எங்கே போனது 2,000 ரூபாய் நோட்டு?

கறுப்புப் பணத்தை ஒழிக்க வந்த நோட்டு மாயமான கதை
எங்கே போனது 2,000 ரூபாய் நோட்டு?

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன. அடுத்த 4 நாட்களிலேயே 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. விளைவாக எந்த வங்கிக்குப் போனாலும் சரி, ஏ.டி.எம் மையத்துக்குப் போனாலும் சரி ரூ.10 ஆயிரம் எடுத்தால், குறைந்தது 4 நோட்டுகள் 2,000 ரூபாய்த் தாளாகவே இருந்தன. இப்போது நிலைமை தலைகீழ். 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பது வங்கிப் பணியாளர்களுக்கே அபூர்வமாகிவிட்டது. சாதாரண மக்கள் கைக்கு அது வந்தால், 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?' என்று வெளிநாட்டு கரன்சியைப் பார்ப்பதுபோல பார்க்கிறார்கள்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணம்

இந்திய முதலாளிகளும், அரசியல்வாதிகளும் சுவிஸ் வங்கியிலும், பிற வெளிநாட்டு வங்கிகளிலும் பதுக்கிவைத்துள்ள பணமானது தொடர்ந்து 4 மத்திய பட்ஜெட் போடுவதற்குப் போதுமானது. அதை மீட்டால், இந்தியாவின் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்பது நீண்டகாலமாகச் சொல்லப்பட்டுவந்த கூற்று. இப்படி முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவோ, குறைந்தபட்சம் அப்படி முதலீடு செய்திருப்பவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடவோ மத்திய அரசு முயற்சிக்கவே இல்லை என்பதும் நீண்ட காலக் குற்றச்சாட்டு. இதுதொடர்பாகப் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

2011-ல் இதுதொடர்பான வழக்கில், சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே உள்ள 'லிக்டென்ஸ்டைன்' என்ற குட்டி நாட்டில் உள்ள எல்.டி.ஜி என்ற வங்கியில் மட்டும், 26 இந்தியர்கள் பெரும் பணத்தைப் பதுக்கிவைத்திருப்பதாகக் கூறி அந்தப் பட்டியலையும் சீல் வைத்த கவரில் வைத்து நீதிமன்றத்திடம் கொடுத்தது மத்திய அரசு. அதுபற்றிய விவரம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 462 பில்லியன் டாலர் என்று ஐ.எஃப்.ஐ என்ற அமெரிக்க நிறுவனம் சொன்னது. இது அக்கால அரசியலிலும் எதிரொலித்தது. “வெளிநாடுகளில் இருந்த கறுப்புப் பணத்தை மீட்டால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 லட்ச ரூபாய் கொடுக்கலாம்" என்று, 2014 மக்களவைத் தேர்தலின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். இதைத்தான், “ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம்" என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கருணாநிதி உள்ளிட்டோர் முதல்நாளில் வரவேற்றாலும், அதனால் சாதாரண மக்கள் படும்பாட்டைப் பார்த்துவிட்டு, அதைச் செயல்படுத்திய முறையைக் கடுமையாக விமர்சித்தனர்.

2,000 ரூபாய் வரவு

இந்தச் சூழலில்தான், ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில், ஓர் இரவில் திடீரென பண மதிப்பிழப்பு உத்தரவைப் பிறப்பித்தார் பிரதமர் மோடி. உயர் மதிப்பு கரன்ஸிகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததுடன், அவற்றை உரிய ஆவணங்களுடன் வங்கியில் செலுத்தி மாற்று ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். உடனே, “இதுவரையில் எந்த அரசும் செய்யத் துணியாததைத் துணிந்து செய்திருக்கிறார் மோடி. புதிய இந்தியா பிறந்துவிட்டது” என்று ரஜினிகாந்த் தொடங்கி மூத்த அரசியல்வாதிகள் வரை பலரும் வரவேற்றனர். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முதல்நாளில் வரவேற்றாலும், அதனால் சாதாரண மக்கள் படும்பாட்டைப் பார்த்துவிட்டு, அதைச் செயல்படுத்திய முறையைக் கடுமையாக விமர்சித்தனர். இன்னொரு புறம் திரும்பி வராது என்று அரசு நினைத்த பணமும் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பிவிட்டது.

இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் உள்ளன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் ஆகும். அதுவே 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக அச்சிட்டால், 50 நாட்களுக்குள் அச்சிட்டுவிடலாம் என்றது ரிசர்வ் வங்கி. இப்படித்தான், அந்த பிங்க் நிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மக்களின் கைக்கு வந்துசேர்ந்தது.

சென்றது எங்கே?

“உயர் மதிப்பு கொண்ட 1,000 ரூபாய் நோட்டுகள் கறுப்புப் பணமாகப் பதுக்கவே உதவுகிறது என்று சொல்லிவிட்டு, புதிதாக 2,000 ரூபாய் நோட்டை வெளியிடுவது எந்த வகையில் சரியானது?" என்று அப்போதே கேள்வி கேட்டார் ப.சிதம்பரம். “2,000 ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது. அதை எங்கே பதுக்கிவைத்தாலும் சாட்டிலைட் உதவியுடன் கண்டுபிடித்துவிட முடியும்" என்று பாஜகவினர் சிலர், வதந்தி பரப்பினார்கள். கடைசியில், சிதம்பரம் சொன்னது போலவே நடந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அதே 2016-ம் ஆண்டு, சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை ரெய்டில், 170 கோடி ரூபாய் ரொக்கமும், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 80 கோடி ரூபாய் புத்தம் புதிய 2,000 ரூபாய் தாள்களாக இருந்தன. சேலத்தில் அவரது காரில் பிடிபட்ட 24 கோடியும்கூட 2,000 ரூபாய் நோட்டுகளாகவே இருந்தன. அதன் பிறகு நடந்த பல ரெய்டுகளில் பிடிபட்ட கணக்கில் வராத பணத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பணம் 2,000 ரூபாய் நோட்டுகள்தான் என வருமான வரித் துறையும் சொன்னது. 2017-18-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட இத்தகைய பணத்தில், 2,000 ரூபாயின் பங்கு 67.91 சதவீதமாக உயர்ந்தது. "இவை எல்லாம் பிடிபட்ட கணக்குகள். பிடிபடாத பணம் இதைப்போல பல மடங்கு அதிகமாக இருக்கலாம்" என்றார்கள் பொருளாதார நிபுணர்கள்.

அச்சிடுவது நிறுத்தம்

இதைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்துகொண்டே போயின. வங்கிகள், ஏ.டி.எம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளே கிடைக்கவில்லை. தட்டுப்பாடு காரணமாக அவற்றை வங்கிகளில் விநியோகிப்பதைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்வதே, இதற்குக் காரணம் என்று 2020 பிப்ரவரியில் செய்திகள் வெளியாகின.

"புழக்கத்தில் குறைவாக இருப்பதால், புதிய நோட்டுகளை அச்சிடும் திட்டமுள்ளதா?" என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், “2016-17-ம் நிதியாண்டில் 345.39 கோடி எண்ணிக்கையிலும், 2017-18-ம் நிதியாண்டில் 11.15 கோடி எண்ணிக்கையிலும், 2018-19-ம் நிதியாண்டில் மேலும் குறைக்கப்பட்டு 4.66 கோடி எண்ணிக்கையிலும் 2,000 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டன. அதன்பிறகு 2 ஆண்டுகளாகப் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை" என்றார்.

இதைத் தொடர்ந்து பதுக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை மீட்பதற்காக, மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடும் என்ற புரளியும், "இன்னொரு முறை அப்படியான நடவடிக்கை எடுக்கும் திட்டமேதுமில்லை" (ஏற்கெனவே பட்டது போதாதா?) என்று மத்திய அரசின் மறுப்பும் வெளிவந்தன.

ஆனந்த சீனிவாசன்
ஆனந்த சீனிவாசன்
'நலந்தா' செம்புலிங்கம்
'நலந்தா' செம்புலிங்கம்

மொத்தத் திட்டமும் தோல்வியா?

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த சீனிவாசனிடம் கேட்டபோது, "ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பகுதி பதுக்கலுக்குப் போய்விட்டது. புதிதாக அச்சடிப்பதையும் நிறுத்திவிட்டார்கள். கறுப்புப் பணத்தைப் பிடிப்போம் என்றார்கள். எல்லாப் பணமும் வங்கிக்குத் திரும்பிவிட்டது. கள்ள நோட்டு ஒழியும் என்றார்கள். இவர்கள் கலர் கலராக அடித்த அத்தனை நோட்டுகளிலும் முன்பைவிட வேகமாகக் கள்ள நோட்டுகள் வந்துவிட்டன. தீவிரவாதம் ஒழியும் என்றார்கள். முன்பைவிட அதிகமாக தீவிரவாதச் செயல்கள் அரங்கேறுகின்றன. சின்ன விஷயத்தைச் செய்தாலும் பெரிய சாதனைபோல தம்பட்டம் அடிக்கிற பிரதமரே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி எதுவுமே பேசவில்லை என்பதில் இருந்தே இது எவ்வளவு பெரிய தோல்வி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்று ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கும் பொருளாதாரச் சிக்கல், ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு அனைத்துக்கும் பொறுப்பேற்று மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று, 'நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?' என்று புத்தகம் எழுதிய நலந்தா பதிப்பகத்தின் செம்புலிங்கத்திடம் இதுபற்றிக் கேட்டபோது, "1969-ல் ஒரேநேரத்தில் 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கி, அதுவரையில் யாருமே நினைத்துக்கூட பார்த்திராத அதிரடி நடவடிக்கையை எடுத்தவர், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அதன்பிறகு அப்படியொரு துணிச்சலான பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தவர் நரேந்திர மோடிதான். இடையில், 1978-ல் ஒரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அதில் வெறுமனே 5 சதவீத பலன்தான் கிடைத்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதோடு ஒப்பிட்டால் நல்ல பலன்களைத்தான், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொடுத்திருக்கிறது.

‘எனக்கு வங்கியில் 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை, மோடியின் நடவடிக்கையால் நான் பாதிக்கப்பட்டேன்’ என்று சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ஓரிருவர் சொல்வது உண்மைதான். அதற்காக அதுதான் ஒட்டுமொத்த விளைவு என்று சித்தரிப்பது சரியாகாது. கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பதே இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரிய விஷயம்தான்" என்றார்.

"நாட்டின் பொருளாதாரமே அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. இதில் 2,000 ரூபாய் புழக்கத்தில் இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன?" என்ற சாமானியர்களின் குரலும் கூடவே கேட்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in