனைச் சுற்றி நுரையீரல் திசுக்கள் வளர்ந்திருந்தன. மேலும் கூர்மையான திருகாணியை வெளியே எடுக்கும் முயற்சியில், நுரையீரல் உட்சுவற்றில் கீறி ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பு இருந்தது. இது சிக்கலை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்பதால் மாற்று முயற்சிகளை மருத்துவர்கள் பரிசீலித்தனர்.

அதன் பின்னர் மருத்துவக்குழு தீவிர ஆலோசனை மேற்கொண்டு, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக திருகாணியை வெளியே எடுத்தது. அதன் பின்னர் 4 நாட்கள் மருத்துவமனை பராமரிப்புக்குப் பின்னர் வர்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முக அழகுக்கு எடுப்பாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் பெண்கள் அணியும் மூக்குத்தி, அலட்சியத்தின் பரிசாக அவர்கள் உயிருக்கே ஊறு விளைவிப்பதாக உருமாறக்கூடும். அரிதான நிகழ்வு என்றாலும், மூக்குத்திப் பெண்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in