விலைவாசி குறையுமா, பொருளாதாரம் மீளுமா? - ஓர் அலசல்

விலைவாசி குறையுமா, பொருளாதாரம் மீளுமா? - ஓர் அலசல்

உலகச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை மீண்டும் உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் மக்களிடையே நுகர்வு அதிகரிக்கவும் வேளாண் துறை, தொழில் துறைகளில் உற்பத்தி பெருகவும், சேவைத் துறையில் விற்றுமுதல் குறையாமல் இருக்கவும் இந்த முடிவை எடுக்க முடிவு செய்திருக்கிறது அரசு. இதனால் அரசுக்கு நேரடியாகக் கிடைக்கக்கூடிய வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டாலும் விலைவாசியைக் குறைப்பதால் ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமாகிவிடாமல் தடுக்க முடியும். அத்துடன் நுகர்வும் அதிகரிப்பதால் அரசுக்கு வேறு இனங்கள் மூலம் மறைமுக வரி வருவாய் அதிகரிக்கும். அது வேலைவாய்ப்பையும் சரியாமல் பார்த்துக்கொள்ளும். மோட்டார் வாகன விற்பனை பெருகும். போக்குவரத்துத் துறையில் வருமானம் அதிகமாகும். எனவே வரிக் குறைப்பு மறைமுகமாக வேறு பல நன்மைகளைத் தரும் என்பதாலும் மக்களுக்கு நிம்மதியும் ஆறுதலும் ஏற்படும் என்பதாலும் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சில்லறை விற்பனை விலையுயர்வு கடந்த எட்டு ஆண்டுகளில் இருந்திராத வகையில் உயர்ந்தது, மொத்த விலையிலோ கடந்த 17 ஆண்டுகளில் இருந்திராத அளவுக்கு உயர்ந்தது. உரங்களுக்கான மானியச் செலவு இப்போது ஆண்டுக்கு 2.15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மேலும் 50,000 கோடி ரூபாய் கூட தேவைப்படும் என்று அரசு எதிர்பார்க்கிறது. சாகுபடிப் பரப்பு அதிகரித்திருப்பதால் மானியமும் அதிகம் தர வேண்டியிருக்கும்.

நடப்பு நிதியாண்டில் 14.31 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்துக்கு 8.45 லட்சம் கோடி ரூபாயை முதல் கட்ட கடனாக வாங்கப் போகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளால் மேலும் 1 லட்சம் கோடி ரூபாய் முதல் 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை வரி வருவாயை அரசு இழக்க நேரும் என்று இப்போது மதிப்பிடப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு ஏன்?

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் அமலில் இருந்த பொதுமுடக்கம் படிப்படியாக எல்லா நாடுகளிலும் விலக்கப்பட்டதால் 2021-ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களிலிருந்து பொருட்களுக்கான தேவை சந்தையில் அதிகரித்தது. உக்ரைன் மீது ரஷ்யா எடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிலைமையை மோசமாக்கிவிட்டது. மார்ச் மாதத்தில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 120 டாலர்களுக்கும் மேல் உயர்ந்தது. எல்லாத் துறைகளுக்கும் எரிபொருள்தான் மூலாதாரம் என்பதால் அதன் விலை உயர்வு சக்கர வட்டமாக எல்லாத் துறைகளிலும் உற்பத்திச் செலவுகளையும் அதன் காரணமாக விலையையும் அதிகரிக்கச் செய்தது.

போதாக்குறைக்கு, ரஷ்யா மீது பொருளாதாரத் தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்து அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் உலக சரக்கு போக்குவரத்து சந்தையில் பெரிய குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்திவிட்டன. பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சமே பல பண்டங்களின் விலையை உயர்த்திவிட்டது. ரஷ்யாவிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றைப் பிற நாடுகளுக்கு விற்க விதித்த கட்டுப்பாடுகளால் ரஷ்யா மட்டுமல்ல அதனிடம் வாங்கும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஆசிய நாடுகளும் சேர்ந்து நிலைகுலைந்தன. கோதுமை உள்ளிட்ட தானியங்கள் உக்ரைன், ரஷ்யா இரண்டிலிருந்துமே வெளிநாடுகளுக்குக் கிடைக்காது என்பதால் உலகச் சந்தையில் பீதி ஏற்பட்டுள்ளது.

சீனத்தில் கோவிட்-19 வைரஸ் திரிபு அடைந்து புதிதாகப் பரவியதால் நாட்டின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் முழுமையாகவும் பகுதியாகவும் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. இதன் விளைவாக உலக நாடுகளுக்கு உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள், துணைப் பொருட்கள், கருவிகள், சாதனங்கள், உதிரி பாகங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடுகள் தொடர்கின்றன. விலை உயர்வுக்கு இதுவும் முக்கியக் காரணம்.

இந்த நிலையில் பங்குச் சந்தைகளும் உலக அளவில் கடும் சரிவைக் கண்டன. உலக நிலைமைக்கேற்ப இந்தியாவின் ரூபாய் மதிப்பும் சரிந்தது. இதன் காரணமாக இறக்குமதிக்காகும் செலவு இந்தியாவுக்குப் பல மடங்காக உயர்ந்திருக்கிறது. விலை உயர்வுக்கு இவையெல்லாம் காரணங்கள்.

இலக்கு 4 சதவீதம் - உண்மையில் 7.79 சதவீதம்

நுகர்வோர் விலைக் குறியீட்டெண அடிப்படையிலான பணவீக்க விகிதம் 4 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிர்ணயித்தது. அதில் 2 சதவீதம் கூடலாம் – குறையலாம் என்றும் அனுமதித்தது. ஆனால் உண்மையில் விலைவாசி உயர்வு விகிதம் 7.79 சதவீதமாக – கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது.

இந்தியத் தொழில் நிறுவனங்கள், இடுபொருட்களுக்காகும் செலவு உயர்ந்ததையெல்லாம் அப்படியே விற்பனை விலையில் ஏற்றி, நுகர்வோர் தலைக்கு மாற்றிவருகின்றன. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வருவாயும் கையிருப்பு ரொக்கமும் குறைந்துவிட்டதால், விலை உயர்வின் ஒரு பகுதியைக் கூட ஏற்று சமாளிக்கும் நிலைமை பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு இல்லை. இது சேவைத் துறையிலும் அப்படியே எதிரொலிக்கிறது. உணவு தானியங்களின் விலையுயர்வு 8.38 சதவீதமாகவும் போக்குவரத்து – தகவல் தொடர்புத் துறையில் 11 சதவீதமாகவும், மருத்துவச் செலவுகள் விஷயத்தில் 7.21 சதவீதமாகவும் உடை – காலணிகள் விலையில் 9.85 சதவீதமாகவும் உயர்ந்துவிட்டது. இது சாமானியர்களை வெகுவாக பாதித்து வருகிறது.

உணவு – எரிபொருட்களுக்கான செலவு போக எஞ்சிய செலவுகளில் பணவீக்கம் 2022 ஏப்ரலில் 7.35 சதவீதமாக இருந்தது. இந்த விலையுயர்வைக் குறைப்பது எளிதல்ல. உலகின் பெரும்பாலான நாடுகளிலும் நிலைமை இதுதான். அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் மார்ச் மாதம் 8.5 சதவீதமானது. கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் இப்படி விலை உயர்ந்ததே கிடையாது. பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) 2022-ல், வளர்ந்த நாடுகளில் பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாகவும் வளரும் நாடுகளில் 8.7 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிட்டது. வளர்ந்த நாடுகள் விஷயத்திலேயே அது அதிகமாகிவிட்டது. வளரும் நாடுகளின் நிலைமை குறித்துக் கேட்கவே வேண்டாம்.

இப்படி விலைவாசி உயர்ந்ததால் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி, பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து, இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஆகியவை வங்கி டெபாசிட்டுகள் மீதும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் கடன்கள் மீதுமான வட்டி வீதத்தை உயர்த்தியிருக்கின்றன. இதனால் வருவாயைப் பெருக்க நினைக்கும் தனி நபர்கள் தங்களிடமுள்ள உபரிப் பணத்தை டெபாசிட்டுகளில் முதலீடு செய்வார்கள். அவசியமில்லாத தேவைகளுக்கு மக்கள் கடன் வாங்குவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால் சந்தையின் போக்கு காரணமாக விலையுயர்ந்த சிலவற்றின் விலைகூட சற்றே குறையவும் வாய்ப்பு இருக்கிறது. கடன் பத்திரங்களில் முதலீடு குறையும். விலைவாசி உயர்வின் தன்மையும் விளைவுகளும் இவை.

பொருளாதார நிலைமை பொதுவாக மோசமாக இருப்பதாலும், எதிர்காலத்தில் மேலும் மோசமாகும் அறிகுறிகளே தென்படுவதாலும், வங்கிகளில் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கிய காலம் மலையேறிவிட்டது என்பதை வாடிக்கையாளர்கள் உணர்வது நல்லது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in