
உயர்ந்துவரும் பாமாயில் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, பல்வேறு வரிகளை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு இன்று(பிப்.13) முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச அளவில் பாமாயில் விலை உயர்ந்து வருகிறது. இதனை எதிரொலிக்கும் வகையில் இந்தியாவிலும் பாமாயில் விலை அதிகரித்து வருகிறது. சமையல் பொருளான எண்ணெய் வகைகளின் விலை உயர்வு நேரடியாக சந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
வீட்டு உபயோகத்துக்கு அப்பாலும், உணவகங்கள் உட்பட பலவகையிலும் எண்ணெய் ரகங்களின் விலை உயர்வு நேரடியாக மக்களின் வாங்கும் திறனை பாதிக்கக்கூடியவை. முன்னதாக சூரியகாந்தி எண்ணெயின் சர்வதேச விலை உயர்வைஅடுத்து, பல்வேறு வரிகளை குறைத்ததன் மூலம் இந்தியாவில் அதன் விலையை மத்திய அரசு குறைக்க ஏற்பாடு செய்தது.
அந்த வரிசையில், கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைக்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பு என்பது 8.25 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய மறைமுக வரிகள் வாரியம் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் வேளாண் செஸ் வரியானது 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுகிறது. இந்த வரிகள் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
பாமாயிலின் உள்நாட்டு உற்பத்தியைவிட தேவை அதிகமாக இருப்பதும், இந்த தேவையானது வருடந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், இறக்குமதியின் தேவையும் உயர்ந்து வருகிறது. இவை பாமாயிலின் விலை உயர்வில் தாக்கம் செலுத்தி வருகின்றன. எனவே சமையல் எண்ணெய் ரகங்களின் விலையை குறைக்கும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, பாமாயில் மீதான வரிகள் குறைக்கப்பட்டு, தற்போதைக்கு உயரும் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.