அவசரத் தேவைக்கான நிதியை ரிசர்வ் வங்கி அதிகரித்தது சரியா? - ஓர் அலசல்

அவசரத் தேவைக்கான நிதியை ரிசர்வ் வங்கி அதிகரித்தது சரியா? - ஓர் அலசல்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்

இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் தற்போது நெருக்கடியைச் சந்தித்துவருகின்றன. அந்தந்த நாடுகளின் நிதியமைச்சகங்களுக்கு இணையாகச் செயலாற்ற வேண்டிய சூழலில் நிதியமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் சக்திகாந்த தாஸ் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கவர்னரானவர் என்பதால் ரிசர்வ் வங்கியின் பணிகளைத் தீர்மானிக்கும்போதே நிதியமைச்சகத்தின் நிலைப்பாடுகளுக்கேற்ப சில முடிவுகளை நிர்வாகத்துக்குச் சாதகமாகவும் எடுக்கிறார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவு, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்கள், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் எடுக்கும் பொருளாதாரத் தடை என்ற தண்டனை நடவடிக்கைகள், கோவிட் பெருந்தொற்றின் புதிய வடிவால் ஏராளமான சீன நகரங்கள் பொதுமுடக்கத்தில் இருப்பதால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பு, கச்சா பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியின் அளவைக் கட்டுப்படுத்தியும் விலையை உயர்த்தியும் ஒபெக் நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கை, ரஷ்ய கச்சா பெட்ரோலியம் – சமையல் எரிவாயு ஆகியவற்றின் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகியவற்றால் உலகம் எங்கிலும் நாடுகள் கடுமையான விலையுயர்வு, பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையிழப்பு, வருமான இழப்பு, அரசுக்கே வருவாய் இழப்பு ஆகியவற்றைச் சந்தித்து வருகின்றன. இது மட்டுமின்றி நிலக்கரி உற்பத்தியில் வீழ்ச்சி, பருவநிலை மாறுதல்களால் வெப்ப அலை அதிகரிப்பு போன்றவையும் மக்களுடைய சமூக – பொருளாதார வாழ்க்கையை மேலும் துயரமாக்கி வருகின்றன. ஆங்காங்கே திடீர் நிலச்சரிவுகளும் பெரு வெள்ளங்களும் துயரங்களைப் பெரிதாக்கி வருகின்றன.

மத்திய வங்கிகளின் கடமை, வட்டி வீதத்தை தேவைக்கேற்ப மாற்றுவதும் பண சப்ளையைக் கட்டுப்படுத்துவதும்தான் என்ற காலம் மலையேறிவிட்டது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, நுகர்வை அதிகப்படுத்துவது, தொழில் துறைக்குத் தேவைப்படும் கடனை வங்கிகள் – நிதி நிறுவனங்கள் மூலம் கொண்டு சேர்ப்பது ஆகியவையும் மத்திய வங்கிகளின் வேலைகளாகிவிட்டன. இதற்கிடையே கிரிப்டோ கரன்சி போன்ற புதிய பிரச்சினைகளுக்கும் அவை தீர்வு காண வேண்டியிருக்கிறது.

இம்ரான் உதாரணம்

நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் வெறும் பொருளாதார அடிப்படையில் மட்டும் இருக்காது. சமூகத்தில் அமைதியை ஏற்படுத்துவது, மக்களைச் சாந்தப்படுத்துவது ஆகியவற்றுக்கு அவை முக்கியத்துவம் தர வேண்டி நேரலாம். அப்படிச் செய்யும்போது நாட்டின் நிதி நிலைமையை அவை கடுமையாகப் பாதிக்கும். பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான தேரிக் இன்சாஃப் அரசு பெட்ரோலிய விலையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு உயர்த்தாமல் கட்டுப்படுத்தியும் நுகர்வும் பொருளாதாரமும் மேம்படவில்லை, மாறாக பாகிஸ்தான் செலாவணியின் மதிப்புதான் படுவேகமாக சரிந்தது. அங்கு புதிய ஆட்சி அமைந்த பின்னரும் இப்போது பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் சீர்திருத்தப் பரிந்துரைகளை இம்மி பிசகாமல் பின்பற்றினால்தான் நாடு மீள முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனாலேயே பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 ரூபாய் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதுகூட பன்னாட்டுச் செலாவணி நிதியம் மேற்கொண்டு கடன்தர விதித்த நிபந்தனையால்தான்.

காலம் கடந்த இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட ஊனத்தைச் சரி செய்யவே முடியாது. சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளிடமும் அவ்வப்போது கடன் வாங்கும் பாகிஸ்தான் இப்போது யார் சொன்னாலும் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. இன்னமும் இலங்கை நிலை தனக்கு ஏற்படாது என்று அது நம்புவது சரியல்ல என்று பாகிஸ்தானிய பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நமக்கு அருகில் உள்ள வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளும் பொருளாதார சரிவை நோக்கித்தான் செல்கின்றன.

இந்தச் சூழலில்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அரசுக்கு இணையாக ரிசர்வ் வங்கியும் துரிதமாகச் செயல்படுகிறது. அதே சமயம் முழுக்க முழுக்க அரசின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதாக இல்லாமல், ரிசர்வ் வங்கிக்கே உரிய இலக்கணங்களையும் கடைப்பிடிக்கிறது. அதில் முக்கியமானது நெருக்கடி காலத்தில் (முடைக்காலம் என்றும் சொல்லலாம்) தேவைப்படும் நிதியை, கட்டாயச் சேமிப்பாக அதிக அளவு அது ஒதுக்கியிருப்பதுதான். இதை அதன் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கியின் செலவைவிட வரவு அதிகமாக இருப்பதால் கிடைத்துள்ள உபரியில் மிகக் குறைவாகத்தான் மத்திய அரசுக்கு லாப ஈவாக (டிவிடெண்ட்) அளித்திருக்கிறது. பெட்ரோல்-டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரி குறைப்பு, நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கும் கூடுதல் ஒதுக்கீடு ஆகியவற்றைச் செய்திருப்பதால் மத்திய அரசுக்கு வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியிடம் அதிக லாப ஈவை எதிர்பார்க்கும் நிலையிலேயே அரசு இருந்தும், முடைக்காலக் கையிருப்பை உயர்த்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

முடைக்காலம் எது?

உக்ரைன் – ரஷ்யா போர் போல ஏதேனும் நெருக்கடி தோன்றினால் அல்லது அந்த நெருக்கடியே பெரிதானால் உலகளாவிய பங்குச் சந்தையிலும் நாணய மாற்றுமதிப்புச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்படக்கூடும். அப்போது ரூபாயின் செலாவணி மதிப்பை அதிகம் சரியாமல் காக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இறக்குமதிச் செலவை ஈடுகட்டவும் நிதி தேவைப்படும். வங்கிகளுக்கே கடன் தர நிதி தேவைப்பட்டால் அவை ரிசர்வ் வங்கியிடம்தான் வந்து நிற்கும். இந்தக் காரணங்களால்தான் நெருக்கடி காலத்துக்கு சற்று கூடுதலாகவே பணத்தைச் சேமித்துள்ளது. அந்நியச் செலாவணி மூலமான முதலீடுகள் மதிப்பு இந்த நிதியாண்டில் 94.200 கோடி ரூபாய். இதனாலேயே நெருக்கடி காலத் தேவைக்கு அதிக நிதியை ஒதுக்க முடிந்திருக்கிறது.

உபரி நிதியிலிருந்து 30,310 கோடி ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்றியிருக்கிறது. இது கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி வழங்கிய 99,120 கோடி ரூபாயில் மூன்று ஒரு பங்குதான். மூலதனச் செலவுக்கு அதிகம் ஒதுக்க வேண்டியிருப்பதால் ரிசர்வ் வங்கி அரசுக்குத் தரும் உபரி நிதியைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள மொத்த செலாவணி மதிப்பில் குறைந்தபட்சம் 5.5 சதவீதத்தை நெருக்கடி காலக் கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் வரவு - செலவு மதிப்பு கடந்த ஆண்டைவிட 8.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. சவாலான சூழ்நிலையிலும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து சரியாகச் செயல்படுவதையே இது காட்டுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in