ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள்: தவிக்கும் தஜிகிஸ்தான்!

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள்: தவிக்கும் தஜிகிஸ்தான்!

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் இதர நட்பு நாடுகளும் அறிவித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் ரஷ்யாவின் செலாவணியான ரூபிள் தனது மதிப்பை ஒரே நாளில் 30 சதவீதம் இழந்தது. அது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிவருகின்றன.

தொடர்பே இல்லாமல் பாதிக்கப்படும் நாடுகள்

பெருந்தொற்றுக் காலத்தில் அரசுகள் அறிவித்த பொதுமுடக்கத்துக்குப் பிறகு கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதைப் போன்ற சூழல் ரஷ்யாவிலும் அதன் நட்பு நாடுகளிலும் நிலவுகிறது. தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொருளாதார பாதிப்புகளை இவை நேரடியாக ஏற்படுத்திவருகின்றன.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் என்ன பிணக்கு, ஏன் ரஷ்யா போரில் ஈடுபடுகிறது, நாம் யாருக்கு ஆதரவு என்று எதுவுமே புரியாவிட்டாலும் வேலை போய்விட்டது, விலைவாசி உயர்ந்துவிட்டது, அவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன, வாங்கும் ஊதியத்துக்கு முன்பைப் போல வாங்கிச் சாப்பிட முடியாது என்பது மட்டும் கடந்த ஐந்தாறு நாட்களிலேயே இந்த நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது. இது எத்தனைக் காலம் தொடரும், எப்போது முடியும், முடிந்தாலும் மீண்டும் பழைய நிலை வருமா என்பதெல்லாம் தெரியாமல் அவர்கள் பரிதவிக்கிறார்கள்.

ஊதியம் குறைப்பு

தஜிகிஸ்தானின் செலாவணி சோமானி என்று அழைக்கப்படுகிறது. ரூபிளின் செலாவணி மாற்று மதிப்பு சரிந்துவிட்டதால் தஜிகிஸ்தானில் வேலை செய்வோர் முன்னர் வாங்கிய ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு வெட்டப்பட்டுவிட்டது. இந்த ஊதியம் கடந்த மாதம் இருபத்து நான்காவது நாள் வரையில் - அதாவது தாக்குதல் தொடங்கப்படாததால் இயல்பான காலமாகக் கருதப்பட்டு ஊதியம் கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்த ஊதியத்தையும் வழங்கும்போது குறைத்துவிட்டார்கள். அடுத்த மாதம் ஊதியம் கிடைக்குமா, இன்னும் எவ்வளவு குறைப்பார்கள், அதற்குப் பிறகு வேலை இருக்குமா, எந்த மாதிரி வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்ற கவலைகள் மக்களுக்கு ஏற்பட்டு வருகின்றன. அத்தியாவசியமான செலவுகளைக் குறைக்க முடியாது. விலைவாசி உயர்ந்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு
ஏற்பட்டால் இப்போதைவிட அதிகமாக வேலை செய்து, ஊதியத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் இன்னொரு வேலைக்கும் செல்ல வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். அதற்கு ஒரு வேலை போதாது, இரு வேலைகள் செய்தால்தான் முடியும். குழந்தைகளின் படிப்புச் செலவு, வீட்டு வாடகை, காய்கறி, பால், உணவு ஆகியவற்றுடன் மருத்துவச் செலவுக்கும் இனி அதிகம் தேவைப்படும் என்று ஏழைகளும் நடுத்தர மக்களும் கவலைப்படுகிறார்கள்.

தஜிகிஸ்தான் என்ற நாட்டின் மக்கள் தொகை 95 லட்சம். அதற்கு ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா ஆகியவை பக்கத்து நாடுகள், தலைநகரம் துஷான்பே. தஜிகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யா மூலம்தான் – அதாவது அங்கு சென்று பணிபுரிவதால்தான் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான தஜிக்குகள் ரஷ்யாவிலும் ரஷ்யாவின் நட்பு நாடுகளிலும்தான் வேலை செய்கின்றனர். ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் வேலையிழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். கட்டிட கட்டுமான வேலைகள், எண்ணெய் துரப்பணம் மற்றும் விநியோகம், இயற்கை எரிவாயு அகழ்வு – விநியோகம் ஆகிய பணிகள் நின்றுவிட்டன. கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் நிச்சயமற்ற நிலை காரணமாக ஆட்குறைப்புகளைத் தொடங்கிவிட்டன. இருப்பவர்களுக்கும் ஊதிய வெட்டு நிச்சயம் என்பது உணர்த்தப்பட்டுவிட்டது. மாதம் 35,000 முதல் 45,000 ரூபிள்கள் வரை சம்பாதித்த ஏராளமானோர் வேலையும் வருமானமும் இழந்து வருகின்றனர்.

மேலும் மேலும் அடி

தஜிகிஸ்தானில் ஒரு குடும்ப வருமானம் சராசரியாக மாதத்துக்கு 250 அமெரிக்க டாலர்கள். ஜிடிபி என்று பார்த்தால் வங்கதேசத்தில் பாதி தான். சோவியத் ஒன்றியம் பிளவுபட்டதற்குப் பிறகு தடுமாறிய மத்திய ஆசிய குடியரசு நாடுகளின் தொழிலாளர்கள் சமீபகாலமாகத்தான் ரஷ்யாவில் கிடைத்த வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். இதனால் அவர்களுடைய குடும்ப வருவாய் சற்றே மேம்பட்டது. தஜிகிஸ்தானின் மொத்த மக்களில் 30 சதவீதம் பேர் ரஷ்யாவில் வேலைசெய்து அனுப்பும் பணத்தில்தான் எஞ்சிய 70 சதவீதம் பேர் வயிறாரச் சாப்பிடுகின்றனர். ஆனால் கோவிட் பெருந்தொற்றால் முதலில் நேரடியாக பாதிக்கப்பட்ட இம்மக்கள் பிறகு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா அறிவித்த கடுமையான நிபந்தனைகளால் வேலை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டனர். அதளால் 2021-ம் ஆண்டிலேயே 9 மாத காலம் வருவாயில் பாதியை இழந்தனர்.

போர் முடிவுக்கு வரட்டும்!

மேற்கத்திய நாடுகளின் தடை நடவடிக்கைக்குப் பிறகு பங்குச் சந்தைகளை மூட உத்தரவிட்டது ரஷ்ய அரசு. அதே போல செலாவணி மாற்றுச் சந்தையும் மூடப்பட்டது. இதனால் அதிகாரபூர்வமாக ரூபிளின் மாற்று மதிப்பு ஓரளவுக்குத்தான் சரிந்தார் போலத் தோன்றினாலும் கள்ளச் சந்தையில் ரூபிளை செலாவணி முகவர்கள் வாங்க மறுக்கின்றனர். கோதுமை, பார்லி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. பல பண்டங்கள் விநியோகச் சங்கிலி அறுபட்டுவிட்டதால் கிடைக்காமல், பற்றாக்குறையாகி விட்டன.

பெட்ரோலிய எரிபொருட்களை ஐரோப்பாவுக்கே ரஷ்யாதான் வழங்கி வந்தது என்றாலும் இப்போது அந்த நாட்டிலேயே நாணய மாற்று மதிப்பு சரிவு காரணமாகவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் காரணமாகவும் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தானிலும் இதே நிலைமைதான். உக்ரைனில் விரைவாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என்றே இந்த நாடுகளின் மக்கள் வேண்டுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in