கிரிப்டோ கரன்சி: சாத்தானும் வரம் அருளும்!

கிரிப்டோ கரன்சி: சாத்தானும் வரம் அருளும்!

கிரிப்டோ கரன்சி என்பதே ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. பணவீக்கத்துக்கு எதிரான சாமானியன் தவிப்புகளில், குறைந்த மூலதனம் நிறைய லாபம் என கிரிப்டோ கரன்சி முதலீடுகள் தூண்டிலிட்டன. அன்றாடங்களில் லட்சங்களில் சம்பாதித்ததாக சிலர் மார்தட்டினார்கள். ஈமு கோழிக்கு இணையாக வேறு சிலர் தூண்டில் வீசுகிறார்கள். இதற்கிடையே கிரிப்டோ கரன்சிக்கு அரசு தடைபோடப் போகிறதாமே என்ற அவலையும் சில நாட்களாகச் சேர்த்து மெல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதென்ன கிரிப்டோ கரன்சி, அப்படியென்ன அதன் சாகித்யங்கள் மற்றும் சர்ச்சைகள் என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன.

அண்மை நிகழ்வுகளில் இருந்தே ஆரம்பிப்போம்.

வருகிறது புதிய சட்டம்

நாடாளுமன்றத்தின் நடப்புக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகமாகும் 26 மசோதாக்களில் ஒன்றாக, கிரிப்டோ கரன்சிக்கான கடிவாளமும் வெளியாக உள்ளது. ’கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021’ என்ற பெயரிலான இதன் நோக்கம், ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதும், புழக்கத்தில் உள்ள இதர கிரிப்டோ கரன்சிகளை தடைசெய்வதுமாக இருக்கும்.

மேலும், புதிய சட்ட மசோதாவால் இதுவரை கிரிப்டோவில் முதலீடு செய்தவர்களுக்கு பாதிப்பு வருமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதிகாரபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் கிரிப்டோவில் முதலீடு செய்த இந்தியர்களுக்கு, அநேகமாக அவற்றை விற்று வெளியேற அவகாசம் அளிக்கப்படலாம். ஆனால், அதன் லாபம் வழக்கமான வரி விதிப்புக்கு அடங்கும்.

மாயக் கரன்சி

கிரிப்டோ கரன்சி என்பது இணையத்தில் உருவாகி இணையத்திலேயே புழங்கும் கரன்சியாகும். நமது வங்கிகளின் வழக்கிலுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கரன்சிகளை, தேவை ஏற்படின் பார்க்கவோ, வருடவோ முடியும். அவ்வாறின்றி கிரிப்டோ கரன்சியானது, மெய் நிகரில் மட்டுமே உலவும் மாயக் கரன்சியாகும். தட்டுப்படாதது மட்டுமல்ல, எதற்கும் கட்டுப்படாததும் அதன் சிறப்புகளில் சேரும்.

நாம் உபயோகிக்கும் பணத்தின் மதிப்புக்கும், புழக்கத்துக்கும் அரசியலமைப்புச் சட்டங்கள் பாதுகாப்பளிக்கின்றன. கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி போன்ற ஒழுங்குமுறை அமைப்பும் உண்டு. இந்த ஒழுங்குமுறை அமைப்பு என்பது கரன்சிக்கு மட்டுமல்ல, பங்குவர்த்தகத்துக்கு செபி; காப்பீட்டுக்கு ஐஆர்டிஏ; தொலைத்தொடர்பு சேவைக்கு டிராய்... என நடைமுறையில் நமக்கு அணுக்கமான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஓர் ஒழுங்குமுறை அமைப்பை அரசு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இவை எதுவுமே கிரிப்டோ கரன்சிக்கு கிடையாது.

இணைய உலகத்தில் இதன் தனித்துவ பரிவர்த்தனை, பிளாக்செயின் மற்றும் க்ரிப்டோ கிராஃபி என நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக பாவிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் அறிந்தோருக்கே சற்று தலைசுற்ற வைக்கும் என்பதால், கிரிப்டோ கரன்சி மோகத்தில் சாமானியர்கள் ஏமாறுவது அதிகம் நடக்கிறது.

உலை வைக்கும் வலைப்பின்னல்

கிரிப்டோ கரன்சிக்கான இணையம் என்பது நாம் பழியாய் கிடக்கும் மேலடுக்கு இணையம் அல்ல; அதன் ஆழத்தில் உருளும் பாதாள இணையமான ’டார்க் நெட்’! ஆயுதங்கள், ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனை, குழந்தை பாலியல் என சட்ட விரோத செயல்பாடுகளின் சாகரமே கிரிப்டோ கரன்சியின் ராஜபாட்டையாகவும் உள்ளது. மேற்படி சட்டவிரோத செயல்பாடுகளுக்கான கரன்சி பரிமாற்றமும், கிரிப்டோ மூலமே நடைபெறுகிறது. கிரிப்டோ கரன்சி என்றாலே அரசுகள் அலறுவதன் காரணம் இதுதான்.

இந்தியாவும், கிரிப்டோகரன்சியை கட்டுப்படுத்துவதன் நோக்கமாக பயங்கரவாத செயல்பாடுகளையே சுட்டுகிறது. அரசின் கவலையும் அர்த்தம் பொதிந்தது. பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் போன்றோர் பிறரால் மோப்பமிட முடியாத கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையையே பின்பற்றுகிறார்கள். கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதன் மூலம் சட்ட விரோத செயல்பாடுகளை கணிசமாக குறைக்க முடியும். இந்தச் சட்ட விரோத செயல்பாடுகளின் வரிசையில் கருப்பு பண முதலீடுகளும் சேரும்.

பொருளாதாரத்துக்கு பாதிப்பு

இவை அனைத்தையும் விட நாட்டுப் பொருளாதாரத்துக்கு கிரிப்டோ கரன்சி நாசம் விளைவிக்கும் என்ற அச்சமும் அரசுகளுக்கு உண்டு. தேசத்துக்கு என பிரத்யேக கரன்சியும் அதன் புழக்கத்துக்கான கட்டுப்பாடுகளும் விதித்திருக்கையில், போட்டியாக மாயக் கரன்சி புழங்குவதை அரசுகள் விரும்புவதில்லை. கிரிப்டோ கரன்சியின் கை ஓங்கினால், நாடு அங்கீகரித்த நாணயத்தின் மதிப்பு வீழலாம்.

எனவே, இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பே, வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு, கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆனால், கிரிப்டோ எக்சேஞ்சுகள் அனைத்தும் நிறுவனம் என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருப்பதை காட்டி, ரிசர்வ் வங்கி தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றார்கள்.

2020 மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதே வேளை, இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்கவும் வழிகாட்டவும் ஏதுவாய் ஒரு சட்டத்தை உருவாக்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு காலம் தாழ்த்தியதையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் தங்களுக்கு சாதகமாக்கிய சிலர், கிரிப்டோ கரன்சியை மையமாக்கி பல மோசடி திட்டங்களில் மக்களை கோத்துவிட்டனர். எம்எல்எம் பாணியில் ஆரம்பித்து, சூதாட்டம் அளவுக்கு அவை எல்லைமீறிச் சென்றன.

இப்படி ஒரு சில ஆண்டுகளாகவே, நாமறியக் கிடைக்கும் கிரிப்டோ மோகத்தின் பின்னணி மாமாங்கம் முன்பே தொடங்கியது.

பிட்காயின் உதயம்

2008-ல் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவு கண்டபோது, அவற்றை ஆராய்ந்த பொருளாதார நிபுணர்கள் நடப்பிலிருக்கும் கரன்சி மற்றும் பணப் பரிவர்த்தனை குறித்த தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். அவர்களின் மத்தியில் சடோஷி நகமோட்டோ என்பவர் பெயரில் வெளியான தொழில்நுட்பப் பரிந்துரை பலரையும் கவர்ந்தது. கிரிப்டோ கரன்சி போலவே இந்த நகமோட்டோ என்ற பெயருக்குரிய நபர் அல்லது குழு குறித்து, இன்றுவரை வெளிப்படையான தகவல் இல்லை.

ஆனால், அந்த அறிக்கை சுற்றிவளைத்து, உலகளாவிய டிஜிட்டல் கரன்சியை காலத்தின் கட்டாயம் என்றது. இது இளம் வயதினரை குறிப்பாக, தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய இளைஞர்களை பெரிதும் ஈர்த்தது. ஏனெனில், அவர்கள் கிட்டத்தட்ட கிரிப்டோ கரன்சிக்கு இணையான டோக்கன்களை, தங்களது ஆன்லைன் பரிவர்த்தனைகளில் புழங்கி வந்தார்கள். ஆன்லைன் விளையாட்டுகளில் பரிசாகக் கிடைக்கும் பிட்காயின் என்ற டோக்கனே, அந்த வகையில் முதல் கிரிப்டோ கரன்சியின் பெயருமானது.

கட்டுடைத்த கிரிப்டோ

தேசங்களின் எல்லைகள், ஒழுங்குமுறை ஆணையங்களின் கட்டுப்பாடுகள், அரசின் விதிமுறைகள் என சகலத்தையும் கிரிப்டோ உடைத்தது. முக்கியமாய் நவீனத்தின் அம்சமான மையத்தை விலக்கி வெளிப்பட்டது. அப்படி உருவான பிட்காயின் பரிவர்த்தனையை அதன் நோக்கங்களில் இருந்து பிறழாதிருக்காக, 2009-ல் பிளாக்செயின் என்ற தொழில்நுட்பம் உருவானது. கிரிப்டோ பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் அனைவரும் அனானிகள் என்பதால், தொழில்நுட்பமும் அவர்களின் மத்தியில் ஆளுக்கொரு கண்ணியாய் பரவியது.

பணப் பரிவர்த்தனையானது தனது போக்கில் வழுவாது சென்றாலும், யாரிடமிருந்து யாருக்கு செல்கிறது என்பது எவருக்குமே தெரியாது. கிரிப்டோ கரன்சியின் சிறப்பே இதில்தான் அடங்கியுள்ளது. இதை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவோரை விட நிழல் தேவைகளுக்காக நாடுவோரே அதிகம். ஆனபோதும் இணையவெளியின் கட்டுடைப்பு தனக்கான புதிய தகர்ப்புகளை தானாக தகவமைத்துக் கொண்டது.

பரிவர்த்தனை முதலீடானது

எலான் மஸ்க் போன்றவர்கள், மெய்நிகர் கரன்சி மீது தயக்கம் கொண்டிருந்தவர்களையும் கிரிப்டோ உலகத்துக்குள் இழுத்துப் போட்டனர். தனது நிறுவனத்தின் பங்குகளில் கணிசமான தொகையையும், தனது தனிப்பட்ட சேமிப்பையும் கிரிப்டோவில் முதலீடு செய்தார் எலான் மஸ்க். தங்களது தயாரிப்பான டெஸ்லா கார்களை கிரிப்டோ கரன்சியில் வாங்கலாம் என்று அறிவித்தார்.

இந்தியா போன்ற நாடுகளில் கிரிப்டோ மீது கவனம் திரும்பியதற்கு பெருந்தொற்றும் ஒரு காரணமானது. சமூக ஊடகம், ஆபாசம் உள்ளிட்ட இணையப் பயன்பாடுகளுக்கு இணையாக கிரிப்டோ மீதான போதையும் இக்காலத்தில் வளர்ந்தது.

’ஒரு பூமி ஒரே கரன்சி’ என்ற தாரக மந்திரத்துடன் புழங்கிய கிரிப்டோ கரன்சியின் தேவை அதிகரித்தபோது, அதன் மதிப்பும் உயர்ந்தது. தேவையும் அதையொட்டிய தட்டுப்பாடுமாக மேலும் விலை உயர்ந்ததில், முதலீட்டு உபாயமாகவும் உருவெடுத்தது. தங்கம், ரியல் எஸ்டேட்டுக்கு இணையாக இன்னொரு முதலீடாக தன்னை வரிந்துகொண்டது. கண்காணிப்பார், கேட்பார் இல்லை, மூலதன வரியில்லை என்றதும் பணம் படைத்தவர்கள் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய முண்டியடித்தனர்.

அபாயகரமான வர்த்தகம்

1 பிட்காயினின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.42 லட்சம். இம்மாத தொடக்கத்தில் 50 லட்சத்துக்கு அருகே சென்று, பின்னர் வீழ்ந்திருக்கிறது. இதுபோல எதிரியம், பைனாஸ், சொலானா, டெதர் என சுமார் 7 ஆயிரம் வகையான கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் இருக்கின்றன. லட்சங்களில் தொடங்கி, ஓரிரு ரூபாய் வரை நம் வசதிக்கேற்ப இவற்றில் முதலீடு செய்யலாம். ஒரே நாளில் இவற்றின் ஏற்ற இறக்க சதவீதம், ஆயிரங்களில் நிகழும் என்பதால், இதயம் பலகீனமானவர்கள் இதில் இறங்க அஞ்சுவார்கள். ரிஸ்க் என்பதை ரஸ்க்காக பாவிக்கும் இளைஞர்கள், அதிலும் கைநிறையச் சம்பாதிக்கும் தொழில்நுட்பத் துறையினர் இதில் புகுந்து விளையாடினார்கள். உபரியாக பணம் வைத்திருப்பவர்கள், அவற்றை இழந்தாலும் பரவாயில்லை என்றவர்கள் லட்சங்களில் சம்பாதித்தார்கள். இதைக் கேள்விப்பட்டு மாதச் சம்பள அப்பாவிகள் கிரிப்டோவில் இறங்கி நட்டமடைந்தனர்.

அரசுகளின் அசுர கவலைகள்

எல் சால்வாடர், க்யூபா தேசங்கள் கிரிப்டோ கரன்சியை அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கிரிப்டோவின் வர்த்தகத்துக்கு மட்டும் அனுமதித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் முழுத் தடை உண்டு. தனியார் கிரிப்டோவுக்கு மாற்றாக தனது கரின்சியின் டிஜிட்டல் பதிப்பை சீனா வெளியிட்டுள்ளது. அநேகமாக இந்த வழியைத்தான் இந்தியாவும் பின்பற்ற வாய்ப்புள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்தியாவில் டிஜிட்டல் வாலெட் நிறுவனங்கள், வங்கிகளின் பிரத்யேக செயலிகள் ஆகியவை அதிகரித்திருக்கின்றன. வங்கிகள் மற்றும் அரசால் கண்காணிப்பதற்கு எளிதானபோதும், இவற்றின் டிஜிட்டல் மோசடிகளை தடுப்பது சைபர் போலீஸாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில் எந்த ஒழுங்கிலும் உடன்படாத கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை அரசு ரசிக்கவில்லை.

அண்மையில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம், ஒழுங்குமுறை அற்ற கிரிப்டோ பரிவர்த்தனைகளால் கருப்பு பணம் மற்றும் பயங்கவரவாதச் செயல்களுக்கான பணப்புழக்கம் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தது. மேலும், பயங்கரவாதிகள், கருப்புப் பண முதலைகளை முடக்குவது என்ற நோக்கத்துக்காக பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்த அரசு, இவையிரண்டுக்கும் பிரதான இடம்தரும் கிரிப்டோ கரன்சியை இத்தனை நாள் விட்டுவைத்திருந்ததே ஆச்சரியம்.

பிளாக்செயின் அற்புதங்கள்

அதே சமயம், உலகின் போக்கிலிருந்து விலகி நிற்பதும், அறிவியல் முன்னேற்றங்களில் பின் தங்குவதும் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். இந்த கிரிப்டோ பரிமாற்றத்துக்கு அடிப்படையான பிளாக்செயின் தொழில்நுட்பம், எதிர்காலத்துக்கான நல்வாய்ப்புகளையும் பொதிந்து வைத்திருக்கிறது. கிரிப்டோ பரிவர்த்தனைக்கு அடிப்படையான பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகிராஃபி தொழில்நுட்பங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தப்போகின்றன. அவற்றின் ஆரம்ப அலைக்கான தடுமாற்றங்களே தற்போது நிகழ்ந்து வருவதால், அதன் அங்கமான கிரிப்டோ வளர்ச்சியை முழுதுமாக புறக்கணித்துவிட முடியாது.

சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பான பணப் பரிமாற்றம், ஆட்கடத்தல் தடுப்பு என அனுகூலங்கள் அத்தனையையும் பிளாக்செயின் அள்ளித் தரும். இப்படி டார்க்நெட்டின் சாபங்களாக நாம் பார்ப்பவை அனைத்தையும், பிளாக்செயின் மூலமாக வரங்களாகவும் பெறலாம். ஒரே தொழில்நுட்பம் என்றபோதும் அதை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார் என்பதில், அதனுடைய மற்றும் நமது எதிர்காலம் அமைந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in